கருட பஞ்சமி:காரைக்காலில் சப்த கருடசேவை

காரைக்காலில் கருட பஞ்சமியை முன்னிட்டு, 7 பெருமாள்கள் கருட சேவைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் கருட சேவையில் ஒருசேர எழுந்தருளிய 7 பெருமாள்கள்.
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் கருட சேவையில் ஒருசேர எழுந்தருளிய 7 பெருமாள்கள்.


காரைக்காலில் கருட பஞ்சமியை முன்னிட்டு, 7 பெருமாள்கள் கருட சேவைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி தின வழிபாடு ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. அதன்படி, நிகழாண்டு கருட பஞ்சமி தினத்தையொட்டி 8-ஆம் ஆண்டாக புதன்கிழமை இவ்வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோயில்கொண்டுள்ள 7 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுச் செய்யும் நிகழ்ச்சிக்கு ( கருட சேவைத் திருவிழா) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
அதன்படி திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ரகுநாதப் பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் ஆகிய 6 பெருமாள்கள் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு பல்லக்கில் எழுந்தருளினர்.
காரைக்கால் வந்த பெருமாள்களை ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் சார்பில் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட 7 பெருமாள்களுக்கும் ஒருசேர சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன.
இரவு 7 மணியளவில் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், எல்லா பெருமாள்களும், காரைக்கால் அம்மையார் குளக்கரையில் ஒருசேர எழுந்தருளினர். தொடர்ந்து, இரவில் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக நித்யகல்யாண பெருமாள் கோயில் முதல் தீர்த்தக்காரர் உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள், கருட சேவைத் திருவிழா சிறப்புகள் குறித்து பக்தர்களிடையே உரை நிகழ்த்தினார்.
பஞ்சமியன்று கருட சேவையில் பெருமாளை தரிசிப்பதன் மூலம் பல்வேறு தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை அகன்று வாழ்க்கையில் வளம் ஏற்படுமென்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வகையறா கோயில் அறங்காவல் குழுவினர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர், அனைத்து பெருமாள் கோயில்களின் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com