முன்னேற்றம் தரும் மார்கழி மாதம்: பிரம்ம முகூர்த்தம் பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். மார்கழி..
முன்னேற்றம் தரும் மார்கழி மாதம்: பிரம்ம முகூர்த்தம் பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!


"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். மார்கழி மாத தொடக்கத்தில்தான் பாரதப் போர் தொடங்கியது. இந்தப் போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்ததும் மார்கழி மாதமே! மார்கழி மாதம் வந்தாலே அனைவருடைய மனதிலும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பெண்களின் உற்சாகத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். நாளை என்ன கோலம் போடுவது என்பதே அவர்களின் நாள் முழுவதின் சிந்தனையாக இருக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. நாளை முதல் அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை முதலியவை படிப்பது சிறப்பு.

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

தேவர்களின் பிரம்மமுகூர்த்தம்

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழி தக்ஷிணாயனத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம் காலைப்பொழுது மாசி மாதம் - உச்சிக்காலம். சித்திரை - மாலைப்பொழுது ஆனி - இரவு ஆவணி - அர்த்தசாமம் புரட்டாசி என்பர். தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயனத்தில் கடைசி மாதம் மார்கழி. 

பிரம்ம முகூர்த்தம்

சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. படைத்தற்தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். எனவே பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மனுடைய சக்தியை நினைவாற்றலை தன்னைத்தானே வழிப்படுத்திக்கொண்டு மேன்மை அடைய வேண்டிய நிலைக்கு அடித்தளம் இடும் காலமாகும்.

அத்துடன் பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்றக் காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.

உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

வைகறை துயில் எழுதல்

‘வைகறை யாமம் துயில் எழுந்து’ வாழ்வைத் தொடங்கச் சொல்கிறது நம் பாரம்பரியம். அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்குப் புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

இதனாலேயே விடியற் காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாகக் காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

மார்கழியில் ஓசோன்

ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றைச் சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது எனப் பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். தங்கள் முன் வாசலைத் திறந்து வைப்பார்கள். அதிகாலை லக்ஷமி வீட்டிற்குள் வரும் நேரம் என்பது நம்பிக்கை. இவ்வதிகாலை பொழுதே பிரம்ம முகூர்த்தமாகும். இக்காலத்தில் எழுந்து படித்தால் ஒரு போதும் மனதிலிருந்து மறக்காது தலையில் இடது பக்கம் இருக்கும் கல்வி மையம் செயற்படும் போது படிப்பது மிகவும் பயனைத் தரும் என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பு. இதனால் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும்.

பிரம்மமுகூர்த்தத்தில் எழுவதற்கான பழக்கத்தை நாமே பழகிக் கொள்ள வேண்டும். பிரம்மம் அறியப்படாதது போல பிரம்ம முகூர்த்தத்தின் இனிமையும் சாதரனமாக அறிய முடியாதது. அந்நேரத்தில் எழுந்து அனுபவித்தாலே அதன் பயன் விளங்கும். இந்நேரத்தில் தெய்வங்களுக்கு ஜெபம் செய்து மேன்மையடையலாம். தெய்வீகக் காரியங்கள் படிப்படியாக மேலோங்கி வளரும். சாதாரணமாக அந்நேரத்தில் அதாவது அதிகாலையில் எழுந்து எமது கடமைகளை செய்தால் அந்த நாள் முழுவதும் உற்சாகமும் மனஅமைதியும் கிடைப்பதை உணரலாம்.

புராணங்களில் மார்கழி

புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வுப் பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று மெய்ஞானத்தில் அதாவது ஆன்மிக ஞானத்தால் அனுபவபூர்வமாக வெற்றி கண்டுள்ளனர்.

பாரதப்போர் முடிவடையும் சமயம் பிதாமகர் பீஷ்மர், அம்புப் படுக்கையில் சயனித்திருந்த பொழுது அவர் உச்சரித்ததே விஷ்ணு சகஸ்ரநாமம். விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்ததும் மார்கழி மாதமே! பகவான் நாமம் ஒன்றே கலியுகத்தில் பக்தி மார்க்கத்திற்கு வழி என்று பகவானான பீஷ்மர் வாயிலாக சகஸ்ரநாமத்தை அருளினார். வைணவத் திருத்தலங்களில் பெரும் உற்சவமாகக் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருநாள், மார்கழி மாதத்தில்தான் வருகிறது.

இதிகாசங்களில் பிரம்ம முகூர்த்தம்

ஸ்ரீமத் பாகவதத்தில் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முகூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

ஜோதிடத்தில் மார்கழி

பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்து ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரீஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி சரத் ருதுவென்றும், ஐப்பசி, கார்த்திகை வருஷ ருதுவென்றும், மார்கழி, தை ஹேமந்த ருது என்றும், மாசி, பங்குனி சிசிர ருது என்றும் சொல்லப்படுகின்றன. 

ஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஓர் ஆண்டு, அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றன. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷத்திரங்கள் ஆகியவற்றைக் குறித்து மாறுபடுகின்றன. 

மார்கழியும் ஹேமந்த ருதுவும்

ஹேமந்த ருதுவின் அபிமான தேவதை ஆதிசேஷன். ஹேமந்த ருதுவில் பிறந்தவர்கள் அமைச்சனாகவும், சாமார்த்தியம் மிக்கவனாகவும், நற்குணங்களுடன் கூடியவனாகவும், நற்செயல்களையும் தரும காரியங்களைச் செய்வதில் விருப்பமுள்ளவனாகவும், பணிவுடன் கூடியவனாகவும் இருப்பவன். சுக்ரீவனின் அமைச்சனும் ராம தூதனுமான ஆஞ்சனேயர் பிறந்தது ஹேமந்த ருது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிட ரீதியாக விடியலில் எழுந்திருக்கும் கிரஹ நிலை

ஜோதிடத்தில் எனர்ஜி எனும் சக்தியை குறிக்கும் கிரஹம் செவ்வாயாகும். லக்னத்திலோ ராசியிலோ செவ்வாய் நிற்கப்பெற்றவர்கள் எவ்வளவு கடுங்குளிராக இருந்தாலும் அஞ்ச மாட்டார்கள்.  

கடுங்குளிர் மாதமான மார்கழியில் விடியலில் எழுந்திருப்பவர்கள் நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுர் ராசியை லக்னமாகவோ ராசியாகவோ கொண்டவர்கள் மற்றும் எந்த ராசி/லக்னமாக இருந்தாலும் லக்னத்திலோ அல்லது ராசியிலோ சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரஹங்கள் இருக்கப் பெற்றவர்கள் மட்டுமே விடியலில் எழுந்திருப்பார்கள். நெருப்பு ராசி அதிபதிகளை லக்னத்தில் கொண்டவர்கள் ஒரு சுய ஊக்குவிப்பாளர்களாக செயல்படுவார்கள்.  

அரியும் சிவனும் போற்றும் மார்கழி

நடராஜப் பெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நக்ஷத்திரத்தன்றுதான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். மார்கழி மாதத்தின் மற்றொரு விசேஷ நாள் ஸ்ரீஅனுமத் ஜெயந்தி. மார்கழி மாதம் அமாவாசை அன்று மூலம் நட்சத்திரத்தில் வாயு மைந்தன் ஆஞ்சநேயன் பிறந்தார். இதுவும் மார்கழி மாதத்தின் சிறப்பு. மஹாவிஷ்ணுவுக்கும், சிவபெருமானுக்கும், வாயுபுத்திரன் அனுமனுக்கும் உகந்த மார்கழி மாதத்தில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளும் பெறுவோம்.

கோதை நாச்சியார் எனப்படும் ஸ்ரீ ஆண்டாள் கண்ணபிரானை குறித்து திருப்பாவை நோன்பிருந்ததும் 30 பாசுரங்கள் கொண்ட திருப்பாவை எனும் பாடலை நமக்கு அருளியதும் மார்கழியில் தான். மார்கழி மாதத்தின் சிறப்பை திருப்பாவையின் முதல் பாடலே நமக்கு தெரிவிக்கிறது.

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாரா யணனே நமக்கே பறைதருவான்

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

அத்தகைய சிறப்பு வாய்ந்த தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழியில் நாமும் பிரம்ம முகூர்த்த காலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களின் அருளை பெறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com