பொன்விளைந்த களத்தூர் நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ஆனித்திருமஞ்சனம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டிலிருந்து சுமார் 10.கி.மீ தொலைவில் பொன்விளைந்த
பொன்விளைந்த களத்தூர் நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ஆனித்திருமஞ்சனம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டிலிருந்து சுமார் 10.கி.மீ தொலைவில் பொன்விளைந்த களத்தூர் என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூரில் வழிபாடு சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் உடையத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், இவ்வூரில் கூற்றுவநாயனார், நளவெண்பா இயற்றிய புகழேந்திப்புலவர், படிக்காசு தம்பிரான், அந்தகக்கவி வீரராகவ முதலியார் போன்ற அருளாளர்கள் அவதரித்த புண்ணிய பூமியாகப் புகழ்பெற்று விளங்குகிறது. 

பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. கருவறையில் பெருமாள் வைகுண்ட நாதராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக எழுந்தருளி அருள்புரிகின்றார். உற்சவ மர்த்தியான லட்சுமி நரசிம்மசுவாமி கருடன் வழிகாட்ட மாமல்லபுரத்திலிருந்து இத்தலத்திற்கு எழுந்தருளி அருள்புரிகின்றார் என்று தலவரலாறு கூறுகிறது. 

இவ்வூரில் வயல்களில் நெல்விளைவதற்கு பதிலாகப் பொன்விளைந்ததால் இவ்வூர் பொன்விளைந்த களத்தூர் என்று இவ்வூரின் பயிர் விளைச்சல் சிறப்பாகப் புகழ்ந்து போற்றப்படுகிறது. மேலும், இப்பகுதியில் சுவாமி வேதாந்த தேசிகன் மேற்கொண்ட யாத்திரையின் போது அவருடன் தோன்றிய வெள்ளை நிற அசுவம் (குதிரையின்) வாய்ப்பட்ட இடங்களில் நெல் கதிர்கள் பொன்னாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இக்கோயிலில் சுவாமி தேசிகனால் எழுந்தருளுவிக்கப்பட்ட லட்சுமி ஹயகீரிவர் திருமேனிக்குச் சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 

வழிபாடு சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் நரசிம்ம பெருமாளுக்கும், கருணையே வடிவான அகோபிலவல்லி தாயாருக்கும் 08.07.2018 அன்று ஆனித்திருமஞ்சன வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பலர் இவ்வழிபாட்டில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது ஜமீன் பல்லாவரம் பகுதியிலிருந்து வழிபாட்டிற்காக வந்த ஸ்தோத்ரபிரியா மண்டலி மகளிர் குழுவினர் லட்சுமி நரசிம்ம சகஸ்ரநாமம் பாராயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்பாராயணம் பக்தர்கள் அனைவரும் கேட்டு பரவசம் அடைந்தனர். 

மேலும் இக்குழுவினர் பொன்விளைந்த களத்தூர் அருகில் உள்ள திருஆனைக்கா திருவாலீசுவரர் கோயிலிலும், திருப்பணிகள் நடைபெற்று வரும் ஆனூர் அஸ்தரபுரீசுவரர் கோயிலிலும், ஆனூர் கந்தசாமி திருக்கோயிலிலும் சிவஸ்தோத்திரங்கள், லலிதா சகஸ்ரநாமம், திருப்புகழ் பாராயணம் செய்தார்கள். இவ்வழிபாடு மழை வளம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் இறை அருள் பெற பிரார்த்தித்தும் வேண்டிக்கொள்ளப்பட்டது. ஒரு பக்தி பூர்வமான நிகழ்ச்சியாக இது அமைந்தது. 

தொடர்புக்கு - 7358362113, 9003026602

தகவல் - கி. ஸ்ரீதரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com