வாழ்வில் தனிமனித மாற்றம் மிகவும் முக்கியமானது! அதற்கு இதுதான் நல்ல உதாரணம்!!

சுத்தம் பேணுவதில் தனி மனிதன் நடத்தைச் சரியான திசையில் செயல்பட்டால் தான் தூய்மையான சூழலை உருவாக்க முடியும்..
வாழ்வில் தனிமனித மாற்றம் மிகவும் முக்கியமானது! அதற்கு இதுதான் நல்ல உதாரணம்!!

சுத்தம் சோறுபோடும் என்பது பழமொழி.
இப்போது பழைய மொழியாகிவிட்டது.

மாற்றம் தனி மனிதனின் வாழ்க்கையில் இருந்து துவங்க வேண்டும்! அப்போதுதான் எந்த மாற்றமும் மகத்துவம் பெறும். அந்த வகையில் தனி மனித மாற்றம் ஏற்பட வேண்டும்.

சுத்தம் பேணுவதில் தனி மனிதன் நடத்தைச் சரியான திசையில் செயல்பட்டால் தான் தூய்மையான சூழலை உருவாக்க முடியும். விசேஷ நாட்களில் கோயில்களில் மக்கள் பிளாஸ்டிக் கேரிபேக், பேப்பர் தட்டுக்கள், எண்ணெய் பாக்கெட்டுகள், சிறிய விளக்கில் அதிக எண்ணெய்யை ஊற்றி வழிய விடுதல், எரிந்த தீ குச்சிகள் வீசுவது எண்ணெய் கைகளை ஆங்காங்கே துடைத்தல் போன்ற காரியங்கள் செய்வதால் கோயிலை பராமரிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. 

இவை பக்தர்களால் ஏற்படுவது ஒருபுறம். இதுமட்டுமல்லாது, மாலைகள், பழைய வஸ்திரங்கள், அபிஷேக பொருட்கள், பயன்படுத்திய பூக்கள் போன்றவை தரும் குப்பைகள் மறுபுறம். சில ஆலயங்களில், பயன்படுத்திய அகல் விளக்குகள் அதிகம் குவிந்து கிடக்கிறது. இருக்கும் அகலில் தங்களது எண்ணெய்யை ஊற்றலாம். அல்லது அதிகப்படி எண்ணெய்யைக் கோயில் ஊழியர்களிடம் கொடுத்தால், தேவைப்படும்போது பயன்படுத்த உதவும்.

ஆலய நிர்வாகமும், பொது மக்களும் சேர்ந்து சுத்தமாக வைத்திருக்கும் ஓர் ஆலயம், காட்டுமன்னார் கோயில் அருகிலுள்ள, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இவ்வாலயம் மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாற்றுடன் தொடர்புடையது. இவ்வாலயத்தில் ஆங்காங்கே குப்பை வாளிகள், குப்பைத் தொட்டிகள் வைத்து, குப்பைகளைச் சேகரித்து, மக்கும் - மக்காத குப்பை எனத் தரம் பிரித்து உபயோகப்படுத்துகிறார்கள். தூண்களில் கை துடைக்கும் துணிகள் தொங்க விட்டுள்ளார்கள். சன்னதிகள் தோறும் தட்டுக்களில் மட்டும் விளக்கேற்றச் சொல்கிறார்கள்.

உடலுக்கு ஊறு விளைவிக்கும் சூடம் மற்றும் தரமற்ற ஊதுபத்திகள் ஏற்றுவதில்லை. நெய் தீபம், இலுப்பை எண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள். பாடல் ஒலிபரப்பின் இடையில் கோயிலை சுத்தமாக வைக்க உதவுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வூரிலுள்ள விஜயன் என்பவர், இத்திருக்கோயிலை தம்கண் போல் பாதுகாக்கிறார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே திருக்கோயில்களை தூய்மையாக வைத்திருப்பது சாத்தியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com