வாஸ்து தோஷம் போக்கும் ஆமை - கூர்ம ஜெயந்தி கூறும் ரகசியங்கள்!

இன்று தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரமான கூர்மாவதார மூர்த்திக்கு ஜெயந்தி நாளாகும். பாற்கடல் நாதனான பரந்தாமனின் தசாவதாரங்கள் பற்றி நாம் படித்திருக்கிறோம்.
வாஸ்து தோஷம் போக்கும் ஆமை - கூர்ம ஜெயந்தி கூறும் ரகசியங்கள்!

இன்று தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரமான கூர்மாவதார மூர்த்திக்கு ஜெயந்தி நாளாகும். பாற்கடல் நாதனான பரந்தாமனின் தசாவதாரங்கள் பற்றி நாம் படித்திருக்கிறோம். மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்மாவதாரம், வாமனாவதாரம், பரசுராம அவதாரம், பலராமாவதாரம், ராமாவதாரம், க்ருஷ்ணாவதாரம், கல்கி அவதாரம் எனத் தசாவதாரங்களில்  ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு கிரகத்துக்குரியது. 

ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தில்..

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!

என நவக்கிரகங்களும் ஸ்ரீமன் நாராயணனான ஸ்ரீ மஹா விஷ்ணுவிடம் உறைந்திருக்கிறது எனச் சிறப்பாக கூறுகிறது. பகவானின் தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு! ராமன் சூரியனின் அம்சமாகவும், க்ருஷ்ணன் சந்திரனின் அம்சமாகவும், வீரம் நிறைந்த நரசிம்மர் அங்காரகனின் அம்சமாகவும், கல்கி புதனின் அம்சமாகவும் வாமனர் குருவின் அம்சமாகவும், பரசுராமர் சுக்கிரனின் அம்சமாகவும், கூர்மம் சனியின் அம்சமாகவும் வராகம் ராகுவின் அம்சமாகவும், மச்சம் கேதுவின் அம்சமாகவும் வேத சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் கூறப்படுகிறது. இந்த வரிசையில் சனிக்குரியவராகக் கருதப்படுபவர் இன்று ஜெயந்தி நாள் காணும் கூர்மாவதார மூர்த்தி.

கூர்மாவதாரம்

மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.

கூர்மாவதார கதை

தேவலோகத்துப் பெண்ணான சித்தவித்யாதர மகள் என்பவள் கலைமகள் கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்மலோகம் வழியாக வரும்போது, துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கிய அவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். மாலையைப் பெற்றுக் கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார். எதிரே தேவேந்திரன் யானைமீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டுக் காலால் மிதித்தது. 

தேவேந்திரன் சாபம்

இதனைக் கண்ட முனிவர் தன்னை அவமானப்படுத்திய தேவேந்திரனைப் பார்த்து, ”உன் செல்வமெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் அழிந்து போகட்டும்‘’ என்று சாபமிட்டார். சாபம் உடனே பலித்தது. தேவேந்திரன் தன் செல்வம் அனைத்தையும் இழந்தான். யானை மதம்பிடித்து ஓடியது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போர் புரியலானார்கள். போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். இதனைக் கண்ட தேவேந்திரன் பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன் மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார். 

பாற்கடல் கடைதல்

தேவேந்திரனின் இக்கட்டான நிலையை அறிந்த மகாவிஷ்ணு, “மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பெரிய நாகத்தைக் கயிறாக உபயோகித்து பாற்கடலைக் கடைந்தால் இழந்த செல்வத்தைப் பெறலாம்‘’ என்று சொன்னார். இவ்வளவு பெரிய செயலை தேவர்களைக் கொண்டு மட்டுமே செய்ய முடியாது என்றெண்ணிய தேவேந்திரன், அசுரர்களிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்பொழுது மத்தாகப் பயன்படுத்தப்பட்ட மந்திரமலை ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் அசைந்து தொல்லை கொடுத்தது. இதனால் தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று கலங்கிய தேவேந்திரன் மீண்டும் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தான். 

தேவேந்திரனுக்கு உதவுவதற்காக மகாவிஷ்ணு பிரம்மாண்டமான ஆமையாக உருவெடுத்து, மந்திரமலையின் அடியில் சென்று அதைத் தாங்கினார். தேவர்களும் அசுரர்களும் மீண்டும் தங்கள் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது கடையும் கயிறாக இருந்த வாசுகி என்னும் நாகம் பெரிதும் துன்பப்பட்டு விஷத்தைக் கக்கியது. அந்த விஷத்தின் வேகம் உலகத்தை அழித்துவிடும் என்பதால், நந்தியெம்பெருமானை அழைத்து அந்த ஆலகால விஷத்தைத் திரட்டி எடுத்து வரச் செய்து விழுங்கினார் சிவபெருமான். இதனைக் கண்ட பார்வதி சிவபெருமானின் கண்டத்தில் கை வைக்க, அந்த விஷம் கழுத்திலேயே தங்கிவிட்டது. அதனால் ஈசன் நீலகண்டன் ஆனார். விஷத்தின் தன்மை ஈசனை சிறிது நேரம் மயக்க நிலைக்குத் தள்ளியது. ஈசன் ஆலகால விஷத்தை விழுங்கிய திதி திரயோதசி திதி, மாலை நேரம் ஆகும். அதுவே பிரதோஷ காலமாயிற்று. மயங்கிய நிலையில் ஈசன் இருந்ததால் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் ஈசனை வழிபட ஆரம்பித்தார்கள். அது போற்றுதற்குரிய பிரதோஷ வழிபாடாக அமைந்தது. 

மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தால்தான் இத்தகைய உயரிய வழிபாட்டு முறை மக்களுக்குக் கிட்டியது என்று புராணம் கூறுகிறது. அதுமட்டுமன்றி இரண்டாவது முறையாகப் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இந்தப் பசு வேண்டியதைத் தரும் வல்லமை படைத்தது. இது பார்வதியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இந்தக் குதிரை பறக்கும் ஆற்றல் படைத்தது. 

அதற்கு அடுத்து ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை நிற யானை தோன்றியது. இது இந்திரனது வாகனம் ஆனது. இதனை அடுத்து ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிவந்தன. பஞ்ச தருக்கள் என்று சொல்லப்படும் அவை அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகும். இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான். கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம். அடுத்து கவுஸ்துபம் என்ற மணிமாலை தோன்றியது. இதனை அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார். அதற்குப்பின் ஜேஷ்டாதேவி தோன்றினாள். இவளை மூதேவி என்றார்கள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் சென்றாள். 

இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினார்கள். இவர்களைத் தேவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்துத் தோன்றியது மது! இந்த மது தோன்றும் போது அதன் அதிதேவதையான சுராதேவியுடன் மதியை மயக்கும் அழகு மங்கையர் கணக்கற்ற தோழியர்களுடன் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குப்பின் தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள் தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் தேவியானாள். 

அடுத்து விஷக் கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். மேலும் அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் சிந்தாமணி என்றும் சொல்வர். அதை சூரியன் ஏற்றான். கடைசியில் அவதரித்தவர் தன்வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார். தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்தகலசத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலத்த போட்டி இருந்தது. இதனை அறிந்த திருமால் மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தைப் பங்கிட்டுத் தரும் வேளையில்தான் சில நிகழ்வுகள் நடந்தன. அசுரன் ஒருவன் குறுக்கு வழியில் சூரிய - சந்திரர்களுக்கு இடையில் அமிர்தம் பெற முயற்சிக்கையில், மோகினியானவள் அமிர்தம் வழங்கிய சட்டுவத்தால் அவனை வெட்ட, அவன் இரண்டு துண்டுகளாகி ராகு - கேது ஆனான். அதற்குப் பின் மோகினியின் அழகில் ஈஸ்வரன் மயங்கியதால் ஸ்ரீஐயப்பன் அவதரித்தார்.

மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் விளைவால் பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதேசமயம் பல நிகழ்வுகளும் நடைபெற்றன. அனைத்தும் சுபமான நிகழ்வுகள் ஆகும். மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரக் கோலத்தினை வழிபடச் சனியின் தாக்கம் குறையும் என்பர்.

சனியின் அம்சமான கூர்மாவதார மூர்த்தியை தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாகவே விஷ்ணு புத கிரகத்தின் அதிதேவதையாவார், கூர்மாவதார கோலத்தில் சனி  மற்றும் புதனின் இணைவு பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் உறையும் மஹாலக்ஷ்மி சுக்கிரனின் அதிதேவதையாவார்.

சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களால் அவதிப்படுபவர்கள் கூர்மாவதார மூர்த்தியைத் தரிசனம் செய்ய வாதநோய் நிவர்த்தியாகும்.

மேலும் சனைஸ்வர பகவானுக்குப் புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் கூர்மாவதார தரிசனம் வியாபாரத்தில் மந்த நிலை போக்கி வியாபார அபிவிருத்தி ஏற்படும். 

வித்யாகாரகனான புதன் ஆய்வு காரகனான சனி மற்றும் சாஸ்திர உயர்படிப்பின் காரகரான சுக்கிரன் இணைவு பெற்ற கூர்மாவதார மூர்த்தியைத் தரிசிப்பது சாஸ்திர உயர்படிப்பு மற்றும் ஆய்வு படிப்பில் உள்ள தடைகளை நீக்கி வெற்றி பெறச்செய்யும்.

புத கிரக தோஷத்தால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுக்கிர தோஷத்தால் ஏற்படும் முடி கொட்டுதல் நின்று நீண்டு வளரும்.

ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் விளங்காது என்ற சொல்வழக்கு உண்டு. பொறாமை புகுந்த வீடு என்பதை அறியாத சிலர் கடல் ஆமையைக் கூறிவிட்டனர், உண்மையில் ஆமை புகுந்த வீட்டில் வாஸ்து தோஷம் விலகும். சீன வாஸ்து எனும் ஃபெங்க்சுயி முறையில் ஆமை எப்படித் தன் ஐந்து உறுப்புகளையும் (தலை மற்றும் கால்கள்) உள்ளடக்கிக்கொண்டு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் உடனடியாக நிறைவேறுவதையும் ஆமை குறிக்கிறது.

உலோகத்தால் செய்யப்பட்ட ஆமையை, நீர் நிறைந்த ஒரு குவளையில் இட்டு, வீட்டினுள் வடக்கு திசையில் வைக்க வேண்டும். வடக்கில் படுக்கை அறை அமைந்திருக்குமானால், வெறும் உலோக ஆமையைப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் பொருளாதார மேம்பாடு, பகைவரை வெல்லுதல், நீண்ட ஆயுள், பொறுமை முதலான பல பலன்களை நம்மால் ஈட்ட முடியும்.

ஆமை மட்டும் இல்லைங்க! ஆமையின் கூர்மாவதாரத்தில் தோன்றிய வலம்புரி சங்கு, காமதேனு, கற்பகவிருக்ஷம் ச்யமந்தக மணி, ஐராவதம், உச்சிஸ்ரவைஸ் என அனைத்துமே வாஸ்து தோஷம் போக்கும் பொருட்களாகும்.

இத்தகைய சிறப்புடைய கூர்ம மூர்த்திக்கான தனிக்கோயில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் அமைந்திருக்கிறது. புராதனப் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது இவ்வாலயம். இரண்டு துவஜஸ்தம்பங்கள் தினமும் அபிஷேகம் அஜந்தா ஓவியங்கள் போன்றே புராதனமான ஓவியங்கள் கூர்ம புராணம் பத்ம புராணம் பிரம்மாண்ட புராணம் உள்ளிட்ட புராணங்களில் குறிப்பிடப்படுவது கருட வாகனத்தில் அமர்ந்த கூர்ம நாயகி சக்கரத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்வேத புஷ்கரணி நுண்ணிய கல்வேலைப்பாடுகள் தூண்களின் நேர்த்தி பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட சுயம்பு கூர்ம நாதருக்கு உலகில் அமைந்த ஒரே ஆலயம். இப்படி பல்வேறு சிறப்புகள் இத்தலத்துக்கு உண்டு. சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருந்து 12 கிமீ பேருந்து வசதி உண்டு.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com