மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்: நாளை மறுநாள் திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை (ஏப்ரல் 25) இரவு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஏழாம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்த கங்காளநாதர்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஏழாம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்த கங்காளநாதர்.

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை (ஏப்ரல் 25) இரவு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. 

மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை கங்காளநாதர் மாசி வீதிகளில் எழுந்தருளினார். 

காலையில் சுவாமி, பிரியாவிடையுடன் தங்கச் சப்பரத்தில் கோயிலுக்குள் மீனாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அம்மன் மீனாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். 

இன்று பட்டாபிஷேகம்: புதன்கிழமை காலையில் சுவாமி, பிரியாவிடை தங்கப் பல்லக்கிலும், அம்மன் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளுகின்றனர். அங்கு ஊடல் லீலை நடைபெறும். பின்னர் கோயிலில் இருந்து கீழ சித்திரை வீதி, தெற்காவணி மூலவீதி, நேதாஜி சாலை, மேலமாசி வீதியில் உள்ள ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி அருள்பாலிக்கின்றனர். 

அங்கிருந்து மாலை 3 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி நேதாஜி சாலை வழியாக கோயிலில் அம்மன் சன்னதியில் எழுந்தருளுவர்.

அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளிய நிலையில், இரவு 7.40 மணிக்கு மேல் 8.04 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் சிறப்பு பூஜைக்குப் பின்னர் மீனாட்சியம்மன் திருக்கரங்களில் இருந்து வைரக்கல் பதித்த செங்கோலை கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் பெற்றுக்கொள்வார். பின்னர் மேள தாளம் உள்ளிட்ட சகல மரியாதை விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை தக்கார் ஒப்படைப்பார். பின்னர் சுவாமி, பிரியாவிடை மற்றும் செங்கோலுடன் அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் எழுந்தருளுவர். 

திக் விஜயம்:

விழாவின் ஒன்பதாம் நாளான வியாழக்கிழமை காலை மரவர்ணச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டபத்தில் எழுந்தருளுவர். இரவு இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் வடக்கு மாசி வீதி- கீழமாசி வீதி சந்திப்பில் எழுந்தருளியதும் திக் விஜயம் நடைபெறும். 

இந்திர விமானத் தேரில் சுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் வேடமணிந்த சிறுவர், சிறுமி வில்லை ஏந்தி அம்பு எய்வது போன்ற பூஜைகள் நடைபெறும். பின்னர் மீனாட்சிக்கான சீர்வரிசை பக்தைகள் ஏந்தி வர கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு சுவாமி, அம்மன் ஆகியோர் கோயிலுக்குள் எழுந்தருளுகின்றனர்.

திருக்கல்யாணம்:

விழாவின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் சுவாமி, அம்மன் மேல - வடக்காடி வீதிகள் சந்திப்பில் அமைக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் எழுந்தருளுவர். அங்கு திருக்கல்யாணம் நடைபெறும். மாலை அம்மன் அனந்தராயர் பூப்பல்லக்கிலும், சுவாமி, பிரியாவிடை யானை வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளுவர். 

தேரோட்டம்:

விழாவின் பதினோறாம் நிகழ்வாக தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. இதையடுத்து பனிரெண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவடைகிறது. 
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன், இணை ஆணையர் என். நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com