மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலம்; இன்று திக் விஜயம்; நாளை திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இரவு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மாசி வீதிகளில் செங்கோலுடன் வலம் வந்த அம்மனை லட்சக்கணக்கானோர் தரிசித்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலம்; இன்று திக் விஜயம்; நாளை திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இரவு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மாசி வீதிகளில் செங்கோலுடன் வலம் வந்த அம்மனை லட்சக்கணக்கானோர் தரிசித்தனர்.
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
 இந் நிலையில், புதன்கிழமை காலை திருக்கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் வெள்ளிச் சிம்மாசனத்தில் கீழச்சித்திரை வீதி, தெற்காவணி மூலவீதி, நேதாஜி சாலை வழியாக மேலமாசி வீதி கட்டுச்செட்டி மண்டகப் படியில் எழுந்தருளினர்.
 அங்கிருந்து மாலையில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி திருக்கோயிலில் உள்ள அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கான பட்டாபிஷேக பூஜைகள் தொடங்கின. அம்மனுக்கு வைர மூக்குத்தி உள்ளிட்ட உயர்ந்த கற்கள் பதித்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
 மேலும் பட்டாபிஷேகத்துக்கான வைரக் கிரீடம், செங்கோலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. வேம்பு இலை சூட்டப்பட்ட செங்கோலை இரவு 7.50 மணிக்கு மேளதாளம் முழங்க பெற்றுக் கொண்ட அவர், சகல விருதுகள், மரியாதையுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிராகாரத்தை வலம் வந்தார். அப்போது திருக்கோயில் பணியாளர்கள் அமைப்பு சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிராகாரம் சுற்றி வந்த அவர் மீண்டும் அம்மனிடம் செங்கோலை ஒப்படைத்தார். சரியாக இரவு 7.50 மணி முதல் 8.04 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தேறியது. அதன்பின்னர் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் வீதியுலா வந்தனர். பட்டாபிஷேகத்துடன் அம்மனைத் தரிசிக்க மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
 பட்டாபிஷேகத்தில் கோயில் இணை ஆணையர் என்.நடராஜன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் தியாகராஜர் கல்லூரித் தலைவர் உமா கண்ணன், தியாகராஜர் கல்லூரி செயலர் ஹரி தியாகராஜன், மாநகர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 திக் விஜயம்: மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தை அடுத்து வியாழக்கிழமை காலை மர வர்ணச் சப்பரத்தில் சுவாமி,அம்மன் மாசி வீதிகளில் உலா வருகின்றனர். திருக்கோயிலில் உள்ள சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருள்கின்றனர். மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருள்கின்றனர். இரவில் வடக்கு, கீழ மாசி வீதி சந்திப்பில் திக் விஜயம் நடைபெறுகிறது. அம்மன், சுவாமி வேடமணிந்த குழந்தைகள் அம்பு எய்து போர் புரிவது போன்ற பூஜைகள் நடைபெற்ற பின்னர் அம்மன், சுந்தரேசுவரரிடம் காதல் வயப்படும் பூஜைகள் நிகழ்த்தப்படும். பின்னர் மீனாட்சி சீர்வரிசைகளை பக்தர்கள் சுமந்து செல்ல சுவாமி, அம்மன் திருக்கோயிலுக்கு எழுந்தருள்வர்.
 திருக்கல்யாணம்: விழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்காக கோயில் உள்ளே மேல-வடக்காடி வீதிகள் சந்திப்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அமர்ந்து தரிசிக்க பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com