திருமலையில் வெகு விமரிசையாக நடந்த மகா சம்ப்ரோக்ஷணம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் குடமுழுக்கு விழாவில், தங்க கோபுரத்துக்கு புனித கலச நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலையில் வெகு விமரிசையாக நடந்த மகா சம்ப்ரோக்ஷணம்


திருப்பதி ஏழுமலையான் கோயில் குடமுழுக்கு விழாவில், தங்க கோபுரத்துக்கு புனித கலச நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
வைகானச ஆகம விதிப்படி வைணவ கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலைகளின் சக்தியைப் புதுப்பிக்க மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டு வருகிறது. 1958-ஆம் ஆண்டு தேவஸ்தானம் ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்க தொடங்கிய பின், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2006-ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. 


அது முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை காலை 10.16 மணிமுதல் மதியம் 12 மணிக்கு துலா லக்னத்தில் ஏழுமலையான் தங்க கோபுர கலசத்துக்கும், கோயிலில் மற்ற சந்நிதி கோபுர கலசங்களுக்கும் மகா சம்ப்ரோக்ஷணம் விமரிசையாக நடத்தப்பட்டது. 
இதில், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மகா சம்ப்ரோக்ஷணத்தைக் காண பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். அதன்பின், ருத்விக்கர்கள் மகா பூர்ணாஹுதி நடத்தி, தங்கக் கலசத்தில் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டிருந்த ஏழுமலையான் சக்தியை மீண்டும் மூலவர் சிலையில் ஆவாஹனம் செய்தனர். 
அப்போது, நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம் செய்யப்பட்டது. அதன்பின், தோமாலை சேவை, கொலுவு, பஞ்சாங்க படனம், சாத்துமுறை, சாலிம்பு, சுத்தி உள்ளிட்டவை தனிமையில் நடத்தப்பட்டது. 
பின்னர், யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த உற்சவ மூர்த்தி சிலைகள் அனைத்தும் ஏழுமலையான் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டு, அவற்றுக்கு உரிய இடத்தில் வைக்கப்பட்டன. அதன்பின், ருத்விக்கர்களுக்கு சம்பாவனை அளித்து, இந்த மகா சம்ப்ரோக்ஷணத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறைவு செய்தனர். ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை ஏழுமலையானுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது. 
கடந்த 5 நாள்களாக திருமலையில் நடைபெற்று வரும் மகா சம்ப்ரோக்ஷண காரியத்தில் 44 ருத்விக்கர்கள், அவர்களுக்கு துணையாக 100 வேதபண்டிதர்கள் மற்றும் வேதபாட சாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். 

கருட சேவை

<strong>திருமலையில் கருட பஞ்சமியையொட்டி நடத்தப்பட்ட கருட சேவை.</strong>
திருமலையில் கருட பஞ்சமியையொட்டி நடத்தப்பட்ட கருட சேவை.


திருமலையில் வியாழக்கிழமை கருட பஞ்சமியையொட்டி, மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப ஸ்வாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பெரிய சேஷ வாகனம்

திருமலையில் வியாழக்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி. 
திருமலையில் வியாழக்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி. 


மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற அன்று உற்சவ மூர்த்திகள் பெரிய சேஷ வாகனத்தில் வலம் வருவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி ஆதிசேஷனின் வடிவமான பெரிய சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏழுமலையான் தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் கேலரியில் நின்று கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி அளித்து வழிபட்டனர். 


நள்ளிரவு முதல் அனைத்து தரிசனங்களும் தொடக்கம்


மகாசம்ப்ரோக்ஷணத்தையொட்டி, திருமலையில் தேவஸ்தானம் ரத்து செய்த அனைத்து தரிசனங்களும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நேர ஒதுக்கீடு தரிசனங்கள், நடைபாதை தரிசனங்கள், வி.ஐ.பி. பிரேக், புரோட்டோகால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட தரிசனங்கள் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல் தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com