நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர்? செவ்வாய் அளிக்கும் யோகமும், அவயோகமும்..

மனிதரின் வாழ்க்கையில் பல விசித்திரமான அனுபவத்தைக் கொடுப்பதில் செவ்வாய் கிரகம் நிகரற்றதாகும்.
நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர்? செவ்வாய் அளிக்கும் யோகமும், அவயோகமும்..

செவ்வாய் திசையின் யோக நிலை:

செவ்வாய் மகா தெசாவின் காலம் : 07 வருஷங்கள் ஆகும். இந்த செவ்வாயின் ஆதிபத்தியஸ்தான பலத்தின் அடிப்படையில், மனிதரின் வாழ்க்கையில் பல விசித்திரமான அனுபவத்தைக் கொடுப்பதில் செவ்வாய் கிரகம் நிகரற்றதாகும்.

மேஷ லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

செவ்வாய் தெசா, யோகமானதல்ல! மேலும், சுபயோக ஸ்தானபலம், சுபக்கிரக பார்வை செவ்வாய்க்கு ஏற்பட்டிருந்தால், ஜாதகர் இந்த செவ்வாய் தெசா காலத்தில், சிறிது நன்மை கலந்த பலன்களை அடையப்பெறுவர் என்பதாகும்.

ரிஷப லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

சப்தம விரையாதிபதி செவ்வாயின் சப்தமாதிபத்தியத்தை விட, விரையாதிபத்தியத்திற்கு பலம் அதிகம் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். ஆகவே, இந்த லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு, செவ்வாய் தெசா/புக்திகள் காலம் (7 வருடங்கள்) நன்மைகள் செய்ய வல்லதல்ல என்பதாகும். இவர்களுக்கு வரப்போகும் மனைவி, தெய்வத்தன்மை, அதிர்ஷ்டம் உள்ளவனாக இருக்கக்கூடும்.

மிதுன லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

6-11க்கு உடைய ஆதிபத்தியம், செவ்வாய்க்கு ஏற்படுவதால், ஜாதகர்களுக்கு பல நன்மைகளைச் செய்யவல்லவர். 11-க்கு உடைய ஆதிபத்தியத்தால், ஜாதகருக்கு, அசுப பலன்களை அளிக்கவல்லார் என்பதாகும். ஜோதிட சாஸ்திரப்படி, உபய லக்னத்திற்கு, 2-7-11க்கு உடையவர்கள் பாதகாபதிகளாவர்.

கடக லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

செவ்வாய் ஜீவனாதிபதியாகவும், யோகக் காரகனாக குருபகவானும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலும் அல்லது செவ்வாயை, குருபகவான் தமது பார்வையால் பார்த்தாலும், செவ்வாய் தெசா காலத்தில், ஜாதகருக்கு பொன்/பொருள் சேர்க்கை, அசையா சொத்துககள் சேர்க்கையும் அடையப்பெற்று பிரபலமான ராஜயோக வாழ்க்கை வாழ்வர் என்பதாகும்.

சிம்ம லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

செவ்வாய், சுபபாக்கியாதிபதியாகும். செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்து ஒரு ராசியில் அமையப் பெற்றும், செவ்வாய் தெசா காலத்தில், ஜாதகருக்கு நிலையற்ற பல நற்பலன்கள், எதிர்பாராத பொருள் விரையம், பலவித இன்னல்கள், தெய்வபக்தி ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.

கன்னி லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

3-8க்கு உடைய ஆதிபத்தியம் செவ்வாய் அடைவதால் ஜாதகர் மிஸ்ர பலன்களை அடைவர். ஆனால் செவ்வாய்க்கு சுபக்கிரகப் பார்வையும், கேந்திர பலமும் ஏற்பட்டால் செவ்வாய் தெசா காலத்தில், சுபப் பலன்களையும் அடையப்பெறுவர்.

துலாம் லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

தனசப்தமாதிபத்தியம் செவ்வாய்க்கு ஏற்படுவதால் ஜாதகர் செவ்வாய் தெசா காலத்தில் பொருள் விரையம், தீராத பிணிகள், பலவித விபத்துக்குரிய கண்டம் ஆகியவை அடையப்பெறுவர். ஆனால், செவ்வாய் உடன் சுபக்கிரகம் சேர்க்கை ஏற்பட்டிருந்தால் ஜாதகர் சுபப்பலன்களை அடையப்பெறுவர்.

விருச்சிக லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

செவ்வாய் லக்னாதிபதியாக இருப்பினும், செவ்வாய் தெசாகாலத்தில் வண்டி வாகனம், நெருப்பு சம்பந்தமான விபத்துக்கள், வைசூரியால் அவதிப்படல் ஆகியவை அடையப்பெறுவர், லக்னம், செவ்வாயை, குருபகவான் தமது பார்வையால் பார்த்தால், ஜாதகர் சகல நற்பலன்களையும் அடையப்பெறுவர் என்பதாகும்.

தனுசு லக்னத்தில் ஜனனமானவர்ளுக்கு,

செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியும் விரையாதிபதியுமாய், தமது தெசா காலத்தில் ஜாதகர், இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு நிவர்த்தியாக, பலவித நற்பலன்கள், வெகுகாலமாக முடிவிற்கு வராத சிவில், கிரிமினல் வழக்குகளில் வெற்றியும், உத்தியோகம் தொழிலில், வெகுவான முன்னேற்றம், அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு முன்னேற்றம், புகழ் பெரும் பதவிகளை அடையப்பெறுவர்.

மகர லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

செவ்வாய், சுகலாபாதிபத்தியம் பெற்று, தமது தெசாவில் ராஜயோகமான மகிழ்வான வாழ்க்கை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் அசையா சொத்துக்கள் சேர்க்கை, அனைத்துக் காரியங்களிலும் வெற்றி வாய்ப்பை அடையப்பெறுவர் என்பதாகும்.

கும்ப லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

செவ்வாய் 3-10க்கு உடைய ஆதிபத்தியம் பெற்று, தமது தெசா காலத்தில் ஜாதகருக்கு நன்மைகள், தீமைகள் கலந்த மிஸ்ர பலன்களை அளிக்கவல்லார். இருப்பினும் செவ்வாய் உடன் சுக்கிரன் இணைந்து அமையப்பெற்றால் தமது தெசா காலம் முழுவதும் பிரபலமான ராஜயோக வாழ்க்கை அடையப்பெறுவர் என்பதாகும்.

மீன லக்னத்தில் ஜனனமானவர்களுக்கு,

செவ்வாய் தனபாக்தியாபதித்யம் பெற்று, மேலும் உபய லக்னத்திற்கு 2-ம் இடம், பாதக ஸ்தானமாகயிருப்பதால், ஜாதகருக்கு செவ்வாய் தெசா காலம் முழுவதும் நன்மைகள், தீமைகள் கலந்த மிஸ்ர பலன்களை அடைவர். செவ்வாயுடன், குருபவான் இணைந்திருந்தால் ஜாதகர் உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம் அசையா சொத்துக்கள் சேர்க்கை வாழ்க்கையில் முன்னேற்றமடைவர் என்பதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com