கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் - பகுதி 10

திருக்கைலாச மலையிலே சிவபெருமான் தனது திருவுருவைக் கண்ணாடியில் பார்த்து அழைத்ததாலும்,
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் - பகுதி 10


திருக்கைலாச மலையிலே சிவபெருமான் தனது திருவுருவைக் கண்ணாடியில் பார்த்து அழைத்ததாலும், அதனின்று ஒருவர் சுந்தரர் என்னும் திருநாமத்தைக்
கொண்டவரானார். ஆலகால விஷத்தை அமுது செய்யும்படி அச்சிவபிரானுக்குத் திரட்டிக் கொடுத்தமையால் "ஆலால சுந்தரர்" என்னும் திருநாமத்தையும் பெற்றுத் திருத்தொண்டுகள் செய்து வந்தார்.

ஒரு நாள், சிவபிரானுக்குத் திருப்பள்ளித் தாமங்கொய்யச் சென்றார். அப்பொழுது, உமாதேவியாருக்கு மலர்கள் கொய்யும்படி, அநிந்திதை, கமலினி என்னும் இரண்டு மாதருர்களும் திருநந்தவனத்தில் மலர்களைச் சேகரித்தனர். அங்கே அவ்விருவரின் அழகுகளையும் ஒருவராகிய சுந்தரர் நோக்க, அவ்வொருவரும் அழகர் சுந்தரரை இரண்டு மகளிரும் பார்த்தனர்.

பின்பு மந்தகாசத்தோடு சுந்தரர் சிவபிரானிடத்துச் சென்றார். நெகிழ்ந்த மனத்தோடு இரு பெண்களும் உமாதேவியாரிடத்தும் சென்றனர். சிவபிரான் சுந்தரரை நோக்கி மானுடப் பிறவியிற் சேர்த்தார். சுந்தரர், திருநாவலூர் ஆதி சைவ வேதியராகிய சடையனாரிடத்தே அவதரித்து ஆரூரனென்னும் திருப்பேர் பூண்டனர். அவ்விரண்டு மாதரும் கமலினியார் திருவாரூரில், உருத்திரகணிகையர் மரபிலே அவதரித்துப் பரவையாரென்னும் பெயர் பெற்றனர். அநிந்ததையார், ஞாயிறு என்னும் தலத்திலே, வேளாளர் குலத்தில் அவதரித்து, சங்கிலியாரென்னும் நாமம் அடைந்தனர். 

பின்னர்ச் சுந்தர மூர்த்தி வேத முதலிய கலைகளை ஓதியுணர்ந்து, திருமணப் பருவம் உற்றுப் பிதாவினாலே திருமணம் நிகழுமிடையில் சிவபெருமான் ஒரு அந்தண வடிவங்கொண்டு,  அம்மணப் பந்தரில் வந்து சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்டு திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறை என்னும் ஆலயத்தை அடைந்தார். ஆலயம் அடைந்த சிவபிரானைச் சுந்தரமூர்த்தி நாயனார் பின்தொடர்ந்து, "பித்தா பிறைசூடி" என்னும் திருப்பதிகம் பாடினார்.

பின்பு திருநாவலூரைத் தரிசித்துத் திருத்துறையூரில் தவநெறியைத் தரும்படி திருப்பதிகம் பாடி, இரவிலே திருவதிகையில் சிவபெருமான் திருவடி சூட்டப் பெற்று, திருமாணிகுழி, திருத்தினை நகர், திருத்தில்லை என்னும் தலங்களிற் சென்று பாடிச் சீர்காழி அடைந்து, அங்கே திருக்கைலாச மலையிலுள்ள காட்சியைக் கண்டு திருக்கோலக்கா முதலாகிய தலங்களை வணங்கித் திருவாரூர் சென்று சிவபிரானுக்குத் தோழராகும்படி திருவருள் பெற்றனர். பின்பு பரவையாரை மணந்து, அத்திருக்கோலத்தோடு வன்மீக நாதரை வழிபட்டு வரும் நாளில், விறன்மிண்ட நாயனார் கோபம் கொண்டமையால், திருத்தொண்டத் தொகை பாடிப் பணிந்தார். அதன்பின் குண்டையூர்க் கிழவர் தந்த நெல்மலையைப் பரவையார் வீட்டில் சேர்க்கும்படி கோளிலியிற் சென்று பதிகம் பாடினார்.

நாட்டியத்தான் குடியில் சேர்ந்து, கோட்புலி நாயனார் தம் புத்திரிகளை மணந்து கொள்ளும் வண்ணம் வேண்ட, அவ்விருவரையும் தம் புத்திரிகளாக வைத்துத் திருப்பதிகம் பாடி வலிவலஞ் சென்று, பின் திருப்புகலூரில் செங்கல் செழும் பொன்னாகப் பெற்றுத் திருப்பனையூரில் சிவபிரான் திருநடனக் காட்சியைத் தரிசித்துவிட்டு, மற்றும் பல தலங்களைப் பணிந்து, திருப்பாச்சிலாச்சிரமத்தில் பொன்றருளும்படி பாடி ஒழுகினார்.

இப்படி ஏனைய திருப்பதிகளைச் சார்ந்து வணங்கிக் கோவை திருப்பேரூரிற்கு வந்து காஞ்சிமா நதியில் படிந்து ஆலயத்தை அடைந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் வரு முன்னரே உயர்தினைப் பொருளும், அஃறினைப் பொருளும் தாமேயென்று வேதங்கள் எடுத்தோதற்கேற்ப, முன்பு வேதியராய்த் தம்மைக் காட்டிப் பயனைக் கொடுத்த சிவபிரான் இழிந்தவராயுங் காட்டத் திருவுளங் கொண்டார். 

பள்ளனாகித் திருவிளையாட்டு செய்து வயல் வேலைக்குச் சென்றார். உமாதேவி யம்மையாரும் பள்ளியாழாகி கழனியிலே தொழில் செய்யத் தொடங்கினார். விநாயக் கடவுளும், முருகக்கடவுளும் பள்ளச்சிறராய் வயலின்கண் விளையாடினார்கள். அரிபிரமேந்திராதி தேவர்கள் நுகமும் கலப்பையும் மேழியும், கொழுவும், வாரும், கயிறும், கோலும், கடாவும், வித்தும், நாறும் ஆகிய எல்லாமாகி வந்தார்கள். சிவகணநாதர்கள் ஏவல் செய்கின்ற பள்ளர்களாய் சிவபிரானாகிய பட்டிப்பள்ளர் ஏவல்வழி உழுகின்றவரும், நீர்பாய்ச்சுகின்றவரும், வரப்பின் அருகு சீரமைக்கின்றவரும், வரப்பு பிடிக்கின்றவரும், நாற்று நடுகின்றவரும் விதைக்கின்றவரும் ஆனார்கள்.

இலக்குமி, சரஸ்வதி, இந்திராணி முதலாயினோர் பள்ளிகளாய், உமாதேவியராகிய பச்சைப் பள்ளியோடு நாற்றுநட்டார்கள். இங்ஙனம் இவர்கள் கழனியில் தொழில் செய்துகொண்டிருந்த போது கோவை திருப்பேருர் ஆலயத்திற்குச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், சிவபிரானை அங்கே தரிசிக்கக் காணப் பெறாமலிருந்ததால், அங்கிருக்கும் இடபதேவரிடம் "ஈசன் எங்கே?" வினவினார். 

அதற்கு இடபதேவர், வன்றொண்டனுக்கு ஒன்றும் சொல்ல வேண்டாமென்று சிவபிரான் ஆணையிட்டுச் சென்றிருந்தபடியால் இடபதேவர், சுந்தரமூர்த்தி நாயனாரிடம் கண்ணினாற் சாடை செய்து காட்டினார். இடபதேவரின் இக்குறிப்பினை அறிந்து கொண்ட வன்றொண்டர் வயலுக்கு விரைந்தோடித் தேடினார். அப்படித் தேடியதில், நாற்று நடவிக் கொண்டிருந்த சுவாமியையும் அம்மையையும் கண்டு வணங்கினார்.

திரும்ப, நாயனாரோடு சிவபெருமான் கரையேறிக் காஞ்சிமா நதியில் குளித்து ஆலயத்தை அடைந்தனர். ஆலயத்தினுள் வந்த ஈசன், இடபதேவரின் முகத்தை உடன் வைத்திருந்த மண்வெட்டிக்கருவியால் "சட்"  என்று அடித்துவிட்டார் ஈசன். (இதனால்தான் திருப்பேரூர் நந்தியின் ஒரு பக்க முகம் சலிந்திருக்கிறது. இப்போது போனாலும் இந்நந்தியின் முகம் சலிந்திருப்பதை நாம் காணலாம்.)

ஈசனிடம் மண்வெட்டியால் அடி வாங்கிய  இடபதேவர், அடியின் வலியைப் பொறுக்க மாட்டாமல் அஞ்சி ஈசனை வணங்கி அங்கிருந்த இடத்தில் கொம்பினால் குத்திக் கிளறினார். கொம்பினால் கிளறியதில் ஒரு தீர்த்தம் அகழ்ந்து வந்தன. பின், அத்தீர்த்தத்தின் எடுத்து சிவலிங்கத்தினை ஸ்தாபித்துப் பூசித்துக் குற்றத்தினின்று நீங்கினார் நந்தியார். அதன்பின்னர் சிவபெருமான் வெள்ளியம்பலத்திலே திருநடனம் செய்தார்.

அதனைத் தரிசித்த நாயனார், பொன் தரும்படி பாடினார். ஈசன் பொன் கொடாமல், உனது பாட்டுக்குப் பரிசில் இங்கு இல்லை என்றும், இது முத்தித் தலமாதலால் இங்கு இல்லை. மற்றைய தலங்களில் பொன் தருவோம் என்றும் கூறினார். மேலும், சேரமான்பெருமானிடத்தில் உன் செய்தி தெரிவித்துள்ளோம். அவரிடம் செல்க! என்றும் சிவபிரான் அருளிச் செய்தனர்.

நாயனார் விடைபெற்றுப் பல தலங்களையும் பணிந்து, திருமுதுகுன்றில் சென்று பொன் பெற்று, ஆற்றிலிட்டுக் கடம்பூர் வணங்கி, சிதம்பரத்தை அடைந்து பொன்னம்பலத்திலே ஞானநடராஜர் திருப்பேரூரின் கண்ணதாகிய வெள்ளியம்பல நடனத்தைக் காட்ட அதையும் தரிசித்து, "மடித்தாடு மடிமைக்கண்" எனத் திருப்பதிகம் படித்தார்.

இதில் "பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே" என்று சிறப்பித்துப் பாடியருளித் திருவாரூர் சேர்ந்து, ஆற்றிலிட்ட பொன்றைக் குளத்திலெடுத்துப் பரவையாருக்குக் கொடுத்துச் சோணாட்டுத் திருப்பதிகளையும், நடுநாட்டுத் திருத்தலங்களையும் தொண்டை நாட்டுத் திருத்தலங்களையும் தொழுது, காஞ்சியில், திருவேகம்ப முதலிய தலங்களைத் தரிசித்துத் திருவோண காந்தன்றளியில் பொன் பெற்றுத் திருவொற்றியூர் உற்று, சங்கிலியாரை மணந்து வாழ்ந்து திருவாரூர் சேர்ந்தார்.

பரவையார் ஊடல் தீர்க்கும்படி தூது செல்லும் வண்ணம் பாடி, நாகைக் காரோணத்திற்கு பல பொருள் பெற்றுத் திருவாரூரில் சேரர்பிரான் வர, அவரோடு கலந்து, மலைநாட்டுக்குச் செல்லும்போது, மத்தியிலே, திருவையாற்றில் காவேரி நதியைத் தடுத்துத் தரிசித்துத் திருவஞ்சைக் களஞ்சேர்ந்து, சேரமான் பெருமானாயனாரிடத்தே பெரும் பொருள் பெற்றுத் திரும்புங்கால் வழியிலே பறிகொடுத்து திருமுருக பூண்டியிலே அதைத் திரும்பப் பெற்றுத் திருவாரூருக்குச் சென்றார்.

மீண்டும் மலைநாட்டுக்குச் செல்லும் மார்க்கத்திலே, திருப்புக் கொளியூரிலே, முதலைவாய்ப் பிள்ளைதரும் வண்ணம்பாடி, திருவஞ்சைக் களம்சேர்ந்து, வெள்ளை யானை மீது திருமாலதி தேவர்சூழத் திருக்கைலாச மலையைச் சேர்ந்தார். சிவபெருமானுக்குப் பழைய திருத்தொண்டு செய்து கொண்டிருந்தனர். பரவையாரும், சங்கிலியாரும் முறையே கமலினியாரும், அநிந்திதையாருமாகித் திருக்கைலாசத்தை அடைந்து, உமாதேவியாருக்குத் திருப்பணி செய்து கொண்டிருந்தனர்.

அமோகவர்ஷன் சளுக்கியத் தேசத்திலும், வரகுணன் மதுரையிலும் ஆண்டனர். தேசம் அமைதி பெற்றுக் கல்வியும் சமயப் பிரசாரமும் பெருகியிருந்தது. அந்த நேரத்தில்தான் நம்ம நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொங்கு நாட்டிற்கு மூன்று முறை விஜயம் செய்து பேரூருக்கும் வந்தார். அதை அவரே தம் கோயிற்றிருப்பதிகத்தில், "மீ கொங்கி லணிகாஞ்சி வாய்ப் பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே" என வியந்தார். 

அச்செய்தியைக் குறித்துச் சரித்திர உண்மைகள் கூறும் "பெரிய புராணமும்" "பேரூர் புராணம்" முதலிய தல புராணங்களும் கூறுகின்றன. அக்காலம் கி.பி.850 ஆகும். அக்காலத்தில் பின்னாளில் ஒதுக்கப்பட்ட வகுப்பார்களாகிய பள்ளர்களும் கோயில் விழாக்களில் கலந்து கொண்டிருப்பார்கள் என்ற கருத்து, இத்தொடரில் வந்த *பள்ளுப் படலத் திருவிளையாடல் மூலம் வாசித்திருப்பீர்கள்." அந்த நாளில் இப்பள்ளுப்படலத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக அமைத்த "நாற்று நடவு உற்சவத்திலே" அவர்கள் கலந்து கொள்வது போல வேறு எத்தலங்களிலும் நாம் பார்த்திருக்க முடியாது. வகுப்பு உரிமைகள் பல காலங்களில் பலவாறு மாறுபடுதல் சகஜம் என்பதை இந்தச் சரித்திரத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது.

கி.பி.1565-ல் விஜய நகரம் தொலைந்த போது, 1600-ல் மைசூரார் கொங்கு நாட்டைக் கைப்பற்றினார். ஆனால் சில வருஷங்களுக்குள்ளாக மதுரை அரசர்களான நாயக்கர்கள் கொங்கு நாட்டுக்கு படையெடுத்து வந்து பிடித்து கொண்டனர். பேரூரின்கண் அமைந்துள்ள சிறந்த சிற்ப வேலை கொண்ட கனகசபையானது அக்காலத்தில் ஆண்ட திருமலை நாயக்கர் சகோதரனான அளகாத்திரி நாயக்கனால் கட்டப்பட்டது. 

கனகசபையின் முன்னாலுள்ள ஒரு தூணில் ஆங்கிலேய உடையுடுப்புடன் உள்ள ஒரு போர் வீரனின் சிலையில், ஒரு கையில் துப்பாக்கியைக் கொண்டிருக்கும் சிறப்பு நோக்குதல் வேண்டும். எனவே இச்சபை சமீப காலத்தியவை என்பது தெளிந்த செய்தி. இச்சபையின் உள்ளே கோயிலைக் கட்டிய அளகாத்திரி நாயக்கரின் உருவத்தையும் ஒரு தூணில் இருந்தன. திரும்பப் புதுப்பிக்க புரணமைப்பின் போது, புதுப்பித்த செல்வமான்கள் இச்சிலையைக் கட்டிடத்திலிருந்து விலக்கி வெளியே கொண்டு வைத்து விட்டார்கள்.

இந்தக் கனக சபையின் அழகைப் பற்றி நாம் வருணித்துக் கொண்டே போகலாம் அவ்வளவு அளவளாகப் பெரியதிசயம் கொண்ட அழகு. இதுவும் இத்தொடரில் பதியப்பட்டிருந்ததை வாசித்திருப்பீர்கள். இராஜேந்திர தேவன் காலத்தில் அர்த்த மண்டபம் கட்டப்பட்டது. கோபண்ண மன்றாடியார் கர்ப்ப கிருகத்தைப் புதுப்பித்தார். அண்ணாமலை செட்டியார் உள் மதிலையும், அறுபத்து மூவர் மண்டபத்தையும் கட்டினார். வித்வான் கந்தசாமி முதலியார் பட்டீசர் கோயில் கர்ப்ப மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மையார் ஆலயம் ஆலயம் முதலியன புதுப்பித்தார்.

அரசம்பலவாணர் சந்நிதி

இதை சின்னக் கோயில் என்பர். இதுதான் காலவேசுவரம். இங்கே சுவாமியும் அம்மையும் இருக்கிறார்கள். நடராஜர் திருநடனம் செய்த புராதனமான பெரிய அரசமரம் இக்கோயிலில்தான் இருந்தது. வாயிலில் பெரிய ரிஷபம், கோபுரத்திற்குப் பதிலாய் மாடியில் இருக்கிறது. 

பட்டி விநாயகர் சந்நிதி

இது புதிதாக புதுப்பிக்கப்பட்டவை. இதன் கீழ்தான் நச்சுப் பொய்கை இருந்ததாகக் கூறுவர்.

வட கைலாசம்

இங்கே பிரம தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. பைத்தியம், நாய்க்கடி, முதலிய நோயை இத்தீர்த்தம் ஒழிக்கும். இத்தீர்த்தத்தில் செப்புக் காசுகளை இட்டால், இச்செப்புக் காசுகளில் களிம்பு கிளம்பிப் போய் தங்கக்காசு போல தகதகக்கும். இதன் பிரகாரத்தில்தான் இறவாப்பனை உள்ளன.  பட்டி சுற்றும் மேடை, அரசமரம், பிறவாப்புளி, ஈசன் பள்ளனான உருவக் கோயில்.

தென் கைலாசம்

ஊரின் தென் மேல்திசையில் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.

பாண்டவர் குழிகள்

சித்திரைச் சாவடிக்குப் போகும் வழியில் இருந்தது. சமீபத்தில் தூர்த்தொலிக்கப்பட்டது.

சோழன்துறை

அரசமரம் மிகப் பெரியது. பழைய மரம் தூர்ந்து போயின. காஞ்சிமா நதி கோயிலருகில் உள்ளன.

திருநீற்று மேடு

உன்னதமான இடம். இதில் உள்ள வெண்மணலே ஒரு காலத்தில், ஆலய வழிபாட்டுக்கு வருவோர்க்கு விபூதியாக வழங்கப்பட்டு வந்தது. (இது இயற்கையாகவே அமைந்த திருநீற்று மலை.)

பட்டீசுவரர் ஆலயம்

இதில் பட்டீசர் சந்நிதி சிருங்க தீர்த்தம் (இத்தீர்த்தத்தை சிங்க தீர்த்தம் என தவறாகச் சொல்கிறார்கள். இதில் சிங்கத்தையும் வைத்துள்ளார்கள். (சிங்கத்தை நிறுவியிருப்பதால் தானோ என்னவோ சிங்க தீர்த்தம் எனச் சொல்கிறார்கள்.) இத்தீர்த்தம் சிருங்க தீர்த்தம் ஆகும்.

மரகதவல்லி பாகராம் பட்டீசரின் மான்மியத்தை விரித்துரைத்து தொடர்ந்து பதிந்து வந்த கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடரை தினமணி.காம்-ல் வாசித்தும், பட்டீசரை வந்து பூசனை புரிந்தவரும், கற்பவரும், கேட்டவரும், பதிவை சேமித்து பாதுகாத்தோரும், விட்ட பதிவை கேட்டுப் பெற்றோரும், பொருளுரை வினா வினவியவர்களும், கேட்டார்ப் பிணிக்குந் தகையவாகக் கேளாதோரும், உள்ளருவை விரித்துணர்ந்தவர்களும், பதிவில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுப் பெற்றோர்களும், நீவீர்களும், அடியார்களுமாகிய உங்களுக்கு உண்டியும், உடையும், உறையுளும், பொன்மணி முதலான பொருள்களும், கரி, பரி, சிவிகை முதலான ஊர்திகளும், வேண்டுவன பிறவும் கொடுப்போரும், இம்மைப் பயனாம் புகழையும், மறுமையிற் சிவலோகத்திற் பெற அருளும்பேறாய ஆனந்தமயமாம் பெரும்
போகங்களையும் பெறுவீர்களாக! சிவ சிவ திருச்சிற்றம்பலம்.

திருப்பேரூருறையும், பட்டிபெருமானார்க்கு உள்ளன்புடன் சிறப்புச் செய்து வாசித்தோரும், அதனால் திருப்பேரூர் வந்து வணங்கியோர்க்கும் எத்தனைப் பெரும் பயன்களுளவாகுமோ ஆத்தனைப் பயன்களும் இத்திருப்பேரூர் திருக்கோயில் தொடரை தினமணி.காம்-ல் வாசித்தோர்க்கு சிறப்பான கருணை உளவாகட்டுமென்று நெஞ்சங்கனிந்தவனாய் வணங்கி, பட்டீசநாயகரின் கருணையும், பச்சைநாயகியம்மையின் அருளும் உங்களுக்கு பசியட்டுமென்று ஆனந்தத்தில் திளைத்து வாழ்வாங்கு வளர்ந்து வாழ்வீராக!

சிவ சிவ திருச்சிற்றம்பலம்! 

மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லியோடும்

பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க!

காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க!

கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க! வாழ்க!!

இத்துடன் கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

- கோவை கு.கருப்பசாமி

- படங்கள் உதவி: ச.பாலகிருஷ்ணன், கோவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com