காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-6

காசி விசுவநாதருக்கும், உலகம்மைக்கும் பெருமைமிக்க கோயிலை எழுப்புவதில்..
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-6

பராக்கிர பாண்டியனின் சிந்தனை

காசி விசுவநாதருக்கும், உலகம்மைக்கும் பெருமைமிக்க கோயிலை எழுப்புவதில் பராக்கிரம பாண்டியன், வருங்கால நிலையை எண்ணி மிகப் பலமாக சிந்தித்தான்.

எம்பெருமானுக்கு கோயில் எடுப்பிக்க நினைத்தேன்!' அவனருளால் அது நிறைவேறப்பட்டது. அவனருளாலே இவ்வாலயம் நிலைத்தும் நிற்க வேண்டும் என்று நினைத்தான். ஒருவேளை இடையில் பழுதேதும் ஏற்படின்?, என்ன செய்வது?, என நாடாளும் அவன் சிந்தித்து மனங்கசிந்திருந்தான் போலும். அவனிடமிருந்த இறைவனின் அதீதபக்தியின் வெளிப்பாடுகள் அவனை இவ்வாறு சிந்திக்க வைத்தது.

"இறைவனுக்கு எடுப்பித்த இவ்வாலயம்" காலத்தால் சிதைவு ஏற்படுமாயின், அச்சிதைவுகளை அகற்றிச் செப்பும் செய்வோர்களின் திருவடியில், நான் மாண்டே போயிருந்தாலும் என் மனம் அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கும் என்றான். அதுவும் நான் உயிரோடு இருக்கையில் நடப்பின், "உலகத்தார் கண் முன்னே அவர்களின் காலடியில் விழுந்து வணங்குவேன்" என்றான்.

கோயிலுக்கு சிதைவேதும் ஏற்படாதினும், மேலும் மேலும் ஆலயத்தை விருத்தி செய்வோர் திருவடிகளிலும் என் திருமுடியை தாழ்த்தி இறைஞ்சுவேன் என்றும் வருங்காலத்தினை எண்ணி எண்ணி கசிந்துருகியது மட்டுமல்ல, மனதிலுள்ள இவ்வாக்கிய வரிகளை........"இத்தென்காசி கோயிலை திரிசேர் விளக்கெனக் காப்பவர்கள் திருவடியை என் திருவடி மேல் தாங்குவேன்" என்று கல்வெட்டிலும் பொறித்து வைத்திருக்கிறான்.

சாத்திரங்களையும், ஆகம நூல்களையும் ஆராய்ந்து அமைக்கப்பட்ட காசி விசுவநாதர் ஆலயத்தைச் காப்பவர்கள் தம் பரம்பரையினரையும் வணங்கி, அவர்களும் நலமும் வளமும் பெறுவார்கள் என்கின்றார் பராக்கிரம பாண்டியன். அவர்களுக்கு நான் குற்றவேல் பணி செய்வேன் என்கின்றான் கொற்றவனான பராக்கிரம பாண்டியன். மனத்தாலும் நினைக்க முடியாத இத்தென்காசிக் கோயிலை அமைக்கப் பணித்தான் காசிவிசுவநாதன். 

இக்கோயிலைப் புரணைப்பவர்தம் குடி, வாழையடி வாழையாகத் தழைக்கும் என்கிறான் அந்தப் பாண்டிய மன்னன். "இதோ அதுக்கான பாடல்"

ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன் ஆலயத்து
வராததோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்து அதனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரோர் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே!

அரிகேசரிமன் பராக்கிரமன் அரன் அருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக்கோயில் வகுத்துவலம்
புரிசேர் கடற்புவி போன்ற வைத்தேன் அன்பு பூண்டு இதனை
திரிசேர் விளக்கெனக் காப்பார் பொற்பாதம் என் சென்னியதே!

சாத்திரம் பார்த்து இங்கு யான் கண்ட பூசைகள் தாம் நடத்தி
ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும் புரக்கப்
பார்த்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடன் அங்கு
கோத்திரம் தன்னில் உள்ளார்க்கும் அடைக்கலம் கூறினேனே!

சேலேறியவயல் தென்காசி ஆலயம் தெய்வச் செயலாலே
சமைந்தது இங்கு என்செயல் அல்ல அதனை இன்னும்
மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்தவர்
தம் பால் ஏவல் செய்து பணிவன் பராக்கிரம பாண்டியனே!

மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன் நின்று
என்னைத் தான் பணிகொண்ட நாதன் தென்காசியை என்று மண்மேல்
நினைத் தரதரஞ் செய்து அங்கு காவல் புனையும் நிருபர்தம்
தனைத்தாம் நின்று அஞ்சித் தலை மீது தரித்தனனே!

பூந்தண் பொழில் புடைசூழும் தென்காசியைப்  பூதலத்தில்
தாத்தம் கிளையுடனே புரப்பார்கள் செந்தா மரையாள்
காந்தன் பராக்கிரமக் கைதவன் மானகவசன் கொற்கை
வேந்தன் பணிபவராகி யெந்நாளும் விளங்குவரே! என்று.

இத்தகைய அருமையான பாடலுடன் பாடிய பராக்கிரம பாண்டியனின் தமிழ்ப்புலமைபற்றிப் பெரும்புலவர் ஒருவர்...........

"எண்ணீர்மை நூலுக்கு அகத்தியனாம் இவன் என்பதெல்லாம்
வெண்ணீர்மை யன்றி விரகல்ல விகரமாறன் செஞ்சொல்
புண்ணீர்மை தேரும் பராக்கிரம மாறன் பாதங்கழுவும்
தண்ணீர் குடித்தல்லவோ கும்பயோனி தமிழ்க்கற்றதே!- எனப் பாடியுள்ளார்.

அகத்தியனே பாண்டியனின் பாதம் கழுவிய நீரைக் குடித்துத் தான் தமிழைக் கற்றானாம். பைந்தமிழ் நிறை புலமை பெற்றவன் பராக்கிரம பாண்டியன் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தென்காசி தலபுராணத்தில் பல படலங்கள் உள்ளன. அதில் முக்கியமான சில படலங்களைப் பார்க்கலாம்.

நாரதன் வரம் பெற்ற படலம்

தென்காசியின் சிறப்புகளை கேட்டுத் தெளிந்தான் நாரதன். இந்திரனின் அவைக்கு நாரதன் சென்று பலவாறாக அவரை புகழ்ந்து பாடினான். இப்புகழ்ச்சியைக் கேட்ட அரிமித்திரன் என்பவன் பொறாமைக்குள்ளானான். திருமாலை அனுகி, தங்களையும், இந்திரனையும் நாரதர் சமமாக நினைத்துப் பாடினார் எனக் கூறிவிட்டான். சினம் கொண்ட திருமால் நாரதனின் வீணையும் இசையும் அழியட்டும் என்று சபித்தார்.

நாரதர் அஞ்சி, அவரை சரணடைந்தார். அதற்கு திருமால், நீ தென்காசிக்குச் சென்று காசிவிசுவநாதரை வணங்கினால் உன் சாபம் நீங்கப் பெறும் என்று சாபவிமோசனம் கொடுத்தார். நாரதன் தென்காசிக்கு வந்து சித்திரா தீர்த்தத்தில் நீராடி, காசிவிசுவநாதரை கசிந்துருகித் தொழுதான்.

ஈசனோ....., நீ வடகிழக்கு திசையிலுள்ள தீர்த்தத்தில் தீர்த்தமாடி கூகை வடிவமாக வாழும் கெளசிய முனிவரிடம் நீ உபதேசம் பெறுவாய் என்றார். ஈசன் கூறியபடி, நாரதன் புண்ணிய நதியில் நீராடி கெளசிக முனிவனிடம் வந்து சேர்ந்தான். அப்போது கெளசிய முனிவர் சோலையில் கூகை வடிவமாக இருந்தார். அவர், நாரதருக்கு சிவபெருமானின் தத்துவங்களை விளக்கி, காசிவிசுவநாதரின் பெருமைகளைக் கூறி, சிவ வழிபாட்டின் சிறப்பினையும் எடுத்துரைத்தார். நாரதரும் கெளசிகரின் அருளுரையை ஏற்று காசிவிசுவநாதரை வணங்கியதால் சாப விமோசனம் பெற்றார்.

மலைகளின் சிறகை அரிந்த படலம்

அக்காலத்தில் மலைகள் அனைத்திற்கும் இறகுகள் இருந்தன. இதனால் இவைகள் பறந்து பறந்து சென்று ஊர்களை அழித்து வந்தன. மக்களும், நாட்டையாளும் மன்னர்களும், இந்திரனிடம் சென்று, மலைகளின் அழிச்செயல்களைப் பற்றிக் கூறினர். இந்திரனோ, தென்காசி நகருக்கு வந்து தீர்த்தமாடி, காசிவிசுவநாதரை வணங்கி வலிமை பெற்று மலைகளுக்கிருக்கும் சிறகையெல்லாம் அறுத்தெறிந்தான்.

அந்த மலைகளில் ஒன்றுதான் "மைநாக மலை" அது காசி விசுவநாதரை வணங்கியதால் நீ கடலுக்குள் சென்று மறைந்து விடு என்று இறைவன் கட்டளையிட்டார். அம்மலையும் கடலுக்குள் சென்று மறைந்தது. அந்த மலையை அழிக்க இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை ஏவி விட்டான். அந்த வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு இந்திரனால் வெற்றி பெறமுடியவில்லை. தோல்வியுற்றான். அப்போது ஈசன் இந்திரனிடம்....,அறிவுரை செய்து, "மைநாகம்" அங்கே இருக்கட்டும் என்று அருள் செய்தார்.

அகத்திய படலம்

இமயமலையில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வானவர்களும், வானவர்களும் அங்கே கூடி குழுமியிருந்தார்கள். இதன் காரணமாய் வடநிசை தாழ்ந்து போயின. தென்திசை உயர்ந்து மேலோங்கி நின்றது. இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான்.... அகத்தியரிடம் நீ தென்திசை சென்று பொதிகை மலையில் தங்குகிறார்! என்றார்.

பெருமானே! "நான் தென்திசை சென்றால் தங்களின் திருமணத்தை காணநேராதே?" என்றார் அகத்தியர். தென்காசியில் வைத்து ஐப்பசி மாதம் உத்திரநாளன்று என் திருமணக் காட்சியை நீ காண நேரும்! என அருள்பாலித்தார்.

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com