அக்னி நட்சத்திர காலம் வாட்டி வதைப்பது ஏன்? என்ன சொல்கிறது புராணம்?

இந்த ஆண்டின் அக்னி நட்சத்திர காலம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி (இன்று) தொடங்கி மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திர காலம் வாட்டி வதைப்பது ஏன்? என்ன சொல்கிறது புராணம்?


இந்த ஆண்டின் அக்னி நட்சத்திர காலம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி (இன்று) தொடங்கி மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது.

இந்த நாட்களில் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால் வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட ரீதியாகவும் தெரிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கும், தென்மேற்கு பருவமழைக் காலத்திற்கும் இடைப்பட்ட காலமாக கத்திரி வெயில் ஆகும். 

அக்னி நட்சத்திரம் பற்றிய புராணக் கதை

மன எழுச்சியில் இருக்கும் போது, யோசிக்கும் தன்மை கூட செயலற்று விடுகிறது என்பதுதான் உண்மை. 

அதற்கு அக்னிதேவனுக்கு ரோகம் உண்டாகி, நிவர்த்தி கிடைத்ததே ஒரு உதாரணம். 

ஒரு நாள், காலைப்பொழுதில், ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் அருகருகே அமர்ந்து,  சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். 

அப்பொழுது,  மரவுரி தரித்திருந்த வேதியர் ஒருவர் அங்கு வந்தார். 

அவருக்கு வயிறு பெரியதாக இருந்தது. கண்கள் அசாத்திய மஞ்சள் நிறத்திலிருந்தன. சரீரத்தில் பிணியின் சாயலும் சேர்ந்திருந்தது. 

அந்த வேதியர், 'பகவானே, நான் பாண்டு ரோகத்தால் பீடிக்கப் பட்டிருக்கிறேன். அஸ்வினி குமாரர்கள்,  என் வியாதிக்கு தீர்வு காண, தங்களால் முடியாது எனக்கூறி விட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நான் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறேன். ரோகம் என்னை வாட்டி வதைக்கிறது. காண்டவ வனத்தை என் அக்னி நாக்கிற்கு இரையாக்கினால் மட்டுமே நிவர்த்தி கிடைக்கும் என்று சிருஷ்டி கர்த்தா கூறிவிட்டதால், வேறு வழியில்லாமல் உங்களைச் சரணடைந்து விட்டேன்’ என்று கூறினார். 

இந்த ரோகம் உண்டாகக் காரணம் யாது என அர்ஜுனன் வினவினான். 

மயிற்பீலி மகுடனுக்குத் தெரியாத உண்மைகூட உண்டா என்ன? இருப்பினும் எல்லாமே அறிந்த அந்த நீலமேகச்யாமளன், ஏதும் அறியாதவர்  போல் அக்னிதேவன் சொல்லப்போகும் செய்தியைக் கேட்பதில் ஆர்வம் காட்டினார். 

அக்னி தேவன் சொல்லத்தொடங்கினான்.

'ஸ்வேதகி என்னும் சக்ரவர்த்தி பன்னிரெண்டு ஆண்டுகள், யக்ஞங்கள் செய்து வந்தார். அப்பொழுதெல்லாம் அவர், லோகக்ஷேமத்தை முன்னிட்டு, யானையின் துதிக்கைப் போன்ற பருமனாக தாரைகளால் நெய்யை ஆஹுதி செய்வார். அதை நான் ஏற்றுக் கொண்டதால், இப்பொழுது அஜீரணம் மிகுதியாகி விட்டது’ என்று கூறினான். 

பிரும்மதேவனின் உபாயத்தைக் கேட்ட பின்பு அதை செயல்படுத்தாததற்கு என்ன காரணம் என்று அர்ஜுனன் கேட்டதற்கு அக்னி பகவான் மேலும் கூறினான். 

'நான் ஏழு முறை முயற்சித்தேன். ஆனால், ஏழு முறைகளும் தேவேந்திரன், மழையைப் பொழியச் செய்து, என்னை தோல்வியுறச் செய்து விட்டார். என் செய்வேன் பார்த்தா?’ என்றான். 

காண்டவ வனத்தில், தேவேந்திரனின் நண்பனான தக்ஷகன், தன் குடும்பத்துடன் வசித்துவருவதால், அவனுடைய கோரிக்கையின் பேரில்தான் இந்திரன் காண்டவ வனத்தை,  அக்னிக்கு இரையாகாமல் பாதுகாத்து வருகிறான் என்பதைப் புரிந்து கொண்டார். 

'இந்திரனின் முயற்சிகளைத் தோற்கடிப்பது என்பது, தாமோதரனுக்கு கஷ்டம் இல்லை என்றாலும், அதற்குண்டான திவ்யாஸ்திரங்கள், ரதம் எதுவுமே தற்சமயம் எங்களிடம் இல்லை. இவற்றிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால், அவசியம் நாங்கள் உதவுகிறோம். சரியா நண்பா?’ என்று வினவிய அர்ஜுனனைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் புன்னகை புரிந்தார், பகவான். 

நாடகத்தை நடத்துபவருக்கு யார், எதைச்சொல்லி புரியவைக்க வேண்டும்? 

ஒரு சமயம் வருணதேவன், சந்திரபகவானிடமிருந்து  அனுமக்கொடி ரதம், காண்டீவ வில், அக்ஷயதூணிர், சக்கரம் ஆகியவற்றைப் பெற்றிருந்தார். 

அவற்றைத் தனக்குத் தந்து அருளுமாறு, அக்னி தேவன், வருண தேவனை வேண்டி நின்றான். 

ஜலாதிபதியும் தந்து அருளினார். 

ஸ்ரீ கிருஷ்ண பகவானால், ஸோமராஜனுக்குக் கிடைக்கப்பெற்ற, சில வரப்ரசாதங்கள், அர்ஜுனன் கைக்கு வந்தன. 

ஆனால், ஸ்ரீ பகவான் ஒரு நிபந்தனையை முன் வைத்தார். 

அதாவது வனத்தை அழிக்க இருபத்தொரு நாட்கள் அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறினார். 

அக்னிதேவனும் அதற்கு இசைந்தார். 

இரண்டு தூணிர்களையும் கட்டினான்,  பார்த்தன்.  திவ்ய ரதமான, நந்திகோஷத்தில்,  ஸ்ரீ வத்ஸமார்பனுடன் அமர்ந்தான். 

'இனி உங்கள் விருப்பப்படி, காண்டவ வனத்தை கபளீகரம் செய்யலாம்’என்று அக்னி தேவனுக்கு தெம்பான வார்த்தைகளைக் கூறினான். 

அவ்வளவுதான். தன் ரோகம் தீர்ந்தால் போதும் என்று, தன் சக்தி எல்லாம்  திரட்டி, வேகமாகத் தன் வேலையில் இறங்கினான். 

வனம் தீக்கரையாவதைக்கண்ட இந்திரன், மேகக்கூட்டங்களைத் திரட்டி மழையைப்பொழிவித்தான். 

ஸ்ரீ பகவானின் ஆக்ஞையுடன், நாலாபுறமும் ரதத்தைத் திருப்பி, மழைநீர், பூமியில்  விழாதவாறு, அர்ஜுனன், அம்பு மழையால், சரக்கூடு அமைத்தான். மழைநீர் தீயை அணைக்கவில்லை. 

வனமே அக்னிக்கு ஆஹுதியாயிற்று. 

இந்திரன் புரிந்து கொண்டான். ஸ்ரீ கிருஷ்ண பகவான் யாருக்குத் துணை நிற்கிறாரோ, அவனை எந்த நேரத்திலும் தீங்கு அணுகாது என்பதை. ஏனென்றால் தன் மகனான அர்ஜுனனிடமே தேவராஜன் தோற்று விட்டானே. 

ஸ்ரீ கிருஷ்ணரைப்பணிந்த, தேவராஜன், ஐராவதத்தைத் திருப்பி, இந்திரலோகம் சென்றார். 

அக்னிதேவனும், தன் ரோகம் தீர்ந்தபின்னர், ஸ்ரீ பகவானைப்பணிந்து, மறைந்து போனார். 

காண்டவ வன தகனத்தில் ராட்சஸர்களைத் தவிர, பல ஜீவராசிகள் மடிந்து போனது துர்பாக்கியமே என்றாலும், அந்த விபத்துக்களும் கருடவாகனன் அருளிய வரதானமே.  

மேலே சொல்லப்பட்ட கதை எதற்குத் தெரியுமா? 

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து இருக்கிறது. இந்தக்கதையில் ஸ்ரீ பகவானால் நிபந்தனையாகப் போடப்பட்ட அந்த இருபத்தொரு நாட்கள் தான் அக்னி நட்சத்திரம் என்பதை மூதாதையர்கள் கூறக் கேட்டதுண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com