சபரிமலையில் மகரஜோதி:லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மகரஜோதி, மகர நட்சத்திரத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தரிசனம் செய்தனர்.
மகரஜோதி தரிசனத்திற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சபரிமலையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
மகரஜோதி தரிசனத்திற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சபரிமலையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

சபரிமலையில் மகரஜோதி, மகர நட்சத்திரத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிச.30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. அதிகாலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய் அபிஷேகம் நண்பகல் 12 மணியளவில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.
பிற்பகல் 1.47-க்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மகரசங்கரம பூஜையை நடத்தினார். பிற்பகல் 2 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்கச் செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் கோயில் முன்புறம் வந்தனர்.
அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பினார்.
பந்தளத்தில் இருந்து கடந்த 12-ஆம் தேதி புறப்பட்ட திருவாபரண பவனி மாலை 5.40 மணியளவில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படி வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.25 மணிக்கு
சன்னிதானம் வந்தடைந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ஆம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கோயில் முன்பு திருவாபரண பெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6.35 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கி காத்திருந்தன. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்கத் தொடங்கியது. இதைக் கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர்.
புல்மேடு சம்பவத்துக்கு பின்னர் இந்த ஆண்டு சபரிமலையில் மகரவிளக்குக்கு கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் கூட்டம் காணப்பட்டது. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா சிறு விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற்றது. விபத்துக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கேரள அரசு போக்குவரத்துக் கழகம் 1,200 பேருந்துகளை தயார் நிலையில் நிறுத்தியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com