மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக.21-ல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை ஆவணிமூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக.21-ல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை ஆவணிமூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் ஆகஸ்ட் 21-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)  மாலை நடைபெறுகிறது. 

ஆவணி மூலத் திருவிழாவானது, சுந்தரேசுவரரின் திருவிளையாடலை மையமாக வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் நான்காம் நாளான சனிக்கிழமை காலை தங்கச் சப்பரத்தில் அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளினர்.

காலையில், கோயில் இரண்டாம் பிரகாரத்தில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை சிவாச்சாரியார்களால் பாடப்பெற்று பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஆவணி மூல வீதிகளில் சுவாமி, அம்மன் உலா வந்தனர். கோயில் மீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் தங்கிய பின்னர், மாலையில் சித்திரை வீதிகளில் வலம் வந்து, வடக்கு ஆவணிமூல வீதியில் உள்ள ராமசாமி பிள்ளை மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

இரவில், சுவாமி தங்கச் சப்பரத்திலும், அம்மன் யானை வாகனத்திலும் எழுந்தருளி, ராமசாமி பிள்ளை மண்டபத்திலிருந்து புறப்பாடாகி கோயிலை அடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை, உலவாக்கோட்டை அருளிய லீலை நடைபெறுகிறது. இரவில், சுவாமி பிரியாவிடையுடன் நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் ஆவணி மூல வீதிகளில் வலம் வருகின்றனர்.

ஆறாம் திருநாளான திங்கள்கிழமை காலை, கோயில் வளாகத்தில் உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெறுகிறது. பின்னர், ஆவணி மூல வீதிகளில் உலா வருகின்றனர். மாலையில், சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர். அப்போது, கோயில் கிழக்கு ஆடி வீதியில் உள்ள யானை மஹாலுக்கு முன்பாக திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நிறுத்திய லீலை நடைபெறுகிறது. 

பட்டாபிஷேகம்: ஆவணிமூலத் திருவிழாவின் ஏழாம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை தங்கப் பல்லக்கில் ஆவணிமூல வீதி, மேலமாசி வீதி வழியாக வலம் வரும் சுவாமி-அம்மன், இம்மையில் நன்மை தருவார் கோயிலில் எழுந்தருள்வர். அங்கு, வளையல் விற்ற லீலை நடைபெறும். 

மாலையில் அங்கிருந்து சுவாமி,அம்மன் புறப்பாடாகி, மேலமாசி வீதி, மேலக்கோபுரத் தெரு, தானப்பமுதலியார் அக்ரஹாரம், வடக்காவணிமூல வீதி வழியாக திருக்கோயிலில் எழுந்தருள்வர்.

இரவு 7.30 மணி முதல் 7.54 மணிக்குள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது, சுவாமியிடமிருந்து செங்கோலை கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து மீண்டும் சுவாமியிடம் வழங்குவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com