திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 10ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் மாசித் திருவிழா பத்தாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
திருச்செந்தூர் மாசித் திருவிழா பத்தாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 10ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 20ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும் மாலையும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. 7ஆம் நாளான திங்கள்கிழமை மாலை சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்திலும், 8ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், மாலையில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் சுவாமி வீதியுலா வந்து, புதன்கிழமை காலை கோயில் சேர்ந்தார். தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான், அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி வேட்டை வெளி மண்டபத்துக்கு திருக்கண் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
9ஆம் நாளான புதன்கிழமை சுவாமி பகலில் பல்லக்கிலும், இரவில் தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அதிகாலை 5.45 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 6.30 மணிக்கு நிலையை அடைந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து 8.30 மணிக்கு நிலையை அடைந்தது. இதையடுத்து, தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேர், காலை 9.50 மணிக்கு நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷம் விண்ணதிர முழங்க, வடம்பிடித்துத் தேரை இழுத்தனர். இரவில் சுவாமி, அம்மன் பெரிய பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தேரோட்ட நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. 
தெப்பத் திருவிழா: 11ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 2) இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. சனிக்கிழமை 12ஆம் திருநாளுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com