காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-9 

ஒன்பது நிலையுடன் கூடிய உயரமான கோபுரத்தை அமைக்க, உளம் கொண்ட மாமன்னன் பராக்கிரம
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-9 


தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் 8 தொடர்களைப் பார்த்துள்ளோம். இப்போது அதன் தொடர்ச்சியாக தென்காசியின் 9-வது தொடரைப் பார்ப்போம். 

கோபுர வரலாறு

ஒன்பது நிலையுடன் கூடிய உயரமான கோபுரத்தை அமைக்க, உளம் கொண்ட மாமன்னன் பராக்கிரம பாண்டியன் கலியுக ஆண்டு 4558-ன் மேல் கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை (செம்பொன் வாரம்) மிருக சீரிடத்தில் கோபுரம் கட்ட கால்கோள் இட்டான். இது 1457 என்றநாளுக்குச் சமநாளாகும். இக்கால்கோள் இட்ட நாளை...

"பனது கலியுகம் நாலாயிரத்து
ஐநூற்று ஐம்பத்து
எட்டின்மேல் எவரும் பணிந்து போற்ற
செந்நெல் வயல் தென்காசி நகரில் நற்கார்த்திகைத்,
திங்கள் தியதி ஐந்தில்
செம்பொன் வாரம் மன்னிய
நாளைந்தில் மதுரை வேந்தன்
வடிவெழுதவொணாத பராக்கிரம மகிபன்
மகிபன்ரை போல் திருக்கோபுரம்
காணத் துடியிடையாய்
உபான முதல் தோடங்கினானே"......

என்றவொரு பாடல் ஒரு கல்வெட்டில் இருக்கின்றன.

ஏராளும் சகாப்தம் ஆயிரத்து முந்நூற்று எழுபத்து
ஒன்பதன் மேல் கார்த்திகை மாதத்திற் சீராருந்
தியதி ஐந்தில் குருவாரத்தில் சிங்க முகூர்த்தத்தில்
மிருக சீரிழந் தன்னில் அரசன் அருளால் வழுதி
பராக்கிரம மகிபன் கூர் உபான முதல் கோட்டினானே

என்று வேறவொரு கல்வெட்டும் உரைக்கிறது.

கல்வெட்டிலிருந்த இவ்விரு பாடல்களையும் ஆராய்ந்தால், அதில் (39-11-1457) கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினத்தில் இரவு பதினோறு மணி முதல் ஒரு மணி வரை உள்ள நாழிகையில் கோபுரம் கட்டக் கால்கோள் இடப்பட்டது என்றான்.

இதில் சர்ச்சை என்னவென்றால், இந்த நாழிகையில் "மரணயோகம் இருந்தது" மன்னன் தான் பிறந்த மிருகசீரிட நட்சத்திரத்தில் இப்பணியைத் தொடங்கினான். சாத்திர நூல்கள், வியாழக்கிழமை மிருகசீரிஷம் நட்சத்திரம் இருக்குமானால் மரண யோகம் உண்டு என்று உறுதிப்படு கூறுகின்றன.

மரணயோகம் இருக்குமாயினும் மன்னனிடம் சில ஆச்சாரியார்கள் இரவில், வரும் மரணயோகத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறியிருப்பர் போலும். அவர்கள் கூறியதை மன்னர் ஏற்றுக் கொண்டு கோபுரம் கட்ட கால்கோள் செய்தான். ஆகையினால் தான் கோபுரத்தை அவனால் முழுமைப்படுத்த முடியவில்லை. அச்சமயத்தில், பராக்கிரம பாண்டியன் மீது பகை அரசர்கள் வேறு படையெடுத்தனர்.

உள்நாட்டுப் போர் வேறு நடந்து கொண்டிருந்தது. தன் மகளுக்கு கொடிய நோய் வந்திருக்கக் கண்டு அதையும் நினைந்து வருந்தி உழன்றான். இதுபோன்ற சிக்கலான இந்நிகழ்வுகளால் அதிகமான அளவில் பொருளாதார சிக்கலும் சேர்ந்துகொள்ள பலமுனையிலும் மன்னன் தவித்தான். ஆனாலும் கோபுரம் கட்டுவிப்பதில் உள்ளம் கலங்காது, கோபுரப் பணியை மேற்கோள்களை நிறுத்தவில்லை.

ஆயினும் கோபுரப் பணி முழுமை அடையாது தடங்கலாகவே நீடித்தது. கடைசிவரை கோபுரம் முழுமை ஆகவில்லை. இம்மன்னனுக்குப் பின் வந்த பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் சக வருடம் 1518-ஆம் வருடத்தில் கோபுரப் பணியை முழுமைப்படுத்தினான். இதனைத்தான்......

"விண்ணாடர் போற்றும் தென்காசிக் கோபுர பதில் எங்கள்
அண்ணாழ்வி செய்த பணி பணிபடிக் குறையாகக் கிடக்க
வொண்ணாதது எனக் கண்டு உயர்ந்த தட்டோங்கு முற்றுவித்தான்
மண்ணாளும் மாலழகன் குலசேகரனே"

என்றான ஆதாரப் பாடல் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன.

கோபுரத்தை நிறைவு செய்த மன்னனுக்குப் பின்பு தென்காசி நகர் சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டது. சேர மன்னன் உதய மார்த்தாண்டவர்மன் தென்காசி கோயிலுக்கும் கோபுரத்திற்கும் திருப்பணிகள் செய்வித்து கி.பி.1524-ல் குடமுழுக்கு செய்வித்தான்.

இவனுக்குப் பின், கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராம பாண்டியன் கி.பி.1564-ல் சித்திரைத் திங்களில் இருபதாம் நாளில் புனர்பூச நட்சத்திரத்தில் தென்காசியில் முடிசூட்டிக் கொண்டான்​. கூர்ம புராணம், திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி, காசி காண்டம், வாயு சங்கீதை, வெற்றிவேற்கை, கொக்கோகம், என்று நூல்களை எழுதிய இவன் தென்காசிக்கு கிழக்கே "குலசேகர நாதர்" எனும் கோயிலைக் கட்டினான்.

கோபுரமும் கட்டப்பட முனைந்தார். ஆனால், கோபுரப் பணி அடி நிலைக் கல்காரத்தோடு நின்று போயின. இவன் கட்டிய திருக்கோயில், இன்னும் தென்காசி மருத்துவ மனைக்கு அருகில் இருக்கின்றன. இப்போது போனாலும் தரிசிக்க முடியும். மேற்படித் திருக்கோயில் இறையன்பர்களாலும், பலரின் பெரும் முயற்சிகளாலும், அப்போதைய அறநிலையத்துறையின் நிதியுதவியாலும் திருப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்டு, 23-06-2010 ஆண்டில் குடமுழுக்கு நடத்தப் பெற்றது.

இம்மன்னனுக்குப் பின் வந்த வரதுங்கராம பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் தென்காசியில் கி.பி.1588-ல் முடிசூட்டிக் கொண்டு அரசாண்டான். இவன் சிறந்த தமிழ்க் கவிஞனாகவும் இருந்தான். இம்மன்னனுக்குப்பின், கி.பி.1618-ல் வரகுணராமன் குலசேகரன் அரசு கட்டிலில் அமர்ந்திருந்தான். இம்மன்னனுக்குத் தீட்சிதர் என்ற சிறப்புப் பெயருண்டு. இவனைப்பற்றிய ஆதாரப்பூர்வமான கல்வெட்டுகள், "தென்காசி, குற்றால கோயில்களில் உளன."

இம்மன்னனுக்குப் பின்னர் கி.பி.1748-ல் வரகுணராம்ப் பாண்டியன் அரியணை ஏறினான். இம்மன்னன் தன்னைக் குலசேகரத் தீட்சிதர் என்று அழைக்கப் பெற்றுக் கொண்டான். தீட்சிதர் என்ற பெயர் பாண்டியனுக்குரிய பல்வேறு பெயர்களுள் இப்பெயரும் ஒன்று. இம்மன்னனுக்கு வாய்த்த பிள்ளைகள், தங்களுக்குள் மாறுபட்டு, தென்காசி நகரில், கீழக்கோட்டையிலிருந்தும், மேலக்கோட்டையிலிருந்தும் ஆட்சி செய்தனர்.

தங்களுக்குள் பகைமை தோன்றியபடி, ஒருவருக்கொருவர் எதிர்கொண்டு, வஞ்சகர் போல வாழ்ந்து மடிந்து போயினர். இம்மன்னர்களின் தேவிமார்களும், தங்களின் வழியினர் தென்காசி நகரோடு அழிந்தொழிய வேண்டும் என்று சாபத்தையும் ஈந்து விட்டு, தீயினுள் பாய்ந்து மாண்டு போயினார்கள். இது உண்மையென்பதற்கான ஆதாரமும் உள்ளன. பாண்டிய மன்னர்கள் சுரங்கப்பாதை வழியாக வஞ்சகமுடன் கொன்றொழிக்கப்பட்டனர்.

கீழக்கோட்டைக்கும் மேலக்கோட்டைக்கும் சுரங்கவழிப்பாதை இன்றும் உள்ளன. தென்காசி மருத்துவமனைக்கு அருகிலுள்ள குலசேகர நாதர் எனும் கோயிலில் சுரங்கப் பாதை இருப்பதை இன்று போனாலும் காணலாம். இதே போலவே, காசிவிசுவநாதர் திருக்கோயில் கருவூலத்தில் சுரங்கப்பாதை இருப்பதை இன்றும் காணமுடியும். இதுவே கீழக்கோட்டையும், மேலக்கோட்டையுமாகும்.

கவினழிந்த கோபுரம்

தென்காசியில் ஆண்ட கொற்றவர்களும் கோட்டையும் அழிந்து போன சமயம்.....முகமதியர்கள் தென்காசியைக் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கு நாட்டிலிருந்து வந்த நாயக்க மன்னர்கள் நெல்லைச் சீமையைக் கைப்பற்றி, தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக விளங்க, பாளையப் பாட்டுக்களையும் ஜமீன்களையும், உருவாக்கி ஆட்சி செய்து வந்தனர். பாளையப்பட்டுக்களால் உருவாக்கப்பட்ட ஜமீன்தார்கள் வரி வசூல் செய்து நாயக்க மன்னர்களுக்குக் கொடுத்து வந்தனர். இந்தச் சமயத்தில், மேல்நாட்டிலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியர்கள், நெல்லைச் சீமைக்கு வந்தனர்.

தங்கள் ஆட்சியை இங்கே நிலைநிறுத்தத் திட்டம் வகுத்தனர். அதற்கான வழி ஏற்படுவதற்காக, பாளையக்காரர்களுக்குள் உட்பகையை உருவாக்கித் தூண்டிவிட்டனர். முடிவில் கிழக்கிந்தியக் கம்பெனி, அவர்கள் வகுத்த திட்டம் அவர்களுக்குச் சாதகமாக்கி வெற்றியும் கண்டனர். திருநெல்வேலியிலிருந்த பாளையக்காரர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் ஆங்கிலச் சீமைக்காரன்களுக்கும், மக்களிடமிருந்து வரிவசூல் செய்வதில் தொடர்ச்சியாகப் போர் எழுந்த வண்ணம் இருந்தன.

ஜமீன்தார்களையும், பாளையக்காரர்களையும் அழிக்க, ஆங்கிலேயர்கள் புதுப் புதுவிதமான வரிச்சுமைகளை சுமத்தியும், புதிய புதிய வாரிசுகளையும் உருவாக்கியும் அதற்கான ஆவணங்களையும் திருத்தியும் எழுதி வைத்தனர். ஆங்கிலேயரின் அடாவச் செயலைக் கண்டவர்கள், கோயில்களிலும் மறைவிடங்களிலும் உரிமை முறை பற்றிய ஆவணங்களை மறைத்து வைக்க வேண்டிய சூழல் உருவானது.

உரிமை முறை ஆவணங்களை, அப்படி மறைத்து வைக்கப்பட்ட இடங்களில், ஒன்றுதான் தென்காசிக் கோபுரமும் ஒன்று. கோபுரத்திற்குள் இருக்கும் இடுக்கு மறைவிடங்களில், இந்த ஆவணங்களை ஒழித்து வைக்கப்பட்டன. உண்மையான வாரிசுகளை வஞ்சகம் செய்து, போலிகளை உருவாக்க எண்ணிய ஆங்கிலேயர்களுக்குப் போலியான வாரிசுகளும் துணையாகச் செயல்பட்டு வந்தனர்.

இதன் காரணமாய், தென்காசிக் கோபுரத்துக்குள் ஆவணம் ஒழித்து வைக்கப்பட்டிருப்பதை எப்படியோ அறிந்து விட்டனர் ஆங்கிலேயர்கள் ஆவணத்தை அழிக்க, பல வழிகளிலும் முயற்சி செய்த அவர்கள், நூறு நெருப்புப் பந்தங்களை தயார் செய்தனர். அந்தப் பந்தங்களை எண்ணெய்களில் மூழ்க வைத்து ஊறச்செய்தனர். ஒரே நேரத்தில் மொத்த எண்ணெய் பந்துகளிலும் தீயைப் பற்ற வைத்துக் கொண்டனர்.

அனைவரும் ஒன்று சேர, தென்காசிக் கோபுரத்திற்குள் ஏறி, நிலைப் படிகளில் தீப்பந்தங்களை செருகி செருகி வைத்து விட்டனர். மறைத்து வைத்த உண்மையான உரிமை முறை மூல ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகிப் போனது. இதில் வேதனைத் தரக்கூடியது, தீயில் எரிந்து சாம்பலாகிப் போனது ஆவணம் மட்டுமல்ல!, தென்காசிக் கோபுரமும் தான் என்பதுதான்.

இந்நிகழ்வு, திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பில் காணலாம். அதில்,1771-ம் ஆண்டு தென்காசியில் ஆவணக் காப்பகம் ஒன்று நெருப்புக்கு இரையாகியது என நூலிலிருப்பதை நோக்கத்தக்கது. பிற வேறொரு மற்றொரு குறிப்பில், 1814-ம் ஆண்டு தென்காசி வட்டக் கருவூல உட்பகை காரணமாக எழுந்த கருத்து வேற்றுமைகளினால், பாளையக்கார் ஒருவராலேதான் தீ வைத்துக் கொளுத்தப் பட்டதென கூறுகிறது.

செனக்கி எனும் வெளிநாட்டுப் பாதிரியார் ஒருவர் 1792-ல் வந்து கோபுரத்தை பார்வையிட்டார். இவர்....தென்காசி கோபுரத்தைக் கண்டு ஒரு குறிப்பு வரைந்துவிட்டுச் சென்றிருந்தார். அவர் வரைந்த அந்தக் குறிப்பில், "தென்காசி கோபுரம் அழகோவியமாய் காட்சியாகி, அதன் மேலுள்ள கடிகாரம் நேரக்குறிப்பை சரியாகக் காட்டிக் கொண்டிருந்தன"- எழுதி வரைந்திருந்தார்.

ஆனால், 1824-ல் நில அளவை சரிபார்த்த போது ஒரு குறிப்பை அளித்தனர். அந்தக் குறிப்பில், "தென்காசி கோபுரம் தீ வைக்கப் பெற்று, அழிந்து, பரிதாபப் பார்வையிலுள்ளது என எழுதியிருக்கின்றார்." திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பான அதே நூலில் 1796-ல் தென்காசிக் கோபுரத்தில் தீ வைக்கப்பட்டது என்கிறது.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்தோமானால், 1792-க்குப் பின்பும், 1824-க்கு முன்பும், உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்டிருந்த பகைமையாலும், வெள்ளையர்களின் சூழ்ச்சியாலும் உட்பகையாலும், ஆவணங்களை அழிப்பதற்காக வைக்கப்பட்ட நெருப்பு, ஆவணத்தோடு கோபுரமும் கவினழிந்து போய்விட்டன என்று தெரிய முடிகிறது.

மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் உருக்குபோல உருவாக்கப் பெற்ற கோபுரம், அரசியல் சூழ்ச்சியால் நெந்நாக்குத் தீக்களுக்கு இரையாகிப் போனது. (இடியும் மின்னலும் கோபுரத்தை தாக்கி அழித்ததாக நம்மில் நிறையவர்கள் சொல்வதும் கூறுவதுமாக உள்ளோம். அது உண்மை இல்லை. இடியும் மின்னலும் கோபுரத்தை தாக்கி அழிக்கவில்லை.)

தென்காசி ஆலயத்திற்கு "வராததோர் குற்றம்வரின் அதனைப் புரப்பவர்களின் திருவடித்தாமரைகளை உலகறியப் பணிந்தேன்" என்று நாடாண்ட மன்னன் பணிவோடு கசிந்துருகிருந்தான்!" 

பராக்கிரம பாண்டியனின் இந்த உருக்கமான வேண்டுகோளை,...... அப்போதே உருப்படாத அரசியல் சூழ்ச்சியினைக் கண்டு, இப்போது எண்ணிப் பார்க்கும்போது நெஞ்சு வலிக்கிறது. தென்காசிக் கோபுரம் முடி சாய்ந்து கவினழிந்து நிற்கும் காட்சியைக் கண்ட போதெல்லாம், தென்பாண்டிய மக்கள் நெஞ்சு உருகி உருகிப் போயினர். இவ்வூரில் இருப்போர், இக்கோர கருமையைக் கண்டு ஓயாமல் எவ்வளவு வேதனைக் கொண்டிருப்பர். முடிசாய்ந்த கோபுரத்தினைத் தலைநிமிரச் செய்ய, ஐயா ஒருவர் தர்மமிடுகிறார் என்று ஒரு தாய் தாலாட்டாய் பாடினாள்.

காசி வடகாசி
கண்கண்ட தென்காசி
தென்காசிக் கோபுரம்
சிரசு முடி சாயுதென்று
பொன் காசு தர்ம மிடும்

புண்ணியரே உங்கள் ஐயா". என்கிறது அந்தத் தாலாட்டுப் பாட்டு.

இந்தத் தாலாட்டைப் பாடியது செங்கோட்டையிலிருந்த தொழிலதிபர் ஒருவரின் அன்னையார் திருமதி.வி. ராஜாம்பாள் ஆவார்கள். பராக்கிரம பாண்டிய மன்னன் உருவாக்கிய கோபுரம் கலையிழந்து, கவினழிந்து, கரியாகப்பட்டு, பிளவாகி இரண்டாகப்பட்டு, இப்போது வானினை நோக்கி தீக்காயப்பட்ட கோபுரம் கதறி கதறி அழுதது.

"எண்ணை உயர்ந்து பார்த்து நோக்கச் செய்த பாண்டியனே!, நீ மீண்டும் இம்மன்னுலகில் பிறப்பாயாக! எண் தலையை நீ நிமிரச் செய்வாயாக! என, நூற்றி ஐம்பது ஆண்டுகளாகக் கதறி நெடிய தவம் செய்தது கவினழிந்த அந்தக்கோபுரம்."
        
- கோவை கு. கருப்பசாமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com