சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 7) - நந்தி மங்கை

நல்லிச்சேரி தஞ்சை - கும்பகோணம் சாலையில் பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 7) - நந்தி மங்கை

நல்லிச்சேரி தஞ்சை - கும்பகோணம் சாலையில் பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பிரதான சாலையில் ஓர் அலங்கார வளைவு ஒன்றுள்ளது அதன் வழியாகச் சென்றால் ஒரு கி.மீ தூரத்தில் நல்லிச்சேரி கிராமம் உள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், சிவாலயம், வைணவ ஆலயம், விநாயகர் ஆலயம், மாரியம்மன் ஆலயங்களும் உள்ளன.

அழகிய பசுமையான வயல்கள், அதனை ஊடறுத்துச் செல்லும் வெண் கோடுகளாய் வாய்க்கால்கள், ஊரில் நுழையும்போதே பெரும் இலுப்பை, வேம்பு, அரசு மரங்களின் பக்கத்துணையுடன் நீண்ட செவ்வக வடிவில் மேற்கு நோக்கிய சிவாலயம். சப்த மங்கைத் தலங்களில் வைஷ்ணவி இறைவனைப் பூஜித்து அருள் பெற்ற தலம், அம்பிகை மடந்தை பருவ பெண்ணாகக் காட்சி கொடுத்த தலம். இறைவன் இங்குத் திருவடி கழல் காட்டியருளிய தலம்.

மேலும் நந்தி பூஜித்து பஞ்சாட்சர உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு நமசிவாய மந்திரம் உச்சரித்தால் கோடி மடங்கு பலன் பெறலாம். நந்தி வணங்கியதால் நந்திசேரி எனப்பட்டு பின்னர் நல்லிசேரி ஆனது. நந்தியும் சப்தமங்கையும் பூஜித்ததால் நந்திமங்கை எனவும் வழங்கப்படுகிறது.

இறைவன் ஜம்பு நாதர் ஆதலால் இங்கு தல மரம் நாவல் ஆகும். இறைவி அழகிய கோலம் கொண்டவளாய் விளங்குவதால் அலங்காரவல்லி எனப்படுகிறார்.

இறைவன் மேற்கு நோக்கி அருள்புரியும் தலமாதலால் இக்கோயில் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது. இறைவனின் எதிரில் ஓர் வாயில் இருந்தாலும் பிரதான வாயில், சாலை இணைப்பு கொண்ட தென்புறமே ஆகும். சுதை வேலைப்பாடுகள் கொண்ட தென்புறம் வழி உள்ளே நுழைந்ததும் அலங்காரவல்லியின் தரிசனம் கிடைக்கும்.

இடது புறம் இரட்டை விநாயகர் சன்னதி உள்ளது ஒருவர் நிக்கிரக விநாயகர், மற்றொருவர் அனுக்கிரக விநாயகர். ஒருவர் துன்பம் தருபவராகவும், மற்றொருவர் அதனின்று காத்து அருள்பவராகவும் உள்ளது இக்கோயிலில் மற்றொரு சிறப்பு.

இறைவன் ஜம்புநாதர் சன்னதியின் வாயிலில் சுதை துவாரபாலகர் இருவர் உள்ளனர், வாயில் அறுகால் பித்தளை கவசம் போடப்பட்டு அழகுடன் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன், துர்க்கை உள்ளனர். வடபுறத்தில் கஜலட்சுமி சிற்றாலயம் உள்ளது. கிழக்கில் நவக்கிரகம், பைரவர் உள்ளனர். துர்க்கை எட்டு கரங்களுடன் அழகாகக் காட்சிதருகிறார். வடபுறம் வில்வமரத்தடியில் சில லிங்க பாணங்கள் உள்ளன. நடராஜர் சிலை பாதுகாப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதால் தென்புற அறை சிறிய நடராஜர் படத்துடன் காட்சியளிக்கிறது.

குருக்கள் வீடு பெருமாள் கோயிலின் சன்னதி தெருவில் உள்ளது. பெயர் நடராஜ குருக்கள்

- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com