ஸ்ரீராமஜெயம் எழுதும் பழக்கம் இருக்கிறதா?!

மன நிம்மதிக்காகத் தான் கோயில்களுக்குச் செல்கிறோம், அங்கேயும் பாரபட்சங்களை சந்திக்க வேண்டியிருந்தால் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் போதும். வீணான மன உளைச்சல் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.
ஸ்ரீராமஜெயம் எழுதும் பழக்கம் இருக்கிறதா?!

சில வாரங்களுக்கு முன் திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டேன், அப்போது பூஜையின் நடுநடுவே  விளக்குப் பூஜையை வழிநடத்திய குருக்கள் ஒருவர் சொல்லிச் சென்ற சில தகவல்கள்  பயனுள்ளதாக இருந்தது, அதிலொரு தகவல் ஸ்ரீராமஜெயம் எழுதுவதைப் பற்றியது; 

மன அமைதிக்காக, நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக, வேண்டுதல், நல்ல வேலை கிடைக்க, குழந்தை வரம் வேண்டி, நல்ல கணவன் அமையப் பெற இப்படி எத்தனையோ பிரார்த்தனைகளுடன் பலர் ஸ்ரீராமஜெயம் எழுதுவதுண்டு, பெரிய நோட்டுப்புத்தகங்களில் பக்கம் பக்கமாக எழுதுவார்கள், சிலர் வாரம் தவறாது வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயர் சந்நிதிக்குச் சென்று ஸ்ரீ ராமஜெயம் எழுதிய பேப்பர்துண்டுகளை மாலைகளாகக் கட்டி விக்ரகத்திற்கு சூட்டுவார்கள். இப்படிச் செய்வதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்றொரு நம்பிக்கை அவர்களுக்கு. நம்பிக்கை நல்ல விஷயம் தான்.

ஆனால் ஆஞ்சநேயர் கோயில்களில் வியாழக்கிழமைகள் தோறும் ஸ்ரீராமஜெயம் எழுதப்பட்ட பேப்பர் மாலைகள் எக்கச்சக்கமாய் குவியும், நாம் ஆத்மார்த்தமான நம்பிக்கையோடு ஹனுமனுக்கு சூட்டும் மாலைகள் அடுத்த நொடியிலேயே கழற்றி ஓரமாகப் போடப்பட்டு அடுத்த பக்தரின் மாலையை சுவாமிக்குச் சூட்டினால் அதைக் காணும் போது நிச்சயம் நம் மனம் சங்கடப் படும். இதைத் தவிர்க்க ஒரு உபாயம்.

எப்போதுமே ஸ்ரீ ராமஜெயம் எழுதும் போது உதிரிப் பேப்பர்களில் எழுதாமல் நோட்டுப் புத்தகங்களில் எழுதலாம், நோட்டுப் புத்தகங்கள் தீரும் வரை எழுதி முடித்ததும் அதை வியாழக்கிழமை அன்று கோயிலுக்குச் சென்றோ அல்லது நமது வீட்டுப் பூஜை அறையிலேயே கூட ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இப்படி பூஜையில் வைத்து எடுத்த ஸ்ரீராமஜெய நோட்டுப் புத்தகங்களை நாம் புதிதாக வீடு கட்டும் போது வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று மனையின் அடியில் பாதுகாப்பாக பிளாஸ்டிக் உறையிட்டு புதைத்து வைக்கலாம். இந்த முறையிலும் ஆஞ்சநேயரின் பரிபூர்ண ஆசிகள் கிட்டும் என்று விளக்கு பூஜையில் சொல்லப்பட்டது. வீட்டுக்கு வாஸ்து செய்யும் போது மட்டும் என்றில்லை, புதிதாக தொழில் தொடங்குவதாக இருந்தாலும் இந்த நோட்டுப் புத்தகங்கங்களை அவ்விடத்தில் வைத்தால் நன்மை கிட்டும். புதிதாக வீடு கட்டாமலும், தொழில்  தொடங்காமலும் இருந்தாலும் சரி, வெறுமே இந்த ஸ்ரீ ராமஜெய நோட்டுப் புத்தகங்களை நமது பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பின்புறமாய் வைத்து தினமும் வணங்கி வந்தாலும் கூட  உதிரி பேப்பர் மாலைகள் சூட்டும் போது கிடைக்கும் மன நிம்மதியை விட அதிக அளவு மனச்சாந்தியும் நற்பலன்களும் கிடைக்கும் என்று பூஜையில் கூறப் பட்டது. ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கு பயனுள்ள செய்தி தான் இது.
 
மன நிம்மதிக்காகத் தான் கோயில்களுக்குச் செல்கிறோம், அங்கேயும் சூழ்நிலை காரணமாக சில பாரபட்சங்களை சந்திக்க வேண்டியதாகி விடும், மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் நாம் சூட்டிய ஸ்ரீராமஜெய  மாலைகள் தூரப் போடப் பட்டு விட்டதே என்ற வீணான மன உளைச்சல் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com