விமரிசையாக நடந்த ஸ்ரீ ஜயேந்திரரின் முதல் ஆராதனை உற்சவம்

சித்தியடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முதல் ஆராதனை உற்சவம் காஞ்சி சங்கர மடத்தின் பிருந்தாவனத்தில் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
ஜயேந்திரரின் அதிஷ்டானம், ஆராதனை உற்சவத்தில் கலந்துகொண்ட முரளி மனோகர் ஜோஷியுடன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ஜயேந்திரரின் அதிஷ்டானம், ஆராதனை உற்சவத்தில் கலந்துகொண்ட முரளி மனோகர் ஜோஷியுடன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

சித்தியடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முதல் ஆராதனை உற்சவம் காஞ்சி சங்கர மடத்தின் பிருந்தாவனத்தில் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
காஞ்சி சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியும், இந்து சமயம் தழைக்கப் பாடுபட்டவர்களில் முன்னோடியுமான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி சித்தியடைந்தார். இதையடுத்து, மார்ச் 1-ஆம் தேதி ஸ்ரீஜயேந்திரரின் பிருந்தாவன பிரவேசம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீஜயேந்திரர் பிருந்தாவன அதிஷ்டானத்தில் நாள்தோறும் பூஜைகள், தீப ஆராதனை நடைபெற்று வந்தன. 
நாள்தோறும் கர்நாடக இசை வித்வான்கள் ஸ்ரீஜயேந்திரருக்கு ஸ்ரத்தாஞ்சலி செலுத்தும் வகையில், நாமசங்கீர்த்தனம் நடத்தி வந்தனர். மேலும், நித்ய சதுர்வேத பாராயணம், நித்ய பூஜை, ருத்ரம், சமகம், சூக்தங்கள் என மார்ச் 1 முதல் 12-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 
ஸ்ரீஜயேந்திரருக்கு முதல் ஆராதனை உற்சவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) விமரிசையாக நடைபெற்றது.
இவ்வுற்சவத்தின் தொடக்க நிகழ்வாக, காலை 8 மணியளவில் 32 அந்தணர்கள் ஏகாம்பரநாதர் கோயில் குளத்தில் நீராடினர். பின்னர், சங்கர மடத்துக்கு வந்த அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அவர்கள் ஜயேந்திரரின் பிருந்தாவன அதிஷ்டானத்தில் பூஜைகள் மேற்கொண்டனர். 
தீர்த்த நாராயண பூஜைகள், வேதபாராயணம், கோ பூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து, நண்பகல் 12.30 மணிக்குப் பிறகு, சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியில் பூஜைகள் செய்தார். இதையடுத்து அவர் ஜயேந்திரரின் அதிஷ்டானத்துக்கு வருகை புரிந்து முதல் ஆராதனை உற்சவத்தை நடத்தினார்.
தொடர்ந்து, சாஸ்திர சதஸ், கச்சேரி, நாமசங்கீர்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு, அன்னதானமும் வழங்கப்பட்டது. ஜயேந்திரரின் முதல் ஆராதனை உற்சவத்துக்கென காசி, ராமேசுவரம், திருப்பதி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்கள், காமாட்சியம்மன், வரதராஜர், ஏகாம்பரநாதர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலிருந்து பிரசாதங்கள் கொண்டு வரப்பட்டு, ஆராதனை நடத்தப்பட்டது. 
பகல் 3 மணியளவில் ஆராதனை உற்சவம் நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து, ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தில் விஜயேந்திரர் பாத பூஜை செய்தார். இதில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு மடங்களிலிருந்து சன்னியாசிகள் வருகை புரிந்தனர். 
பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான முரளி மனோகர் ஜோஷி, ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் ஆராதனை உற்சவத்தில் கலந்துகொண்டனர். மேலும் பக்தர்களுக்கு 

ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். 

 உற்சவத்தில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள், ஆராதனையில் பங்கேற்க வந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com