திருப்பதி கோயிலை 9 நாள்களுக்கு மூடும் முடிவைக் கைவிட்டது தேவஸ்தானம்

திருமலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெறவுள்ள மகாசம்ப்ரோக்ஷண விழாவின்போது ஏழுமலையான் கோயிலை 9 நாள்களுக்கு மூடும் முடிவை தேவஸ்தானம் கைவிட்டது.
திருப்பதி கோயிலை 9 நாள்களுக்கு மூடும் முடிவைக் கைவிட்டது தேவஸ்தானம்

திருப்பதி: திருமலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெறவுள்ள மகாசம்ப்ரோக்ஷண விழாவின்போது ஏழுமலையான் கோயிலை 9 நாள்களுக்கு மூடும் முடிவை தேவஸ்தானம் கைவிட்டது.

திருமலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்காகப் பாலாலயம் ஏற்படுத்துதல், வைதீக காரியம் செய்தல், செப்பனிடும் பணிகள், அஷ்டபந்தனம் உள்ளிட்டவை நடைபெற இருக்கின்றன. இந்தத் திருப்பணிகளை முன்னிட்டு, தேவஸ்தானம் ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் 17-ம் தேதி காலை 6 மணி வரை பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்தது. இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு பரவியதுடன், விமர்சனங்களும் எழத் தொடங்கின. 

இதுகுறித்து அறிந்த ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, 

தேவஸ்தான அதிகாரிகளை வரவைத்து விசாரித்தார். அதன் பின் அவா், ‘பக்தா்களிடம் ஏழுமலையான் கோயிலை மூடுவது குறித்து ஆலோசனை கேட்டு வைதீக காரியத்திற்கு இடைஞ்சல்கள் வராதபடி நடந்து கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தினார். 

இது தொடர்பாக, தேவஸ்தான செயல் அதிகாரி திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை கூறியதாவது, 

மகாசம்ப்ரோக்ஷண விழாவை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 9 நாள்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படும் முடிவை தேவஸ்தானம் கைவிட்டு விட்டது. இது தொடர்பாக, வரும் 23-ம் தேதி திருமலையில் பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, ஆலோசனை கேட்டு அவர்களின் முடிவின்படி நடக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக மீண்டும் வரும் 24-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

அவ்வாறு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்தால் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாள்களுக்கு 30 மணிநேரம் மட்டுமே தரிசனத்தை வழங்க முடியும். அவ்வாறு உள்ள நேரங்களில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்க முடியும். பக்தர்களுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்று கருதியே 9 நாள்களுக்கு தரிசனத்தை ரத்து செய்வது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றார் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com