வீணாகக் குவிக்கப்பட்டுள்ள 40 டன் மலேசிய நாணயங்கள்!: தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வீணாகக் குவிக்கப்பட்டுள்ள 40 டன் மலேசிய நாணயங்கள்!: தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு


அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில், 5 சென், 10 சென், 20 சென், 50 சென், 1 ரிங்கிட் என்ற சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. அந்த நாணயங்களால் பாதுகாப்புக் குறைவு ஏற்படுவதாக நினைத்த மலேசியாவின் மத்திய வங்கி அவற்றை கடந்த 2005ஆம் ஆண்டு மதிப்பிழப்பு செய்தது. அவற்றுக்கு பதிலாக 1 ரிங்கிட் நோட்டை வெளியிட்டது. அதன்பின் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாணங்களை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்திடம் மலேசியாவைச் சேர்ந்த சில்லறை நாணயங்கள் 40 டன் அளவுக்கு மாற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. தற்போது, மலேசியாவின் ஒரு ரிங்கட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17-ஆக உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வரை தேவஸ்தானம், வெளிநாட்டு நாணயங்களை அவற்றின் எடைக்கு ஏற்ப விற்று, இந்திய ரூபாயாக மாற்றி வந்தது.
அதைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு வரை நாணயத்தின் மதிப்பை வைத்து, அதற்கு ஏற்ற வகையில் இந்தியப் பணமாக தேவஸ்தானம் மாற்றி வந்தது. அதன்பின், வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடைமுறை நின்று போனது. அதனால், அவை தேவஸ்தானக் கருவூலத்தில் மலைபோல் குவியத் துவங்கின. 
வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையை தேவஸ்தானம் கடந்த 2012இல் மீண்டும் மேற்கொண்டது. 
நாணயங்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரியது. வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற ஏஜென்சிகளுக்கு மட்டுமே வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் அதிகாரம் உள்ளது.
அதன்படி, கோடக் மகீந்திரா வங்கி மட்டும் ஒப்பந்தப்புள்ளி அனுப்பியது. அதில் ஒரு சென் மலேசிய நாணயத்திற்கு 4 பைசா, 5 சென்னிற்கு 12 பைசா, 10 சென்னிற்கு 40 பைசா, 20 சென்னிற்கு ஒரு ரூபாய், 50 சென்னிற்கு ரூ.2.80, ஒரு ரிங்கட்டிற்கு 40 பைசா என்ற ரீதியில் அளிக்கத் தயாராக உள்ளதாக அந்த வங்கி குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதை தேவஸ்தானம் நிராகரித்தது. அதன்பின், நடப்பு ஆண்டு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரியது. அப்போது கோடக் மகீந்தரா, சென் காயின்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் உள்ளிட்டவை ஒப்பந்தப்புள்ளி அனுப்பின.
அதில் இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் நிறுவனம், ஒரு ரிங்கிட்டிற்கு 5 பைசாவும், கோடக் மகீந்தரா, 49 பைசாவும் அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தன. ஒரு ரிங்கட்டின் மதிப்பு ரூ.17 ஆக இருக்கும் நிலையில், வெறும் 49 பைசா மட்டும் அளிப்பதா? என்று தேவஸ்தானம் அதை நிராகரித்தது. ஆனால், மலேசிய நாட்டில் பணமதிப்பிழப்பு செய்து பயன்பாட்டில் இல்லாத நாணயங்களுக்கு, எவ்வாறு முழு மதிப்பு அளிப்பார்கள் என்பதை தேவஸ்தான அதிகாரிகள் யோசிக்கத் தவறிவிட்டனர். அவர்களின் அலட்சியப் போக்கால் தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
மலேசியா தனது பணத்தை மதிப்பிழப்பு செய்தபோது, அதற்கென அளிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சில்லறை நாணயங்களை தேவஸ்தானம் மாற்றியிருந்தால், இது போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. 
தற்போது கைவசம் உள்ள மலேசிய நாணயங்களுக்கு நிகரான மதிப்பு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது (பல கோடி மதிப்பில்) இந்தியப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதையும் தேவஸ்தான அதிகாரிகள் நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன? இன்னும் காலம் தாழ்த்தினால், 
40 டன் நாணயங்களையும் தேவையற்ற சுமையாக தேவஸ்தானம் சுமக்க வேண்டி வரும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com