பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் திருவுடையம்மன்!

தினமும் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளில் ஒரே ஒரு பசு மட்டும் சரியாகவே பால் கறப்பதில்லை. எதனால் இவ்வாறு நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க...
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் திருவுடையம்மன்!

தினமும் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளில் ஒரே ஒரு பசு மட்டும் சரியாகவே பால் கறப்பதில்லை. எதனால் இவ்வாறு நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க தீர்மானித்துச் சென்றபோது, அடர்ந்த காட்டில் முள்புதர்களுக்கு நடுவில் ஓர் இடத்தில் பசு தானாகவே பால் சொரிவதைக் கண்டனர். அப்போது, புதருக்குள் இருந்த நாகம் ஒன்று அந்த பசுவின் பாலை அருந்துவதையும் கண்டு அதிர்ந்தனர். பசு அங்கிருந்து சென்ற பின்னர், புதருக்குள் சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது. அங்கே, அவர்கள் கண்டது சிவலிங்க வடிவிலான புற்று!

பொன்னேரி ஊராட்சியில் உள்ள மேலூரில் அருள்மிகு திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் புற்று வடிவிலானவர். கவசம் சாத்தப்பெற்று காட்சியளிக்கிறார். புற்று இருந்த இடத்தில் நல்ல மணம் வீசியதால் இறைவனுக்கு "திருமணங்கீஸ்வரர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்த மேலூர் சிவாலயத்தை மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் சுந்தர பாண்டியனும் கட்டியதாக வரலாறு! 

திருக்கோயிலில் நுழைந்தவுடன் திருவுடையம்மன் சந்நிதியை நாம் காணலாம். இச்சந்நிதிக்கு எதிரே 16 கால் மண்டபம் உள்ளது. இது மன்னர்கள் காலத்தில் சுங்கவரி வசூலிக்கும் இடமாகும். இந்த மண்டபத்திற்கும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. 

ஒருமுறை, வியாபாரி ஒருவர் மாட்டுவண்டியில் மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இவ்விடத்திற்கு வந்தார். மிளகுக்கு வரி கட்டவேண்டும் என்பதால் மூட்டையில் பயறு இருப்பதாக பொய் சொன்னார். 

அங்கிருந்த அதிகாரி அம்மனின் தீவிர பக்தர். அதிகாரி மூட்டையை சோதனையிட்டார். மூட்டைகளில் இருந்த மிளகுகள் பயறுகளாக மாறிவிட்டன. வியாபாரி கதறி அழுதார். தாம் செய்த தவறுக்காக மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்ய வேண்டி, இவ்வாலயத்துக்கு 16 கால் மண்டபத்தைக் கட்டிக் கொடுத்தார். 
திருச்சுற்றில் விநாயகர், தென்முகக் கடவுள், நாகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், துர்க்கை, வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் என அமைந்துள்ளனர். வடக்கு கோஷ்ட மாடத்தில் பிரம்ம தேவர் தாடியுடன் காணப்படுகிறார். அவர், இங்கு "யோக பிரம்மா' எனப்படுகிறார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் இவ்வாலயத்தின் அம்பிகையான திருவுடையம்மன், தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். அன்னை நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சியளிக்கிறாள். அம்பிகை எவ்வாறு உருவானாள் என்பதற்கும் வரலாறு உண்டு. 

பாண்டிய மன்னன், சிற்பியிடம் அம்பிகையின் சிற்பத்தை வடிக்கச் சொல்கிறார். அதன்படி, சிற்பி மலையில் கல்லைத் தேடி தேர்ந்தெடுக்கிறான். 

மலையிலிருந்து கல்லை நகர்த்தி வரும்போது சற்று இடறி மேலிருந்து கீழே விழுந்த கல் மூன்று பகுதிகளாக உடைந்து விடுகிறது. சிற்பி என்ன செய்வது என்று புரியாமல் நடுங்கிப் போக, பராசக்தி, அம் மூன்று கல்லிலும் தன் ரூபமாக " இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி' என்று மூன்று அம்மன்களை உருவாக்குமாறு அசரீரியாக சொல்கிறார். அதன்படி, மூன்று அம்மன்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் மூன்று கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். 

இம் மூவரில் இச்சா சக்தியாக உருவாக்கப்பட்டரே திருவுடையம்மன்! அடுத்ததாக, ஞானசக்தியான வடிவுடையம்மன். மூன்றாவதாக கிரியா சக்தியான கொடியிடையம்மன்! திருவுடையம்மனை குங்குமத்தால் அர்ச்சித்தும்,ஆடை அலங்காரம் செய்தும் மஞ்சள் காப்பிட்டும் வழிபடுவதால் நாம் வேண்டும் நற்காரியங்கள் அனைத்தும் உடனே கைகூடும். நமது விருப்பங்களும் நிறைவேறும். இவ்வாலயத்தில் வார, மாத வழிபாடுகளுடன் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வெள்ளிக்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் தினத்தில் மேலூர் திருவுடையம்மனை காலையிலும்; திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் சந்நிதி கொண்டுள்ள வடிவுடையம்மனை மதியவேளையிலும்; வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் சந்நிதி கொண்டுள்ள கொடியிடையம்மனை மாலை வேளையிலும் தரிசிக்க வேண்டும் என்பது வழிமுறையாகும். இந்த முப்பெரும் தேவியரையும் ஒருசேர தரிசிப்பதால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com