சகல சௌபாக்கியங்கள் அருளும் தில்லை காளி கோயில்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது
சகல சௌபாக்கியங்கள் அருளும் தில்லை காளி கோயில்

தில்லைபுறத்திலமர் எல்லை மாகாளியே.....போற்றி   

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது இக்கோயில். கிபி 1229 மற்றும் 1278-க்கு இடைப்பட்ட காலத்தில் பல்லவ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. ஜடாவர்மன் சுந்தர பாண்டிய மன்னரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் காலத்தில் இருந்தே இங்குக் கோயில் இருந்துள்ளது. எனினும் தகவல்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கின்றன.

முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் உள்ளனர். நீண்ட மண்டபத்தின் இரண்டு புறமும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக அறைகள் உள்ளன. ராஜகோபுர வாயிலில் ஓர் கல்வெட்டு காணப்படுகிறது படத்தில் இந்தக் கல்வெட்டு உள்ளதைக் காணலாம்.

அனைவரும் அறிந்த கதையான சிவனுக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. கோபமுற்ற சிவபெருமான் பார்வதியைக் கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார். அவள் தாரகாசுரனை அழித்து உக்ர தேவதையாக நிற்கும் வேளையில், வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதைக் கண்ட காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்குச் சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை.

போட்டியின் போது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் போட்டியில் தோற்றுப் போய் தில்லையின் எல்லைக்குச் சென்று உக்ரதேவதையாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அனைத்துத் தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர். பிரம்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியைப் புகழ்ந்து வேதங்களை ஓதி அவளைப் பூஜிக்க அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி பிரம்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி ஆகி மேற்கு முகம் நோக்கி தில்லை அம்மனாக அமர்ந்தாள்.

ஆக..ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் உக்ர மாகாளியாக எட்டு கரங்களில் ஆயுதங்களைக் கொண்ட தில்லைகாளியாகவும், மேற்கு நோக்கிய சன்னதியில் சாந்தமான நான்முக பிரம்மசாமுண்டேஸ்வரியாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களுக்கு அருள் தருகிறார்.

காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனிய பூத, பிசாசு, பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து அருள் தருகிறார். சாந்தமான பிரம்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம், வீரம், அமைதி, உறுதி போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.

பண்டைய அரசர்கள் பலரும் போருக்குச் செல்வதற்கு முன்னரும், வெற்றிவாகை சூடிவந்த பின்னரும், அரசு சார்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகளின் போதும் முதலில் காளியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் காளியின் அருகில் போரில் வெற்றி அடைவதற்காக தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிரதானம் செய்யும் சிலைகள் உள்ளன. அவற்றில் வீரபெருமாள் என்பாரும் ஒருவர். காளியின் எதிர்புறம் உள்ள சுவற்றில் சோழ மன்னர்கள் வணங்குவது போன்ற சிலைகள் உள்ளன.

தில்லை காளியம்மனுக்கு தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. உடம்பு முழுவதும் குங்குமம் காப்பிடுதல் செய்யப்பட்டு வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் கருமை தீட்டப்பட்டுக் காட்சியளிக்கிறார். தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவள் உக்ரமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால் பலன் உண்டு.

இந்த ஆலயத்தில் உள்ள காளிசிலை விசுவாமித்திர மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், தனது யாகத்திற்கு தடையாய் இருந்த தாடகை என்னும் அரக்கியைக் கொன்ற காரணத்தினால் ராமர், லட்சுமணர்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம் செய்ய விரும்பிய விசுவாமித்திரர், காளிதேவியை பிரதிஷ்டை செய்து யாகத்தை நடத்தியதாக வரலாறு சொல்கிறது.

கருவறை கோட்டத்தில் நாகவைஷ்ணவியாகவும், நின்ற நிலையில் வீணைவாசிக்கும் அபிநயத்துடன் சர்வவித்யாம்பிகையாக ஒரு மாடத்திலும் உள்ளார். ஆண்டு தோறும் மாசி பவுர்ணமி திதியின் போது காலை 6 மணிக்கு சந்திரனும், பவுர்ணமியின் இரண்டு நாட்களுக்குப்பிறகு திருதியை திதியில் மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள் சூரியனும் அம்பிகையை சூரிய கிரணங்களால் வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு அமாவாசை இரவு நேரத்தில் காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

கோயில் நேரம் - காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com