பக்த பிரகலாதனைப் போல் பிள்ளை பிறக்க வேண்டும் ஏன்?

நம் வம்சத்தில் பிரகலாதனைப்போல் சத் புத்திரன் நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும்...
பக்த பிரகலாதனைப் போல் பிள்ளை பிறக்க வேண்டும் ஏன்?

நம் வம்சத்தில் பிரகலாதனைப்போல் சத் புத்திரன் நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் எதிர்பார்ப்பதுண்டு. 

அராஜகத்தின் உச்சத்தில் இரண்யனை வதம் செய்ய நரசிம்மர் தூணைப் பிளந்து வெளி வந்தார். அதி பயங்கர ஆக்ரோஷ உருவம் சிங்க முகம் மனித உடல் இதுவரை யாரும் கண்டிராத வித்தியாசமான கலவை இதைக் கண்டவுடன் இரண்யனின் பணியாட்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்

தனிமையில் நின்ற இரண்யனை நரஸிம்மன் அப்படியே தூக்கி மடியில் வைத்து குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டு வதம் செய்தார். இதைக் கண்டு வானவர்கள்  நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை அவர் அருகில் செல்லும் தகுதி பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. 

தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அந்த அவதாரம் எடுத்திருக்கிறார். பாலகன் அவன் அறிந்த ஒன்றே ஒன்று "ஓம் நமோ நாராயணா" என்னும் திருமந்திரம். 

பத்து அவதாரங்களில் ஒரு பாலகனுக்காக எடுத்த அவதாரம் தண்ணருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா என்னை மன்னிப்பாயா என்றார்...

அவனுக்குத் தூக்கி வாரிபோட்டது.

சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள் என்றான்.

உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். 

சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காகப் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய் உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன் அதற்காகத்தான் மன்னிப்பு என்றார்.

இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. 

மகனே என்னிடம் ஏதாவது வரம் கேள்! என்ற நரசிம்மரிடம்...

ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல. பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. 

பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான்.  

நரசிம்மப் பெருமான். இந்தச் சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது. ஆசை வேண்டாம் என்கிறானே ஆனாலும் அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார். 

இல்லையில்லை ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் பகவானே இப்படிச் சொல்கிறார் என்றால் தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன் பகவானே என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார் அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள் என்றான்.

நரசிம்மர் அவனிடம், பிரகலாதா உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர் என்றார். 

நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது. 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com