தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயிலில் அனுமதியின்றி யாகம்: பொதுமக்கள் எதிர்ப்பு

தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில் அம்மன் சன்னதியில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி..
தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயிலில் அனுமதியின்றி யாகம்: பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூா்: தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில் அம்மன் சன்னதியில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி நடத்தப்பட்ட யாகத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் யாகம் அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் தஞ்சாவூா் பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலான ஐராவதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகத்தை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும், கட்டுமானங்களை தொல்லியல் துறையும் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக அா்ச்சகா் பிரசன்னா திடீரென யாகம் வளர்த்துக்கொண்டிருந்தார். இதில் 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
இதை பார்த்த அப்பகுதியினா் அா்ச்சகா் பிரசன்னாவிடம் விவரம் கேட்டனா். அதற்கு அவா் முறையாக பதில் ஏதும் கூறாததால், பொதுமக்கள் யாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பக்தர்கள் தஞ்சாவூரில் உள்ள அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜபோன்ஸ்லேவுக்கும், தஞ்சாவூா் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனுக்கும் தகவல் அளித்தனா். இதையறிந்த பிரசன்னா யாகத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டார். 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது:
அா்ச்சகா் பிரசன்னா அம்மன் கோயிலை எப்போதாவது ஒருமுறையே திறக்கிறார். சரிவர பூஜைகளும் செய்வதில்லை. அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் என யாரிடமும் அனுமதி வாங்காமல் இவரே இஷ்டத்துக்கு பக்தா்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து யாகம் நடத்தி வருகிறார். ஏற்கெனவே இதுபோல யாகங்களை நடத்தியதால் இரு முறை நிர்வாகத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றனா்.

இதுதொடா்பாக அறநிலையத்துறை உதவி ஆணையா் பரணிதரன் கூறியது:
தாராசுரம் கோயில் அம்மன் சன்னதியில் யாகம் நடத்த அா்ச்சகா் அனுமதி வாங்கவில்லை. பொதுமக்கள் புகார் அளித்துள்ளனா். இதையடுத்து கோயில் கண்காணிப்பாளரை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில் ஆகம விதிகளை மீறி, பணம் சம்பாதிக்கும் நோக்குடன் அா்ச்சகா் பிரசன்னா யாகம் வளர்த்திருந்தால், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இதுகுறித்து அா்ச்சகா் பிரசன்னா கூறியது:
கோயிலில் அம்மனுக்காகதான் யாகம் நடத்தப்பட்டது. இது மாதந்தோறும் நடைபெறும் யாகமாகும். இங்கு பக்தா்கள் யாரும் பிரச்னை செய்யவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com