இசைத்துறையில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கா? உலக இசை தினம் கூறும் ரகசியங்கள்!

இசை என்பது ஜாதி, மதம், மொழி, இனம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது இசை.
இசைத்துறையில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கா? உலக இசை தினம் கூறும் ரகசியங்கள்!

இசை என்பது ஜாதி, மதம், மொழி, இனம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது இசை. இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு. இசை பொழுது போக்கு சாதனம் மட்டுமன்றி கவலை மற்றும் நோய் தீர்க்கும் அரு மருந்தாகவும் செயல்படுகிறது. வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. 
 
ஜோதிடத்தில் "குணப்படுத்துதல்" என்ற வார்த்தையின் அதிபதி சுக்கிரன் தான். நாம் படும் பிரசனை அனைத்திலிருந்தும் விடுதலைத் தருபவர் சுக்கிரன். கருவரை முதல் கல்லரை வரை நமக்கு பணம் தேவைப்படுகிறது. பணப்புழக்கத்தைத் தரும் கிரகம் சுக்கிரன் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே! எந்தொரு பிரச்னையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன்.

ரோமானியர்களும் கூட வீனஸ் தேவதையை (அதாங்க நம்ம ஊர் சுக்கிரன்) குணமளிக்கும் கடவுளாகப் போற்றுகின்றனர். அவர்களும் வீனஸ் தேவதையை தாய் மற்றும் திருமணத்திற்கான பெண் தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர். வீனஸ் தேவதை கடல் நுரையில் தோன்றியதாக கூறுகின்றனர். நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலகக்ஷமி தாயார் பாற்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா? துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். மனதிற்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம்.

ராகங்களின் பயன்கள்:

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்

அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்

சிறுநீரகப் பிரச்னை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி 

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி, சகானா, நீலாம்பரி

மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி, ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான

மனதை வசீகரிக்க, மயக்க - ஆனந்த பைரவி, உசேனி, கரகரப்பிரியா

சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா

பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர - நாஜீவதாரா

இசைக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு:

ஜோதிடத்திற்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனக் கூறுகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் 12 ஸ்வரங்களை 12 ராசிகளோடு இணைத்துப் பார்க்கின்றனர். நவக்கிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒரே சீரான வேகத்தில் செல்லும் கிரகங்களாகும் அதேபோல சங்கீதத்தில் ஸட்ஜா மற்றும் பஞ்சம ஸ்வரங்கள் ஒரே சீரான தாளகதியைக் கொண்ட ஸ்வரங்கள் என்று கூறுவதோடு அதைக் கடக சிம்ம ராசிகளோடு இணைக்கின்றனர்.

நாதம் என்றால் ஒலி அதாவது ஒழுங்கு ஒழுங்கற்ற இரண்டும் நாதம் தான் ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலியின் காரணமாக மனதிற்குப் பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது, நாதம் தான் உலக உயிர்களும் தோன்ற காரணமாக உள்ளது என்பது வேத தத்துவம் அதனால் தான் இறைவனுக்கு விஸ்வநாதன், ராமநாதன் என்றெல்லாம் பெயர்கள் சூட்ட பெற்றன மீதியுள்ள பத்து ஸ்வரங்களை இரண்டிரண்டாக பிரித்து ஐந்து குழுக்களாக சவ்விய அபசவ்விய முறையில் தொகுத்து ஐந்து கிரகங்களோடு பின்வருமாறு ஒப்பிடுகின்றனர்

கன்னி ராசி - சுத்த ரிஷபம்

துலா ராசி -  சதுஸ்ருதி ரிஷபம்

விருச்சிக ராசி - சாதாரண காந்தாரம்

தனுசு ராசி - அந்தர காந்தாரம்

மிதுன ராசி - காகளி நிஷாதம்

ரிஷபராசி - கைசிக நிஷாதம்

மேஷ ராசி - சதுஸ்ருதி தேவதம்

மீன ராசி - சுத்த தேவதம்

மகர ராசி - சுத்த மத்யமம்

கும்ப ராசி - ப்ரதி மத்யமம்

மழைக்கும் காரண கிரகம் சுக்கிரனை. அம்ருத வர்ஷினி ராகத்தை இசைத்து மழையைக் கூட வரவைத்துள்ளனர் நமது முன்னோர்கள். மார்கழி மாதத்தில் விடியலில் பாடும் திருப்பாவையில் நான்காம் பாசுரமாக வரும் "ஆழி மழைக்கண்ணா" எனத்தொடங்கும் பாசுரத்தை அமிர்தவர்ஷினி அல்லது மேக ரஞ்சனி ராகத்தில் பக்தியுடன் பாட மழை வர்ஷிக்கும் என்பது நிதர்சனம்.

எட்டயபுரம் பகுதியில் வறட்சி நிலவியதைப் பார்த்து வருத்தம் அடைந்த முத்து சுவாமி தீட்சிதர், அமிர்த வர்ஷினி ராகத்தில் "ஆனந்த அம்ருதகர்ஷினி" என்ற பாடலைப் பாடியவுடன் மழை கொட்டியது என்பது செவிவழிச்செய்தியாகும்.
 
ஒருவர் இசையில் சிறந்து விளங்க சுக்கிரனின் பலம் ஜாதகத்தில் மிக அவசியமாகும். ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க தொடர்புள்ள பாவங்கள் காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபம், தொண்டையைக் குறிக்கும் மிதுனம் மக்களிடையே பிரபலமாக ஏழாம் பாவம் மற்றும் ஜென வசிய ராசியான துலாம் ஆகிய வீடு மற்றும் அதிபதிகள் சுப பலத்துடன் விளங்க வேண்டும்.

இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு, சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும். சாதாரண பேச்சிற்கு வாக்கு ஸ்தான பலமும் புத பலமும் போதும். ஆனால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம். பொதுவாகவே மனோகாரகன் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரனின் இணைவு ஒருவரைக் கலைத்துறையில் பிரபலமடையச் செய்யும்.

இசையில் சிறந்து விளங்கும் கிரக அமைப்பு

சரஸ்வதி யோகம்:

தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். மேலும் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் மற்றுமல்லாது இயல், இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ச்சி, தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும். 

கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. 'கச்சபி' என்பது சரஸ்வதியின் வீணை. 'விபஞ்ச்யா காயந்தீ' என்ற 'ஸெளந்தர்ய லஹரி' ஸ்லோகத்தில், சரஸ்வதியானவள் அம்பிகையின் சந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே 'விபஞ்சி'வாசிக்கிறாள் என்று ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார். 'விபஞ்சி' என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

மாளவியா யோகம்: 

சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் மற்றும் உச்ச வீடான மீனத்தில் சுக்கிரன் அமர்ந்து அந்த வீடுகள் லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர வீடுகளாக (1,4,7,10) அமைந்திருந்தால் பஞ்ச மகா புருஷ யோகங்களில் சுக்கிரனால் ஏற்படும் சிறந்த யோகமான மாளவியா யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் இசைத்துறையில் ஏதாவது ஒரு வகையில் புகழ் பெறுவதோடு சுக வாழ்வு, அழகான மனைவி, செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆடை, ஆபரணங்கள், பெண்களால் அனுகூலம் போன்ற அனைத்து சிறப்புகளையும் பெற்று விளங்குவார்கள்.

இசைத்துறையில் சிறந்து விளங்க பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறும் கிரஹ அமைப்புகள்:

1. ஜெனரஞ்சக சுக்கிரனின் ராசிகளான ரிஷபம் மற்றும் துலா ராசிகளை லக்னம், ராசி அல்லது வாக்கு ஸ்தானமாக கொண்டிருப்பது.

2. லக்னத்திலோ, ராசியிலோ அல்லது வாக்கு ஸ்தானத்திலோ சுக்கிரனை கொண்டிருப்பது.

3. காற்று ராசியான மிதுனத்தில் சுக்கிரன் புதனுடன் சேர்க்கை பெற்று நிற்பது.

4. மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகத்தைப் பெற்று புதனுடன் தொடர்பு கொண்டிருப்பது.

5. மிதுனம்/கன்னியில் புதன் நின்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகத்தில் புதனால் ஏற்படும் பத்ர யோகம் பெற்று சுக்கிரன் மற்றும் சந்திரனுடன் தொடர்பில் நிற்பது.

6. மீன லக்னமாகி நான்காம் வீடு மிதுனமாகி சுக்கிரன் திக் பலம் சுப பலம் பெற்று நிற்பது.

செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் ஜாதகம்:

புகழ்பெற்ற இசை மேதையான செம்மங்குடி திரு ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் ஜாதகத்தில் மீன லக்னமாகி லக்னத்தில் காற்று ராசியான சனைச்சர பகவான் நின்று நான்காம் பாவமான மிதுனத்தில் சந்திரன், ஆட்சி பலம் மற்றும் பத்ர யோகம் பெற்ற புதன், திக்பலம் பெற்ற சுக்கிரன் இவர்களோடு ராகுவும் சேர்ந்து நின்று பத்தாம் பாவத்தோடு தொடர்பு பெற்றதால் இசைத்துறையில் புகழ்பெறச்செய்ததோடு 1947ல் இளம்வயதிலேயே மியூசிக் அகாதமியின் சிறப்பு மிக்க "சங்கீத கலாநிதி" பட்டத்தைப் பெறச்செய்தது. மேலும் மத்திய அரசிடமிருந்து பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற சிறந்த விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல் சங்கீத நாடக அகாதமி விருது, தமிழக அரசின் இசை பேரறிஞர் விருது, மத்திய பிரதேச அரசின் காளிதாஸ் சம்மான் விருது போன்ற புகழ்மிக்க பல பட்டங்களை பெறச் செய்தது.

எம்.எஸ் சுப்புலக்ஷ்மி ஜாதகம்:

கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள் தனது தேன் மதுர பக்தி ரசம் சொட்டும் குரலால் மக்களைக் கவர்ந்தவர். இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்த பெருமை இவரையே சாரும். உலகின் பல நாடுகளுக்கு கலாச்சாரத் தூதராகச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய இசையை உலகில் பரவச் செய்தார். ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய பெருமையும் இவரைச் சாரும். மகாத்மா காந்தி முதல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை என அன்றைய  தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை உள்ளவர்களைத் தனது ரசிகர்களாகக் கொண்டவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, ஆசியாவின் நோபல் பரிசு என வர்ணிக்கப்படும் மகசேசே உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, வங்காளம் எனப் பல மொழிகளில் பாடியுள்ளார்.

எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களின் ஜாதகத்தில் 

அனைவரையும் தனது இசையால் கட்டிப்போடும் மறைந்த M S சுப்புலட்சுமி அம்மையாரின் ஜாதகத்தில் துலா லக்னமாக அமைந்து லக்னாதிபதி நீர் ராசி மற்றும் சந்திரனின் வீடான கடகத்தில் நின்று அதுவே சந்திர கேந்திரமாகவும் லக்ன கேந்திரமாகவும் அமைந்தது. இசைத்துறையில் சிறந்து விளங்கும் அமைப்பை ஏற்படுத்தியது, மேலும் பாக்கிய ஸ்தானாதிபதி புதன் உச்சமடைந்ததும் சர்ப கிரஹமான ராகுவிற்கு நான்கு கேந்திரங்களிலும் கிரஹங்கள் நின்று ராஜ யோகத்தைத் தரும் அமைப்பையும் ஏற்படுத்தியது அவரை இசை உலகில் உச்சத்தைத் தொட வைத்தது எனலாம்.

சங்கீதத்தில் புகழ்பெற வணங்கவேண்டிய பரிகார ஸ்தலங்கள்:

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான ச்யாமளாதேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கி வருவது சங்கீத துறையில் ஒருவரைப் பிரபலமடைய செய்யும்.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் சங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. 'கச்சபி' என்பது சரஸ்வதியின் வீணை. 'விபஞ்ச்யா காயந்தீ' என்ற 'ஸெளந்தர்ய லஹரி' ஸ்லோகத்தில், சரஸ்வதியானவள் அம்பிகையின் சந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே 'விபஞ்சி' வாசிக்கிறாள் என்று ஆதிசங்கர பகவத் பாதாள் வர்ணித்திருக்கிறார். 'விபஞ்சி' என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

சங்கீதத்தில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் திருமரைக்காடு எனப்படும் வேதாரன்யம் ஆகும். இங்குள்ள அம்பாளின் திருநாமம் வீணா வாதவிதூஷனி எனும் வேதநாயகியாகும். இந்த அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணைநாதத்தை தோற்கடிக்குபடி இனிமையாக இருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது.  மேலும் சுக்கிர ஸ்தலங்களையும், ஸ்ரீ மகாலக்ஷமி வழிபாடும், சப்த கன்னியரில் இந்திரானி வழிபாடும் இசையில் சிறந்த தேர்ச்சியும் புகழும் அடையச் செய்யும்.

- .௮ஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

Whatsapp- 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com