நடுகாவேரி ஸ்ரீ ப்ரஸன்ன மஹா கணபதி ஆலய கும்பாபிஷேகம் (புகைப்படங்கள்)

பாரத தேசத்தில் ஓடும் அத்தனை ஆற்றங்கரையிலும் கணக்கற்ற விநாயகர் கோயில்கள் சிறிதும், பெரிதுமாக அமைந்துள்ளன.
நடுகாவேரி ஸ்ரீ ப்ரஸன்ன மஹா கணபதி ஆலய கும்பாபிஷேகம் (புகைப்படங்கள்)

பாரத தேசத்தில் ஓடும் அத்தனை ஆற்றங்கரையிலும் கணக்கற்ற விநாயகர் கோயில்கள் சிறிதும், பெரிதுமாக அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில் அமைந்ததுதான் நடுக்காவேரி கிராமத்தில் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள பிரசன்ன மகா கணபதி ஆலயம்.

தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியாக 18 கி.மீ தூரத்தில் உள்ளது நடுக்காவேரி. ஒரு காலத்தில் இரு ஆறுகளுக்கு நடுவே இந்த ஊர் அமைந்திருந்து, தற்போது ஒரே நதியாக குடமுருட்டி ஆறு மட்டும் ஊரை ஒட்டி செல்லுகின்றது. முன்பு இந்த ஊர் "உத்தண்டவிஜயராகவபுரம்' என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்ததாக ஒரு செவிவழிச் செய்தி கூறப்படுகின்றது. இதனை ஆராயுமிடத்து, மகாகணபதியின் தியானமூர்த்தி வடிவங்களில் அதிகம் அறியப்பட்ட 32- இல் ஒன்று "உத்தண்ட மகாகணபதி'. கணபதி சாந்நித்யம் நிறைந்த ஊரானதால் ஒருகால், அந்தப்பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

கிருஷ்ணலீலாதரங்கிணி புகழ் மகான் நாராயண தீர்த்தர் பாதம் பதித்த ஊர். அவர் ஓர் இரவு தங்கியதாகக் கூறப்படும் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலும் இவ்வூரில் உள்ளது. 'ஜெய ஜெய சுவாமின்' என்ற அவர் பாடிய முதல் தரங்க கீதத்தில் இந்த விநாயகர் பெருமானை தனக்கு அருள் புரிந்த தயாபரர் என்று குறிப்பிட்டு போற்றியுள்ளார். 

ஆக, இரண்டு விநாயகர் கோயில்கள், இரண்டு சிவன் கோயில்கள் பெருமாள் கோயில், சுப்ரமண்யசுவாமி கோயில், மாரியம்மன் மற்றும் கிராமதேவதை கோயில்கள் என ஆலயங்கள் அதிகமாகக் காணப்படும் ஊராக ஆன்மீகச்சூழுடன் திகழ்கின்றது. இனி ஆற்றங்கரை ஆனைமுகன் வந்த வரலாற்றைக் காண்போம்.

1942 -ஆம் ஆண்டு, காஞ்சிமகா சுவாமிகள், காவேரி நதிக்கரையில் உள்ள தலங்களை தரிசித்த வண்ணம் வந்து கொண்டிருந்தவர், நடுக்காவேரிக்கும் விஜயம் செய்தார். திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி, அந்த ஊரில் சிறந்த சிவ பக்தராகவும், ராமாயண உபன்யாஸகராகவும் வாசம் செய்து வந்த சின்னஸ்வாமி ஐயர் என்பவரது இல்லத்திற்கு நுழைந்தார். சந்தானப் பிராப்தத்தை எதிர்நோக்கினயிருந்த அவரது புதல்வரிடம் ஒரு சொம்பு பசும்பாலை எடுத்துவர பணித்தார். பிறகு அதில் பெருமளவை அருகிலுள்ள குடமுருட்டி ஆற்றில் ஊற்றுமாறும், மீதியை ஆற்றங்கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி மணல் மேல் ஊற்றுமாறும் கூறினார்.

அவ்விடத்தை தோண்டி மணலை அப்புறப்படுத்தினால் ஓர் "அஸ்திவார' அமைப்பு தென்படும் என்றும், அதன் மேல் பிள்ளையாருக்கு கோயில் கட்டுமாறும், எல்லா நலன்களும் வாய்க்கப்பெறுவாய்! என்றும் மேலும் கூறி அனுக்கிரகித்தார். மகானின் வாக்கு பலித்தது. உலகின் மூலதத்துவங்களின் ஆதார பீடமானவருக்கு ஆலயம் அமைவதற்கான பீடம் (அஸ்திவாரம்) தென்பட்டது. ஆற்றங்கரையில் ஆனைமுகனின் அழகான ஆலயம் கட்டப்பட்டது. பிரஸன்ன மஹாகணபதி என்ற பெயரில் விநாயகப் பெருமான் இன்றளவும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இந்நிகழ்வை விவரித்துக்கூறி, மகாசுவாமிகள் வருகையால் தங்கள் இல்லம் மட்டுமல்லாமல் கிராமமே புனிதமடைந்ததாகக் கூறுகின்றார், ஆலய பரம்பரை தர்மகர்த்தா வாரிசு பிரசன்ன வெங்கடேசன். பின்னாளில் பூஜ்ய ஸ்ரீ ஐயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இக்கிராமத்திற்கு விஜயம் செய்து அருளியுள்ளார்கள்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் இவ்வாலயத்தில் மகாபெரியவா கைங்கர்ய டிரஸ்ட் திருச்சி, மற்றும் பிராமண சேவாசமிதி, நடுக்காவேரி போன்ற அமைப்புகள் மூலம் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்ற நிலையில், அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் 9-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெற்றது. கும்பாபிஷேக வைபவங்களில் பிலாஷ்பூர் சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினார்கள். 

இவ்வாலய தொடர்புக்கு: 98450 09579 / 94420 51845.

 - எஸ். வெங்கட்ராமன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com