ஒரு நாடக விழாவின் வயது 373! 

செல்போன், இண்டர்நெட், வாட்ஸ் அப் என கணினி மயமாக கிராமங்கள் மாறிவிட்ட நிலையிலும்,
ஒரு நாடக விழாவின் வயது 373! 

செல்போன், இண்டர்நெட், வாட்ஸ் அப் என கணினி மயமாக கிராமங்கள் மாறிவிட்ட நிலையிலும், தஞ்சை மாவட்டத்தில் சாலியமங்கலம் கிராமத்தில் நடக்கும் நரஸிம்ம ஜெயந்தி உத்சவமும் அதனை ஒட்டி அரங்கேறும் பாகவதமேள நாட்டிய நாடகங்களும் மட்டும் மாறவில்லை. ஒரே புராண வரலாற்றை, அதே வசனம், பாடல்களுடன், வேற்றுமொழியில் (தெலுங்கு) அலுப்புத்தட்டாமல் கடந்த 372 வருடங்களாக தொய்வில்லாமல் எந்தவிதமான தடையுமின்றி பாகவதமேளா நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டு வந்திருப்பது வியப்பாக இருக்கிறது அல்லவா!

'பாகவதமேளம்' - வரலாற்றுப் பெருமை

கி.பி.16ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான அச்சுதப்ப நாயக்கர் தன் ஆட்சிக்காலத்தில் அந்தணர்களை இவ்வூரில் குடியமர்த்தி அவர்களுக்கு மானிய நிலங்கள் அளித்து நமது பண்பாட்டினையும் கலாசாரத்தையும் காத்திட பாகவதமேள நாட்டிய நாடகங்களை நடத்திட ஊக்குவித்தார். 

நம் மரபு சார்ந்த கலைவடிவங்களில் நாட்டிய நாடகமான பாகவதமேளாவும் ஒன்று. இசை, நாட்டிய நாடகம் என்பதால் பல பரதநாட்டிய அபினயனங்களும், கர்நாடகவின் யக்ஷ கானம், ஆந்திராவின் குச்சிப்புடி, கேரளாவின் கதகளி ஆகிய நாட்டிய அம்சங்களும் இதில் கலந்துள்ளன. அவரது நினைவினைப் போற்றும் வகையில், இவ்வூருக்கு அச்சுதபுரம் என்னும் பெயரும் ஏற்பட்டதாக ஒரு செய்தியும் உண்டு. மேலும் இந்நாட்டிய நாடகங்களில் பயன் படுத்தப்படும் கீர்த்தனைகளிலும் 'அச்சுதபுரம்' என்ற முத்திரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சைத் தரணியில் சாலியமங்கலம், மெலட்டூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, நல்லூர், தேப்பெருமாள் நல்லூர் ஆகிய கிராமங்களில் இந்த கலை வேரூன்றி நடந்து வந்திருக்கிறது. தற்போது சாலியமங்கலம், மெலட்டூர், தேப்பெருமாள் நல்லூர் ஆகிய ஊர்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. அதிலும் சாலிய மங்கலத்தில் நடத்தப்படும் பாகவதமேளா நாடகங்கள் காலத்தால் பழமையானவை, தொன்மையானவை என அறியப்படுகின்றது.

சாலியமங்கலம் கிராமத்தில் பின்பற்றப்படும் பாணி

சாலியமங்கலம் கிராமத்தில் வாழ்ந்த பரதம் பஞ்சநத பாகவதர் என்பவர் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பாண்டித்யம் பெற்று விளங்கியதுடன் பரத சாஸ்திரத்திலும் விற்பன்னராக விளங்கினார். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ பக்த பிரகலாதா, விப்ரநாராயணா, ருக்மாங்கதா, ருக்மணிகல்யாணம், சீதாகல்யாணம் ஆகிய நாட்டிய நாடகங்களை இயற்றினார். இந்நாடகங்களுள் ஸ்ரீ பக்தபிரகலாதா மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மேற்கூறப்பட்ட ஐந்து நாடகங்கள் பல வருடங்களுக்கு முன் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி மற்றும் நரஸிம்ம ஜெயந்தி விழாவினை ஒட்டி இரண்டு தடவை நடத்தப்பட்டவாகவும் நிதி வசதி மற்றும் சில செளகரிய, அசெளகரி காரணங்களினாலும் தற்போது நரஸிம்ம ஜெயந்தி விழா சமயம் மட்டும். ஸ்ரீ பக்தப் பிரஹலாதா மற்றும் ஸ்ரீ ருக்மணி பரிணயம் ஆகிய இரு நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

நரஸிம்ம ஜெயந்தி விழாவின் தொடக்க நாளன்று நரஸிம்ம ஸ்வாமி பிம்பத்திற்கு (அத்திமரக்கட்டையில் செய்தது) ப்ராணப்பிரதிஷ்டை என்னும் விசேஷ பூஜை அசுரசந்தியா கால (மாலை 6 மணிக்குள்) வேளையில் நடத்தப்படும். பின்னர் ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வசந்த மாலை சாற்றி இரவு 8 மணிக்கு கருடஸேவையில் வீதியுலா நடைபெறும். அக்ரஹார நடுவில் போடப்பட்டுள்ள விசேஷ பந்தலில் பெருமாளை ஏளப்பண்ணுவார்கள். 'தட்டுச்சுத்து' என்னும் பல சொல்லு கட்டுகள் அபிநயத்துடன் ஆடப்பட்டு தீபப்பிரதிட்சணம் நடைபெறும். 

பின்னர் இரவு 10 மணிக்கு ஸ்ரீ பக்த பிரஹலாதா நாட்டிய நாடகம் தொடங்கி இரவு முழுவதும் நடைபெறும். இந்நாடகத்தில் விடியற்காலை சுமார் 04.30 மணிக்கு ஸ்ரீ நரசிம்மவதாரமும் தொடர்ந்து ஹிரண்யகசிபுடன் வாக்குவாதம், யுத்தம் மற்றும் சம்ஹாரம் ஆகியவற்றுடன் சந்தியா காலமாகிய அதிகாலை 05.45 மணியளவில் நாடகம் ஸ்ரீ பிரகலாதா பட்டாபிஷேகத்துடன் முடிவடையும். இதில் நடைபெறும் சம்வாதங்கள் இந்நாடகத்திற்கு மகுடம் போன்றது. தத்ரூபமான நரஸிம்ம அவதாரக் காட்சியை சாலியமங்கலத்தில் காணும் பேற்றினைப் பெறலாம். 

கிராம மக்களின் அர்ப்பணிப்பு

இந்நாடகத்தில் பெண்பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடிப்பது சிறப்பு. ஸ்ரீ நரசிம்ம அவதார பாத்திரத்தை எற்பவர், ஒரு குறிப்பிட்ட கோத்ரத்தில் (கபி கோத்ரம்) பிறந்த குடும்பத்தினரை சேர்ந்தவராக இருப்பார். பல்வேறு கர்நாடக இசை ராகங்களில் அமைந்து கீர்த்தனங்கள் கையாளப்படுகின்றன. இவ்வூரில் வாழ்ந்து மறைந்து பெரியவர்கள் முக்கியமாக நடன காசிநாதன், அச்சுதபுரம் கீர்த்தனாசாரியர் சேதுராமபாகவதர், சுந்தரம் ஐயர் இன்னும் பல பெரியவர்கள் இந்நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டினை பெரிதும் ஊர்மக்கள் நினைவு கூறுகின்றனர். சமீபத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் (வருமானவரி அலுவலகத்தில் உயர் பதவி வகித்தவர்) தனது 93 வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் இந்நாடகத்தில் பங்கேற்று இளம் பிரயாத்தில் பிரகலாதனாகவும், பின்னர் லீலாவதியாக சுமார் 30 வருடங்களும், நரஸிம்ம சுவாமியாக 10 வருடங்களும் வேடமேற்றுப் அப்பாத்திரங்களுக்கு பெரிதும் மெருகூட்டியுள்ளார்.

இந்நாடகத்தில் பங்கேற்பவர்கள் பணிநிமித்தம் காரணமாக இந்தியாவில் மட்டுமல்ல அயல் நாட்டிலும் வசிக்கின்றனர். தங்கள் வருடாந்திர விடுமுறை நாளை நரஸிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சாலியமங்கலம் வருவதற்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. மேலும் சாலியமங்கல அக்ரஹார வாசிகளின் ஊக்கமும், உழைப்பும் நரஸிம்ம ஜெயந்தி விழா சிறப்புற நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். 

காஞ்சி மடாதிபதிகள் மற்றும் இசை வல்லுநர்கள் வருகை

காஞ்சி காம கோடி பீடத்தின் சங்கராச்சாரியர்களில் ஒருவரான கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடர்களில் ஒருவரான ஸித்தேந்திரயோகி என்பவருடன் சாலியமங்கலம் கிராமத்திற்கு வந்து, பிரகலாத சரித்திர நாடகத்தின் முடிவில் நரஸிம்ம பிம்பத்தை (Mask) அணிந்து கொண்டு நடத்தப்படும், தத்ரூப நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு களித்து அனுக்கிரகித்துள்ளார்கள். நரஸிம்ம சுவாமி இரண்யகசிபுடன் யுத்தம் செய்யும் காட்சியில் கையாளப்படும். பாடலின் கடைசி சரணத்தில் வரும் 'போதானந்த பரமனந்த நாத நாத நந்தயோகி' என்ற வரிகள் அதற்கான முத்திரையினைப் பதிப்பதாக உள்ளது. கடந்த மார்ச் 2017ல் காஞ்சி மடத்தின் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கிராமத்திற்கு விஜயம் செய்து இங்கு நடைபெறும் விழாவினைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்டு தொடர்ந்து இவ்வுத்சவமும், மேளாவும் நடைபெற ஆசீர்வதித்துள்ளார்கள்.

சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்ரீதியாக ராஜ சுவாமிகளின் தாய்வழி பாட்டனார்களான கிரராஜகவி மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீ வெங்கடேச கவி ஆகியோர் சாலியமங்கலம் பாகவத மேளாவில் பங்கேற்று வந்ததாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.  அதற்கான ஆதார முத்திரைகள் பிரகலாத சரித்திர நாடகத்தில் கையாளப்படும் 'ஸ்தம்பஸோத்ரத்தில்' (பந்துவராளி ராகம்) காணலாம்.

இவ்வாண்டு நிகழ்ச்சிகள்

இவ்விதம் வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட சாலியமங்கலம் பாகவதமேளா இவ்வாண்டு  தொடர்ந்து 373ம் (கி.பி. 1645 - 2018)ஆண்டாக நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம பாகவதமேள பக்த சமாஜம் விரிவாகச் செய்துள்ளது. ஏப்ரல் 28 நரஸிம்ம ஜெயந்தியன்று மாலை 6 மணிக்கு ப்ராண பிரதிஷ்டை ஆராதனையும், முன்னோர்களால் தெலுங்கு மொழியில் செய்யப்பட்ட  பிரகலாதசரித்தர நாட வசனங்களை தமிழ் ஒலி பெயர்ப்பு இலக்கிய நூலாக  வெளியிடுதலும் நடைபெறுகின்றது. இரவு 8 மணிக்கு கருடஸேவையும் தொடர்ந்து 10 மணிக்கு பிரகலாத சரித்திரம் நாடகமும் நடைபெறும்.

மறுநாள் (29/4) விடியற்காலை ஸ்ரீ நரஸிம்ம அவதாரக் காட்சியும் அன்றிரவு 'ஸ்ரீருக்மணி பரிணயம்' பாகவதமேள நாட்டிய நாடகமும், ஏப்ரல் 30ம் தேதி காலை பாகவத சம்பிரதாயப்படி ருக்மணி கல்யாணமும், இரவு ஆஞ்சநேய உத்சவத்துடன் விழா நிறைவு பெறுகின்றது. முன்னதாக ஏப்ரல் 26, 27 தேதிகளில் ஸ்ரீ நரஸிம்மஸ்வாமி வசந்த மண்டபத்தில் கோவை ஸ்ரீ ஜெயராம பாகவதர் தலைமையில் அம்பத்தூர் சி.எஸ்.எம். சுப்பிரமணியன் அவர்கள் அபிநயத்துடன் ஸ்ரீராதா கல்யாண மகோத்சவம் நடத்துகின்றனர்.

வேண்டுகோள்

டெல்லி சங்கீத நாடக அகாடமி ஆதரவு இருந்த போதிலும்  இந்த தெய்வீக் கலை தொடர்ந்து நடைபெற பக்தர்களின் பேராதரவும் தேவையாக உள்ளது. விட்டுப் போன இதர நாடகங்களுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். மேலும் விழாவிற்கு வரும் அன்பர்களுக்கு ஆகார வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாண்டு விழாவிற்கு பக்தர்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை நாளில் உள்ள தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பரம பாகவதோத்தமரான ஸ்ரீ பிரகலாத ஆழ்வார்களின் சரித்திர நாடகத்தை பார்க்க வைக்க வேண்டும். நமது பண்பாடு, பக்தியின் மேன்மை இவற்றையெல்லாம் எளிதில் புரிய வைக்க இது ஒரு அரிய சந்தர்ப்பமாகும். ஸ்ரீ லட்சுமிநரசிம்மரின் அனுக்கிரகத்திற்கு பாத்திரராகலாம்.

இருப்பிடம்

தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் (திருவாரூர் வழி) தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ தொலைவில் சாலியமங்கலம் உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து டவுன்பஸ் வசதி உள்ளது.

சமாஜத்தின் முகவரி மற்றும் தகவல் தொடர்பிற்கு

ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம பாகவதமேள பக்த சமாஜம்,

1/26, அக்ரஹாரம், சாலியமங்கலம் - 613504,

பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

தொடர்பிற்கு: ஸ்ரீ வெங்கடகிருஷ்னன்: 9443674366 மற்றும் ஸ்ரீ ஜானகி ராமன் - 9444061325

தகவல்: எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com