சித்திரைப் பெருவிழா தேரோட்டம்

திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் இடங்கொண்ட வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா
சித்திரைப் பெருவிழா தேரோட்டம்

திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் இடங்கொண்ட வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாள் நடைபெற்று வருகிறது. இதில் 7ஆம் நாள் வியாழக்கிழமை பஞ்சரத தேர்த் திருவிழா விமர்ச்சியாக நடைபெற்றது.
 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் வட்டம், உருத்ரகோட்டி பட்சிதீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்கழுகுன்றத்தில் உள்ள திரிபுர சுந்தரியம்மை இடங்கொண்ட வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. முன்னதாக, இவ்விழாவையொட்டி 19ஆம் தேதி மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
 அதன் முக்கிய நிகழ்வாக 3ஆம் நாளில் 63 நாயன்மார்கள் உற்சவம், 7ஆம் நாள் உற்சவமான பஞ்சரத உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு உற்சவங்களுக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்வர். தேர்த் திருவிழாவையொட்டி சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
 இதையடுத்து உற்வச மூர்த்திகளான சிவன், திரிபுரசுந்தரி அம்மன், முருகன் வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கடவுளர் சிலைகள் கோயிலில் இருந்து புறப்பட்டு மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டன.
 தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரர் கோயிலில் எதிரில் இருந்து முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. தேர் நிலையில் இருந்து சிவபெருமான் அமர்ந்திருந்த பெரிய தேரை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர்குமரன், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா ஆறுமுகம் உள்ளிட்ட பிரமுகர்களும் பக்தர்களும் வடம்பிடித்து இழுத்தனர்.
 அதைத் தொடர்ந்து, திரிபுரசுந்தரி அம்மன் தேர், முருகர் வள்ளி, தெய்வானை தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய ஐந்து தேர்களும் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து, பிற்பகலில் நிலையை வந்தடைந்தன. கோயிலில் தொடங்கி கிரிவலப் பாதை, நான்கு மாட வீதிகள் என வழி நெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மேலும், தண்ணீர் பாக்கெட், நீர்மோர், குளிர்பானம், பாதாம் பால் உள்ளிட்ட உணவு வகைகளும் அளிகக்கப்பட்டன.
 தேர்த் திருவிழாவில் திருக்கழுகுன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் ள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை தரிசித்து, வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ஆ.குமரன், கோயில் தக்கார் கோ.எஸ்.நற்சோணை, கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் விஜி உள்ளிட்ட கோயில் பணியாளர்களும், சிவாச்சாரியார்களும் செய்திருந்தனர்.
 குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில்...
 ஸ்ரீபெரும்புதூர், ஏப். 26: நவக்கிரகத் தலங்களில் ராகு ஸ்தலமாகக் கருதப்படும் குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நவக்கிரகத் தலங்களில் ராகு ஸ்தலமாகக் கருதப்படும், இந்தக் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 விழாவின் 7ஆவது நாளான வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, அதிமுக மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் திருநாகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு சுமார் 400 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 குடியாத்தம்
 கருப்புலீஸ்வரர் கோயில்...
 குடியாத்தம், ஏப். 26: குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவர், உற்சவர், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர்கள் அமர்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
 தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயிலில்...
 அரக்கோணம், ஏப். 26: தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய விழாவின் ஒருபகுதியாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com