ஏழுமலையானுக்கு க்ஷீராதிவாச திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையானுக்கு புதன்கிழமை க்ஷீராதிவாச திருமஞ்சனம் நடைபெற்றது.
கோபுர கலசங்களுக்கு கண்ணாடி பிம்பத்தை பார்த்து அபிஷேகம் செய்த அர்ச்சகர்கள். (வலது) ஏழுமலையான் கோயில் முன் உள்ள கொடிமரத்துக்கு க்ஷீராதிவாசம் நடத்திய அர்ச்சகர்கள். 
கோபுர கலசங்களுக்கு கண்ணாடி பிம்பத்தை பார்த்து அபிஷேகம் செய்த அர்ச்சகர்கள். (வலது) ஏழுமலையான் கோயில் முன் உள்ள கொடிமரத்துக்கு க்ஷீராதிவாசம் நடத்திய அர்ச்சகர்கள். 


திருப்பதி ஏழுமலையானுக்கு புதன்கிழமை க்ஷீராதிவாச திருமஞ்சனம் நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்12) முதல் மகாசம்ப்ரோக்ஷணத்துக்கான வைதீக காரியங்கள் நடந்து வருகிறது. 
அதன் 4-ஆம் நாளான புதன்கிழமை காலை ஏழுமலையானுக்கும், யாக சாலையில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கும் மகா சாந்தி பூர்ணாஹுதி மற்றும் மகா சாந்தி திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றன. இதில், தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 
ஆதிவாசம்: சிலைகளுக்கு பிராண பிரதிஷ்டை செய்யும் சமயத்தில் அகிலத்தில் உள்ள சக்திகளை ஆவாஹனம் செய்வதை ஆதிவாசம் என்பர். பிராண பிரதிஷ்டை செய்வதால் சிலைகளுக்கு உயிரோட்டம் கிடைத்து வல்லமையுடைய சக்தியாக மாறுகிறது. இவ்வாறான சிலைகளை வழிபடுவதன் மூலம் நம் வேண்டுதல்கள், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன. 
ஆதிவாசம் ரகங்கள்: சாஸ்திரங்களில் கூறியுள்ளதுபடி, கோயில்களில் பிராண பிரதிஷ்டை செய்யும் சமயங்களில் க்ஷீராதிவாசம், பலாதிவாசம், ஃபலாதிவாசம், சாயாதிவாசம், தான்யாதிவாசம், புஷ்பாதிவாசம், சயனாதிவாசம் உள்ளிட்ட கைங்கரியங்கள் நடத்தப்படுகின்றன.
க்ஷீராதிவாசம்: ஏழுமலையானின் மூலமூர்த்திக்கு பவித்ரமான பசும்பாலால் அபிஷேகம் செய்வதை க்ஷீராதிவாசம் என்கின்றனர். 
க்ஷீரசாகர தரங்க சீகர ஸார தர்கீத சாருமூர்த்தே: என்று முகுந்தமால ஸ்தோத்திரத்தில் குலசேகராழ்வார் க்ஷீராதிவாசத்தின் பெருமைகளை கூறுகிறார். அதன்படி, ஏழுமலையானுக்கு புதன்கிழமை க்ஷீராதிவாசத்தை அர்ச்சகர்கள் நடத்தினர். 
பிம்பத்துக்கு அபிஷேகம்:அதேபோல் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை காலை கோபுரத்தில் உள்ள கலசங்களை கண்ணாடியில் பார்த்து ,அதன் பிம்பத்துக்கு அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்தனர். 
ஸ்ரீவிமான வெங்கடேஸ்வர ஸ்வாமி, கருடாழ்வார், வரதராஜ ஸ்வாமி, பாஷ்யக்காரர்கள், யோக நரசிம்ம ஸ்வாமி, கொடிமரம், ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேய ஸ்வாமி உள்ளிட்ட சந்நிதி மேல் உள்ள கலசங்களுக்கு சுத்தமான, தண்ணீர் மற்றும் பாலால் அர்ச்சகர்கள் அபிஷேகத்தை நடத்தினர். 
இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 
ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை காலை 10.16 மணிமுதல் மதியம் 12 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்த வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com