இந்த வாரம் வெற்றியை பெறும் ராசிக்காரர்கள் யார்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 10 - ஆகஸ்ட் 16) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக..
இந்த வாரம் வெற்றியை பெறும் ராசிக்காரர்கள் யார்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 10 - ஆகஸ்ட் 16) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் வீண் அலைச்சல்கள் உண்டானாலும் முடிவு சாதகமாகவே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாசம் அதிகரிக்கும். நேர்மையான வழியிலிருந்து விலக மாட்டீர்கள். வருமானம் கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. 
  
உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளுவைச் சுமக்க நேரிடும். வியாபாரிகளுக்கு வார இறுதியில் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் சிறு முதலீடுகளில் ஈடுபட்டு வியாபாரத்தை விரிவு படுத்தலாம். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அதனால் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். உங்கள் பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடாமல் மனதை ஒருநிலை படுத்தவும்.

பரிகாரம்: வளசரவாக்கம் அருள்மிகு வேங்கட சுப்ரமண்யரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 10,11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் பெயர், புகழ் உயரும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். நெருங்கியவர்கள் உதவி செய்வார்கள். செயலில் வெற்றிகள் குவியும். உடன்பிறந்தோர் வழியில் சோதனைகள், கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வெளிநாட்டு பயணம் உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கொடுக்கப்பட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியமும் பெறுவீர்கள். வியாபாரிகள் சிறப்பான வழிகளில் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவுண்டு. விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி நன்றாக இருக்கும். கால்நடைகளாலும் பயன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும்.  அதை  பயன்படுத்திக் கொள்வது நல்லது. 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மதுரை மீனாட்சியை நினைத்து வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 10,12. 

சந்திராஷ்டமம்: இல்லை.


மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் மனவளமும் சீராகும். வீடு வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இல்லத்தில் முக்கிய நிகழ்ச்சியை நடத்த முற்படுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் எதிர்பார்த்த பலன் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். இதனால் அலுவலக வேலைகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு லாப நஷ்டம் இரண்டும் மாறிமாறி வரும். அடுத்தவர்களை சரியாகப் புரிந்துக் கொள்ளாமல் கடன் கொடுப்பது, கூட்டு சேர்வதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  

அரசியல்வாதிகளுக்கு வாய்ப்புகளும் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். இதனால் சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்  புகழைத் 
தக்க வைத்துக்கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். 

பரிகாரம்:  வேங்கட சுப்ரமண்யரை வணங்கி வர நலமுண்டாகும்.  

அனுகூலமான தினங்கள்: 11,12. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

செயல்களில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். தேவையில்லாத அலைச்சல்கள் மறையும். இறைவழிபாடு அதிகரிக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் இப்போது ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் வருமானம் வந்து கொண்டிருந்தாலும் செலவுகள் இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து  விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் முடித்து வெற்றி பெறுவீர்கள். மேலிடத்தின் கவனத்தைக் கவர்வீர்கள். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் குறைவாகவே காணப்படும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பொருளாதா நிலைமை நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 11,13. 

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

அடுத்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை பிரதிபலன் பார்க்காமல் செய்வீர்கள். அலைச்சல் தரும் வேலைகளை குறைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் அனைவரும் உங்களிடம் பாசமாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு புதிய தொழில்கள் அனுகூலத்தைக் கொடுக்கும். கடையை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். போட்டிக்கு தகுந்தாற்போன்று செயல்பட்டு லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். செல்வாக்கும் பணவரவும் உண்டாகும். கலைத்துறையினர் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவார்கள். பெண்மணிகள் சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் வீட்டிலுள்ளவர்களிடம் கோபப்படாமல் நடந்து கொள்வது நல்லது. மாணவமணிகள் கவனத்துடன் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம். 

பரிகாரம்: சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 10,13. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் இரட்டிப்பு லாபத்தைக் காண்பீர்கள். ஆச்சரியப்படத் தக்க மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். பழைய கடன்கள் வசூலாகும். ஒதுங்கிச்சென்றவர்கள் மீண்டும் நண்பர்களாக மாறுவார்கள். தொழில் சுறுசுறுப்பாக நடக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கருத்தை அறிந்து ஒத்துழைப்புடன் நடந்து கொள்வீர்கள். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புழு பூச்சிகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறையும்.

அரசியல்வாதிகள் மீது எதிர்கட்சியினர் வீண் அவதூறுகளை சுமத்த நினைப்பார்கள். எனவே எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சேமிப்பு விஷயங்களில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் சற்றுபின் தங்கிய நிலையில் இருப்பீர்கள். சீரிய முயற்சி செய்தால்தான் சராசரி மதிப்பெண்களையாவது பெறலாம்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 12,13. 

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வரும் லாபங்களில் கணிசமான தொகையினை சேமிக்க வழி பிறக்கும். செய்தொழில் சீராக நடக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். செய்யும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தூரப்பயணங்கள் மேற்கொள்வீர்கள். எந்த செயலையும் நிதானமாகவும் பதற்றப்படாமலும் செய்யவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலகிவிடுவீர்கள். வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். விவசாயப் பணிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் உடனே விலகிவிடும்.

அரசியல்வாதிளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். உங்கள் சொற்களுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினரின் விடா முயற்சியால் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு இது உகந்த காலம். தேர்வுக்குத் திட்டமிட்டு படிக்கவும்.

பரிகாரம்: அம்பாளை தரிசனம் செய்வது உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 11,14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எதிலும் பதற்றப்படாமல் நிதானமாகச் செயல்படவும். நன்றாகச் சிந்தித்தப்பிறகே ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டும். கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேட்டபிறகே புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிறையும். பணவரவு நன்றாக இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். எவரிடமும் வீண்வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் எந்தவிதப் பிரச்னைகளையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும் புகழும் வளரும். கலைத்துறையினருக்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.  சக கலைஞர்களே உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர். பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் படிப்பு விஷயத்தில் சிறப்பான முயற்சிகள் எடுப்பீர்கள். 

பரிகாரம்: இம்மையில் நன்மை தரும் சிவபெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 10,15. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

செயல்களைத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அனைவரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளவும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். பணவரவும் கூடும். வியாபாரிகள் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதமானாலும்  இறுதியில் வெற்றி உங்களைத் தேடிவரும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி ஓரளவு நன்றாக இருக்கும். போட்டிக்குத் தகுந்தாற்போன்று சந்தையில் விற்பனை செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு பணவரவு சற்று குறைவாகவே இருக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் போடுவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 12,15. 

சந்திராஷ்டமம்: 10,11.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தெளிவுகள் பிறக்கும். பக்குவமாகப் பேசி நண்பர்களை வசீகரிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிய வீட்டிற்கு மாறும் காலமிது. ஆன்மிகத்தில் உறுதியுடன் ஈடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். செயல்களில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நல்ல முறையில் நடக்கும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு பணிகள் நன்றாக முடியும். விளைபொருள்களின் விற்பனையில் லாபம் தென்படும்.

அரசியல்வாதிகள் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். கட்சி விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். 

பெண்மணிகளின் பெரியவர்களின் ஆதரவுடன் குடும்பத்தில் பீடு நடைபோடுவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்கூட்டியே அக்கறை காட்டினால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: பைரவரை வணங்கிவர, நலங்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 11,15. 

சந்திராஷ்டமம்: 12,13.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் நன்றாக இருக்கும். சுபகாரியங்களுக்கு செலவு செய்வீர்கள். தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பி வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் சிறிய சச்சரவுகளும் வாக்குவாதங்களும் உண்டாகும். கோபத்தைக் குறைக்கவும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்துகொள்வீர்கள். பணவரவும் அதிகரிக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்துப் பலன் பெறுவீர்கள். கூட்டாளிகள் மதிப்பளித்து நடந்துகொள்வார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு மேலும் பலன் பெறலாம். 

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்துகொள்ளவும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் முழுமையாக கிடைக்காது. சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகளுக்கு படிப்பில் சோதனைகள் ஏற்பட்டாலும் மதிப்பெண்கள் குறையாது. 

பரிகாரம்: பார்வதி தேவியை தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 13,16.

சந்திராஷ்டமம்: 14,15.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். பொருளாதார நிலைமை மேன்மையடையும். பொருள் சேர்க்கை அற்புதமாக இருக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சி வெற்றி கொடுக்கும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர் செய்வதன் மூலம் லாபத்தை அள்ளலாம். 

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். முக்கிய பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையை தேடிப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் ஸ்ரீ ராமரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com