உங்கள் தாம்பத்திய வாழ்வு திருப்தியாக அமையவில்லையா? வசிய பொருத்தம் இருக்கான்னு பாருங்க!

நேற்று நாடு முழுவது ஹோலிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும்..
உங்கள் தாம்பத்திய வாழ்வு திருப்தியாக அமையவில்லையா? வசிய பொருத்தம் இருக்கான்னு பாருங்க!

நேற்று நாடு முழுவது ஹோலிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். மனிதனின் பருவகால மாற்றத்தை விழாக்கள் எடுத்துக் கொண்டாடுவது இயல்பு. ஆனால், இயற்கையோடு பருவகால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி. மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். இந்தப் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும்.

ஹோலிப்பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் வட இந்திய மக்களே இதை அதிகமாகக் கொண்டாடுகின்றனர். ஹோலிப் பண்டிகை என்று வட இந்தியாவில் கொண்டாடப்படுவது வண்ணத் திருவிழா.

இது வட இந்தியர்களின் பால்குனம் எனும் பங்குனி மாதப் பூர்த்தியில் பௌர்ணமியன்றுக் கொண்டாடப்படுகிறது. குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். சில இடங்களில், ஹோலிக்கான ஏற்பாடுகள் வசந்த பஞ்சமியன்றேத் துவங்கி ஒரு மண்டலம்  நடைபெற்று முடிவில் ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வங்காளத்தில் வசந்தோஸ்தவமாகவே கொண்டாடப்படுகிறது.

பொதுவாக பனி காலத்திலிருந்து வெயில் காலம் மாறுவதை வசந்த காலம் என்பர். இந்த வசந்த காலத்தில் நச்சுயிரி சார்ந்த காய்ச்சல் சளியும் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை ஏறிந்து விளையாடுகின்றனர். இந்த வண்ணங்கள் ஆயுர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யப்படுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. 

ஹோலிகா தகனமே ஹோலி

ஹோலிகா தகனமே ஹோலியாக கொண்டாடப்படுகிறது என ஒரு கருத்து உண்டு. ஹிரண்ய கஷ்யப் (கஷ்யப் என்பது அவனது குலப் பெயர்; அவன் கஷ்யப முனிவருக்கும் தக்ஷனின் மகள் திதிக்கும் பிறந்தவன்) தன் மகன் ப்ரஹ்லாதனைக் கொல்ல ஆணையிட அவனுடையப் படை அதை முடிக்க முடியாமல் தவித்ததால் அவனுடையத் தங்கை ஹோலிகா ப்ரஹ்லாதனை தன்னுடன் வைத்து எரியூட்டும்படியும், தான் பெற்ற சிறப்புப் போர்வையால் போர்த்திக் கொண்டு தான் எரியாமல் ப்ரஹ்லாதனைப் பிடித்துக் கொண்டு அவனை அழித்துவிடலாம் என்று யோசனைக் கூற, ஹிரண்யனும் அவ்வாறேச் சிதை மூட்டினான்.

ஆனால், விஷ்ணுவின் அருளால் போர்வை நழுவி, ப்ரஹ்லாதன் மேல் விழுந்து அவனை மூடிக்கொள்ள, ஹோலிகா எரிந்து சாம்பலானாள். அதுதான் ஹோலிகா தகனம். 

காம தகனமே ஹோலி

ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவபெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார்.

உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரைத் திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழச் செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப் பல புராண கதைகளைக் கொண்ட ஹோலிக்கு உள்ள ஜோதிட தொடர்புதான் என்ன?

ஜோதிடமும் ஹோலியும்

உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் (மகான்கள் மற்றும் பரிசுத்தமான ஆன்மீகவாதிகள் நீங்கலாக) யாராவது இருக்கிறார்களா?  கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். ஆமாம்! பெண்களைப் பிடிக்காதவர்களும் இருக்கமாட்டார்கள். அழகில் மயங்காதவர்களும் இருக்கமாட்டார்கள். அப்படி யாராவது இருந்தால் அவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்களாகவும் இன்னும் பிறக்காதவர்களாகவும்தான் இருப்பார்கள். இன்று பல துறவிகள் கூட பெண்களின் கூட்டத்திற்கு இடையில்தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்குச் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.

சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவதும் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இரண்டிற்குமே காரகர் இன்றைய ஹீரோ சுக்கிர பகவான் தாங்க!

வண்ணங்களைத் தூவி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விழாவான ஹோலி பண்டிகையின் காரகர் இன்றைய அதிபதியான சுக்கிர பகவானே என்கிறது பாரம்பரிய ஜோதிடம், ஆம்! வண்ணங்கள், மகிழ்ச்சி, உற்சாகம், விழா, கோலாகலம், கூதுகுலம், பெண்கள் காதல், காமம் இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரனே! ஆண்மைக்கும் விந்து உற்பத்திக்கும் காரகர் சுக்கிரன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெறியும்தானே! 

மேலும் குளிர்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரபகவானே என்கிறது பாரம்பரிய ஜோதிடம். விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவையனைத்திற்கும் காரகர் சுக்கிரன். காதல், காதலர்கள் இரண்டிற்குமே காரகர் சுக்கிரனேதாங்க! 

பொதுவாக வண்ணங்களுக்கு சுக்கிரன் காரகர் என்றாலும் விவரிக்க இயலாத வண்ணங்களுக்கு புத பகவானும் காரகர் ஆகின்றார். வண்ணங்களுக்கான பாவம் கால புருஷனுக்கு ஆறாம்பாவம் மற்றும் புதனின் வீடான கன்னி ராசியாகும். 

யாரெல்லாம் ஹோலியை கொண்டாடுவார்கள்?

ஹோலிப்பண்டிகையை விரும்பி கொண்டாடுபவர்களின் ஜாதகங்களில் எல்லாம் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும். என்றாலும் கீழ்க்கண்ட அமைப்பினை 

கொண்டவர்கள் ஹோலியை மிகவும் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். இந்த அமைப்புள்ளவர்கள் காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையிலும் சிறந்து விளங்குவார்கள்:

1. லக்னம் ஜன ரஞ்சக ராசிகள் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாமாக இருப்பது.

2. லக்னத்திலேயே சுக்கிரன் ஆட்சி அல்லது உச்ச பலத்துடன் இருப்பது.

3. கால புருஷனுக்கு இரண்டு மற்றும் ஏழாம் வீட்டதிபதியான சுக்கிரன் மூன்று மற்றும் ஆறாம் அதிபதியான புதனுடன் பரிவர்தனை பெற்று நிற்பது.

4. ஜாதக ஆறாம் வீட்டு அதிபனும் கால புருஷனுக்கு ஆறாம் வீட்டு அதிபனும் சுப தொடர்பில் இருப்பது.
 

5. சுக்கிரன் ஆட்சி உச்சம், திக்பலம் மற்றும் மாளவியா யோகம் போன்ற சுபயோகங்களை பெற்று புதனுடன் சேர்க்கை பெற்றிருப்பது. 
 
6. புதன் பஞ்ச மகா புருஷ யோகங்களில் பத்ர யோகம் பெற்று சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று நிற்பது.
 
7. சந்திரன், புதன், சுக்கிரன் மூவரும் கன்னியில் இனைந்து நின்று நீச பங்க ராஜயோகம் பெற்று நிற்பது.
 
6. சுக்கிரனும் புதனும் பல வர்க சக்கரங்களில் வர்கோத்தமம் பெறுவது.

7. சுக்கிரன் 6/8/12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பது.
 
8. புதன்-சுக்கிர இணைவு காதலுக்கு வழிவகுக்கிறது. இவர்கள் இருவரின் இணைவு மதன கோபால யோகத்தை தருவதாக ஜோதிஷார்னவ நவநீதம் போன்ற பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

 9. கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. கணவன் மனைவி இருவரும் 

ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பில் இணைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். 

திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும், சண்டை போட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலைக் காரணமாக கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும், வியாபாரத்தில் பிரச்னை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும், அனைத்துப் பகைவர்களும் 

நட்பு பாராட்ட விரும்புபவர்களும் சுக்கிர பகவானை வணங்குவது சிறந்த பலனளிக்கும். காம தேவனான மன்மதனை வணங்குவதும் சிறந்த பலனளிக்கும் என்பது நம்பிக்கை.

1. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்கு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தாம்பத்திய பிரச்சனைகள் தீரும்.

2. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

3.சேலம் மாவட்டம் ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன் ஈசனைப் பூஜித்ததால் இறைவன் அருள்மிகு காம நாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்தத் தலத்து இறைவனையும் இறைவியையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வரக் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிணக்குகள் நீங்கி அன்னியோன்யம் பிறக்கும்.

4. குமார சம்பவம் அதாவது முருகனின் திருஅவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின் மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட தர்மபுரியாகும். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மனைத் தரிசித்துவர திருமண பாக்கியம் கிட்டுவதோடு தாம்பத்திய உறவும் நன்கு அமையும்.

5. மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர் மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகால நாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான். இந்தத் தலத்தில் மன்மதனை வணங்கி வர காதல் பிரச்னைகளும் தீரும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com