இந்தக் கோயிலுக்கு வந்தால் படிப்பில் நீங்களும் ஆகலாம் டாப்!

கலைகளின் வடிவாய், தலைவியாய் தொன்மை காலந்தொட்டு போற்றப்படுபவள். கருணையின் வடிவான கலைமகள்.
இந்தக் கோயிலுக்கு வந்தால் படிப்பில் நீங்களும் ஆகலாம் டாப்!

கலைகளின் வடிவாய், தலைவியாய் தொன்மை காலந்தொட்டு போற்றப்படுபவள். கருணையின் வடிவான கலைமகள்.

கல்வி தெய்வமாக விளங்கும் கலைமகள், வாக்கு வன்மை, புத்திசாலித்தனம், நீதி, நேர்மை ஆகியவற்றிற்கெல்லாம் அதிபதியாக விளங்குகிறாள். ஞானத்தைக் கொடுப்பதால் ஞானசொரூபினி என்று சான்றோர் போற்றுகின்றனர்.

சரஸ்வதி தேவியானவள் ஆதிபராசக்தியின் அம்சம். ஒளி மிகுந்தவள். சப்த மாதாக்களில் ஒருவள். இவளே நதியாகவும் வழிபடப்படுகிறாள். வித்தையின் அதிதேவதை சரஸ்வதி. வாக்கையே தேவியாக பாவித்து இவள் வழிபடப்படுகின்றாள். வெள்ளை உடை, வெள்ளை அணிகலன், வெண்மையான வீணை இவைகளை தரித்து வெண் தாமரையில் வீற்றிருப்பவள். இறைவனின் சந்தியா தாண்டவத்தில் இவள் வீணை வாசிக்கிறாள்.

 சரஸ்வதியைப் பூஜிக்கும் பக்தன் தேடுவது ஆத்ம ஞானம். தன்னடக்கம், ஆழ்ந்த கல்வி, சிந்திக்கும் ஆற்றல், தியானம் ஆகியவை இருந்தால் ஆத்ம ஞானம் பிறக்கிறது. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு மிகப் பிரியமான இடம் கவிஞர்களின் வாக்குதான். கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் கண்கண்ட தெய்வம் கலைவாணிதான். கலைமகளின் அருள் பெற்றவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. காளிதாசன் முதல் தற்கால புலவர்கள், கவிகள் வரை அனைவரும் அன்னையின் அருள் பெற்றவர்கள்! கவியரசர் கம்பர் நன்றி மறக்காமல் இவளுக்கு ஒரு அந்தாதியே பாடியுள்ளார். ஒட்டக்கூத்தர் வாக்தேவியின் பூரண அருளைப் பெற்றவர். இவர் இயற்றிய தக்கயாகப் பரணி மிகவும் பிரசித்தி பெற்றது. கூத்தருக்கு கலாதேவி சகலகலா நிலையம் என்ற தெய்வீக நூலைக் கொடுத்து மறைந்தாள்.

புருஷோத்தமன் என்ற சிறுவன் பிறவியிலேயே ஊமையாக இருந்தான். ஒருநாள் சகலகலா வல்லி அவன் முன் தோன்றினாள். அவனது வாயில் தான் தரித்திருந்த தாம்பூலத்தை அருளி நல்லாசி புரிந்து மறைந்தாள். அது முதல் ஊமையாயிருந்த புருஷோத்தமன் கவிபாடும் ஆற்றலைப் பெற்றான். அச்சிறுவன் அவளை அங்கேயே நிரந்தர வாசம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். அதற்கேற்ப சரஸ்வதி தேவியும் கூத்தனூரிலேயே கோயில் கொண்டாள். சரஸ்வதி மீது பல பாடல்களை பாடினான். இவரே பின்னாளில் ஒட்டக் கூத்தர் என்றழைக்கப்பட்டார்.

இத்தகைய பெருமை மிகுந்த சகல கலா வல்லிக்கு தமிழகத்தில் கூத்தனூரில் அமைந்துள்ளது பழம்பெரும் ஆலயம். இது கும்பகோணம் - காரைக்கால் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகில் அரசல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

கூத்தனூர் ஆலயம் சிறிய ஆலயமானாலும் மிகவும் புகழ்பெற்ற ஆலயம். காஞ்சி மஹா ஸ்வாமிகளின் அபிமானத் தலம். திருச்சுற்று, முக மண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம் ஆகியவை முறைப்படி கட்டப்பட்டுள்ள இத்திருக்கோயிலின் முக மண்டபத்தின் இடது பக்கத்தில் தேவியின் அருள்பெற்ற ஒட்டக் கூத்தர் வலக்கையில் எழுத்தாணி கொண்டு அமர்ந்திருக்கிறார். அர்த்த மண்டபத்தில் விநாயகர், லிங்கம், முருகப் பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர். பலிபீடத்தருகில் வலம்புரி விநாயகரும், திருச்சுற்றின் தென் மேற்கு மூலையில் நர்த்தன கணபதியும் இடம் பெற்றுள்ளனர்.

கர்ப்பகிரகத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவி தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள். தேவியின் திருக்கரங்களில், பின் இரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் இடம் பெற்றிருக்க முன் இரு கரங்களில் ஏடும் சின்முத்திரையும் இடம் பெற்றுள்ளன. ஜடா மகுடத்துடன் கூடிய இவளுக்கு மூன்று கண்கள் உண்டு. எல்லாவிதமான ஆபரணங்களுடன் அழகுடையவளாக புன்னகைப்பூக்கும் கருணைத் திருமுகத்துடன் தன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

நவராத்திரி விழாவின் 10 நாள்களுக்கு ஊஞ்சல் உற்சவம் உட்பட பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். சரஸ்வதி பூஜையன்று கருவறையில் குடிகொண்டுள்ள சரஸ்வதி தேவியின் திருப்பாதங்கள் கருவறையின் வெளியிலுள்ள அர்த்த மண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்யப்படுகிறாள். இதன்மூலம் தேவியின் திருப்பாதங்களுக்கு பக்தர்களே நேரடியாக அர்ச்சிக்க முடியும். இன்றும் இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சித்திரை மாதம் முதல் தேதியில் தொடங்கி 45 நாள்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இவை தவிர ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரமும் உண்டு. மாதந்தோறும் பௌர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகமும் உண்டு.

இத்தகு பெருமைமிகு ஆலயம், கூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி சேவா சமிதியினரால் மிகப் பெரிய அளவில் பக்தர்களின் பங்களிப்புடன் புணருத்தாரணம் செய்யப்பட்டு, அதன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை 9.12 - 10.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com