வேலைக்குச் செல்லும் பெண்கள் வரலட்சுமி விரதத்தை எப்படி சுலபமாக கடைப்பிடிக்கலாம்!

இன்று வரலட்சுமி விரதம். லட்சுமி என்ற பெண் தெய்வத்தைப் பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும்..
வேலைக்குச் செல்லும் பெண்கள் வரலட்சுமி விரதத்தை எப்படி சுலபமாக கடைப்பிடிக்கலாம்!

இன்று வரலட்சுமி விரதம். லட்சுமி என்ற பெண் தெய்வத்தைப் பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும் ஒரு தினம் தான் வரலட்சுமி விரதம். இளம் பெண்களுக்கு மாங்கல்ய வரம் தரும் இந்த வரலட்சுமி விரதம். 

வரலட்சுமி விரத பூஜையை இன்று காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம். வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். 

பூஜைக்குத் தேவையான பொருட்கள்..

மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்து விளக்கு, நோன்பு கயிறு மற்றும் நிவேதனப் பொருட்களான பொங்கல், பாயசம் மற்றும் உங்களால் முடிந்த உணவுகள். மேலும் நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்.

பூஜை செய்யும் எளிய முறை..

பூஜைக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன் பிறகு வரலட்சுமி பூஜையை செய்ய வேண்டும். 

ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம். அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். 

மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாகப் பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக்கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை முழு மனதுடன் எண்ணுதல்) செய்ய வேண்டும்.

மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்களகரமான அஷ்டோத்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.

இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தைச் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாகத் தங்க வேண்டும். எங்களுக்கு நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.

பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com