திருமலையில் 2 பிரம்மோற்சவங்களுக்கான ஏற்பாடுகளில் தேவஸ்தானம் தீவிரம்

திருமலையில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு அவற்றுக்கான முன்னேற்பாடுகள்
பிரம்மோற்சவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருமலையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பேசியதேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு
பிரம்மோற்சவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருமலையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பேசியதேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு

திருமலையில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு அவற்றுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.
பிரம்மோற்சவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருமலையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆகம விதிகளின்படி, இந்த ஆண்டு அதிக மாதங்கள் உள்ள காரணத்தால் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. வரும் செப்டம்பர் 13 முதல் 21ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 10 முதல் 18ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் செய்யப்படும்.
முதலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம், ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தல், தேரோட்டம் உள்ளிட்டவை நடைபெறும். இரண்டாவதாக நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இந்த அம்சங்கள் இடம்பெறாது. 
கடந்த ஆண்டு நடைபெற்றதைப் போலவே இந்த ஆண்டும் காலை நேர வாகனச் சேவை 9 மணிமுதல் 11 மணி வரையிலும், இரவு நேர வாகனச் சேவை 8 மணிமுதல் 10 மணி வரையும் நடைபெறும். கருட சேவை மட்டும் மாலை 7 மணிக்குத் தொடங்கும். அதனால் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற உள்ள பௌர்ணமி கருட சேவையை பிரம்மோற்சவ வெள்ளோட்ட கருட சேவையாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 
திருக்குளம் மூடல்: பிரம்மோற்சவத்திற்காக திருமலையில் உள்ள திருக்குளம் ஜூலை 10ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மூடப்பட உள்ளது. அதிலுள்ள பழைய நீர் அகற்றப்பட்டு, செப்பனிடும், பணிகள், சுண்ணாம்பு அடித்தல், ரங்கோலிக் கோலங்கள் வரைதல், குழாய்கள் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவை முடித்த பின் புதிய நீர் நிரப்பப்பட உள்ளது. இம்முறை 30 நாள்களுக்கு திருக்குளம் மூடப்பட உள்ளதால் பராமரிப்புப் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்பில்லை.
ரத்து: பிரம்மோற்சவ நாள்களில் திருமலையில் விஐபி பிரேக் தரிசனங்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான தரிசனங்கள் ஆகியவ ரத்து செய்யப்படும். அந்நாள்களில் வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும். பரிந்துரைக் கடிதங்களும் ஏற்கப்பட மாட்டது. செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கருட
சேவையின்போது முற்றிலும் விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படும். 
அரங்குகள்: திருமலை மாடவீதிகளில் உள்ள பார்வையாளர் அரங்குகள் (கேலரிகள்) சற்று விரிவுபடுத்தப்பட உள்ளன. தற்போது 1.6 லட்சம் பக்தர்கள் அமர்ந்து வாகனச் சேவைகளைக் காணும் இந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது கூடுதலாக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் தெற்கு மாடவீதியில் விரிவாக்கப்பட உள்ளன. மேலும் வாகனச் சேவை நடைபெறும் சமயங்களில் தரிசனம் முடித்து வெளியில் வரும் பக்தர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் லட்டு கவுன்ட்டர் அருகிலிருந்து அவர்கள் செல்ல வழி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின் விளக்கு அலங்காரம், பொறியியல் பணிகள், நந்தவனம் அமைத்தல், மலர் அலங்காரம் உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 
மகா சம்ப்ரோக்ஷணம்: வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஏழுமலையான் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் பாலாலயத்தை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் மாதம் மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு திருக்குளத்தை விரைவாக மூடி பராமரிப்புப் பணிகளைத் தொடங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அனைத்துப் பணிகளும் ஆகம ஆலோசகர்கள், பண்டிதர்கள், திருமலை ஜீயர்களிடம் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com