நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆக.11-ல் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா இம் மாதம் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன்...
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா இம் மாதம் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சூரியன் அருளால் கீரனூரில் பிறந்தவர் கருவூர் சித்தர். மெய்ஞ்ஞானியாகத் திகழ்ந்த அவர், சிவபெருமான் தலங்களுக்கெல்லாம் சென்று நல்வரங்கள் கேட்டுப் பெற்று திருநெல்வேலியை அடைந்தார். நெல்லையப்பரை தரிசிக்க வந்த வேளையில் சுவாமியிடம் இருந்து மறுமொழி ஒன்றும் கிடைக்காததால் வெகுண்ய அவர், ஈசன் இங்கு இல்லை; அதனால் இங்கே எருக்கு எழ என்று சாபமிட்டு மானூர் சென்றடைந்தார்.

பின்னர் நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல நாளில் அதிகாலையில் மானூருக்குச் சென்று சித்தருக்கு காட்சி கொடுத்துவிட்டு திருநெல்வேலி திரும்பினார். அதன்பின்பு சித்தர், நெல்லைக்கு வந்து ஈசன் இங்கே உண்டு; அதனால் எருக்கு அற்றுப்போக என்று மொழிந்தார். அதன்படி ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுக்கான விழா இம் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது. பகல் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 4 ஆம் திருநாளான இம் மாதம் 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருள்வர். பஞ்சமூர்த்திகளுடன் திருநெல்வேலி நகர் நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா நடைபெறும்.

இம் மாதம் 19 ஆம் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் திருநெல்வேலி நான்கு ரதவீதிகளிலும் வீதியுலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோயிலை போய்ச் சேருவார். இம் மாதம் 20 ஆம் தேதி இரவு 1 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரவருணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா கடந்து மானூர் சென்றடைவர்.

இம்மாதம் 21 ஆம் தேதி மானூர் அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயிலில் வைத்து கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளித்து சாபவிமோசனம் நிவர்த்தி செய்தல் காலை 7.15 மணி முதல் 8.15 மணிக்குள் நடைபெறும். அப்போது வரலாற்று புகழ் மிகுந்த புராணப்பாடல் பாடப்பெற்ற ஆவணி மூல மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா.ரோஷினி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com