காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-7

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் பற்றி 6 தொடர்களை பார்த்துள்ளோம். ஏழாவது தொடர் இதோ உங்களுக்காக...
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-7


தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் பற்றி 6 தொடர்களைப் பார்த்துள்ளோம். ஏழாவது தொடர் இதோ உங்களுக்காக...

குலசேகரனுக்கு மகப்பேறு அருளிய படலம்

தென்காசிக்கு அருகே விந்தன் கோட்டையை ஆண்டுவந்த குலசேகர பாண்டியனுக்கு வெகுநாளாய் மகப்பேறு வாய்க்காது இருந்தது. இதை நினைத்து நினைத்து தினமும் வருந்தியழுதான்.

ஈசனை வேண்டி வேண்டிப் பணிந்தான். அப்படியொரு நாள் பணிந்து வேண்டிக் வணங்கிக் கொண்டிருந்த பொழுது, ஈசனின் அசரீரியாக, "நீ செண்பகத் தோப்புக்கு வந்து வழிபடு" என ஒலித்தார். அசரீரியின் படி வழிபாட்டைச் செண்பகத் தோப்புக்கு சென்று வழிபட்டு வரலானான். ஈசன் அருளும் காலம் கூடிவந்ததால், குலசேகரனுக்கு ஆண் மகவு பிறந்தது. அந்த மகவுக்கு, உலகநாதன் எனப் பெயரிட்டு வளர்த்தான். பருவவயதின் போது, திருமணத்தையும் செய்வித்து வைத்தான். பின்பு, உலகநாதனுக்கும் குழந்தைப்பேறு வாய்க்காதிருந்தது. உலகநாதன் காசிவிசுவநாதனை கசிந்துருகி வேண்டி வழிபாடுகளைத் தொடர்ச்சியாக செய்துவித்து வந்தான்.

ஒரு சமயம் உலகநாதன் செண்பகத் தோப்பில் உலவிவந்தபோது, அத்தோப்பில் ஒரு பெண் குழந்தையைக் காணநேர்ந்தான். அந்தக் குழந்தை உலகநாதனின் கண்களுக்கு பராசக்தி வடிவருளாகத் தெரிந்தது. அந்தக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து, "குழல்வாய்மொழி" என பெயரிட்டழைத்து வளர்த்து வரலானான்.

குழல்வாய்மொழியாள் பருவத்தை எட்டினாள். பருவமடைந்த குழல்வாய்மொழி சிற்றாங்கரையில் சோலை ஒன்றினை உருவாக்கி, அச்சோலையிலே முழுநேரமும் சிவபெருமானை நினைத்து வழிபட்டு வந்தாள். வழிபாட்டில் குழல்வாய்மொழியாள், "இறைவா!" உன்னையே நான் கணவனாக அடையவேண்டும்" என வழிபாட்டைத் தொடர்ந்தாள்.

ஒரு நாள் வழிபாட்டின்போது, "ஐப்பசி உத்திரநாளில் உன்னை மணந்து கொள்வேன்" என்று இறைவன் கூறியருளினார். அதுபோலவே, ஐப்பசி உத்திரநாளில் இறைவன் குழல்வாய்மொழி அம்மையை, தான் திருமணம் புரிந்து கொண்டார். திருமணம் நடைபெற்ற நிலையிலையே, இறைவனும் குழல்வாய்மொழியம்மையுடன் ஆலயத்துள் புகுந்து மறைந்தருளி மறைந்தனர்.

மிருகண்டு முனிவரின் வரம் பெற்ற படலம்

திருக்கடவூர் என்ற ஊரில் கெளசிகன் எனும் முனிவன் கடுந்தவத்தை மேற்கொண்டிருந்தான். முனிவனின் முன்பு பிரசன்னமாகி மாலன், "நீ தென்காசி சென்று உலகநாதனை வணங்கு வாயாக!" அவனடி பணிந்து நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்று கூறினார். உடனே, மிருகண்டு முனிவர் தன்தந்தையார் கெளசிக முனிவரைக் கண்டு, மாலன் கூறிய செய்தியைச் சொன்னார்.

உடனடியாக, கெளசிக முனிவரும், அவர்முன் மிருகண்டு முனிவரும் தென்காசி வந்து காசிவிசுவநாதரை வழிபட்டு தவம் செய்து வந்தனர். தவம் செய்து, மருத்துவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் பிறந்தான். அவன்தான் "மார்க்கண்டேயன்" ஆவான். இவனே சிவனை வணங்கி எமனை வென்று, என்றும் பதினாறு வயதுடையனோனனாய் காணக் கிடைத்தவன்.

குடிலை உபதேசப் படலம்

சிவபெருமான் பழந்தானத்திலிருந்து உலகம்மைக்குக் "குடிலை" என்ற மந்திரத்தை உபதேசித்தருளினார். "குடிலை" என்பதற்கு "ஓம்" என்பது பொருளாகும். அறிவே வடிவான தெய்வத்தை அவன் தந்த அறிவைக் கொண்டு அறிந்து அறிவால் வழிபடுவது குடிலை. இதைத்தான் குழல்வாய்மொழி அம்மைக்கு சிவபெருமான் உபதேசம் செய்திருந்தார்.

தரணிப் பீடம்

தென்காசியை தரணி பீடம் என்று சொல்வது உண்டு. பராசக்தியின் வடிவமாக இருக்கின்ற அம்பிகை தரணி பீடத்தில் நாற்பது முக்கோண வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த நாற்பது முக்கோண வடிவில் எழுந்தருளியுள்ள அம்பிகையை வணங்கும் முறையினையும், அதனால் பெரும் பயன்களையும் இப்படலத்திலே குறிப்பிட்டுள்ளார்.

நந்தி உபதேசம் பெற்ற படலம்

சிலாதர முனிவன் என்ற ஒரு முனிவன் தென்காசிக்கு வந்து, விசுவநாதரை வணங்கி பிள்ளைப்பேறு அருளுமாறு வேண்டினான். இறைவன் அருளால் வயலில் அவன் உழும்போது, ஒரு ஆண்பிள்ளையைக் கண்டெடுக்கப்பட்டான். அந்தப் பிள்ளைக்கு "நந்தி" எனப் பெயரிட்டு வளர்த்தான். நந்தியின்​ எதிர்காலம் அறிய ஜோதிடரை நாடினார்.

கணித்த ஜோதிடரோ, இக்குழந்தை இன்னும் ஓர் ஆண்டே உயிர் வாழும் என அச்சோதிட வல்லுநர் கூறினார். நந்தியும் இறைவன் அருளால் இதையறிந்து காசிவிசுவநாதரை வழிபட்டான். தன்னை வணங்கிய நந்தியைப் பார்த்து ஈசன்...., "நந்தி! உனக்கு என்றும் அழிவென்பதில்லை" மேலும் "நீ என் சந்நிதானத்தில் என் எதிரில் அதிகாரத்தோடு அமர்வாய்" என்று வரத்தை அளித்தார். அன்று முதல் ஈசன் முன்பு அமரும் பாக்கியத்தை நந்திப் பெற்றார்.

வாலி வரம் பெற்ற படலம்

இராமாயணத்தில் வரும் வாலி, சீரிய சிவபக்தன் ஆவான். இராமாயணக் கோர்வையில் இவன் அங்கிருந்தாலும், சித்தத்தில் எப்பொழுதும் சிவனையே நினைந்து கொண்டிருப்பவன். தென்காசிக்கு அருகில் உள்ள வாலியின் பொத்தைக்கு வந்து சிவனை நினைந்து தவம் செய்து தன்னை எதிர்ப்போர்களின் பாதி பலன் தனக்கு வர வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றான். வாலி வழிபட்டதால் இறைவன், வாலிநாதன் எனப் பெயர் பெற்றார்.

கண்ணுவர் நடனம் கண்ட படலம்

கண்ணுவர் என்னும் முனிவர் தவ வலிமை பெற்றவர். இவருக்கு சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு மகிழ ஆவல் கொண்டார். அதனால், தென்காசி நகருக்கு வந்து புலியூரிலமர்ந்து வழிபாடுகளைச் செய்து வந்தார். தில்லையில் பதஞ்சலி முனிவரும், புலிக்கால் உடைய வியாக்கரபாதரும் ஆனந்த நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கண் கண்டு மகிழ்ந்தார்கள்.

புலிக்கால் முனிவரின் பெயரைத் தாங்கிய புலியூரில் கண்ணுவர் கடும் தவம் செய்தார். அங்கு சிவபெருமான் நடராஜ திருக்கோலம் கொண்டு வேங்கை மரத்து நிழலில் தை அமாவாசை நாளன்று ஆனந்த தாண்டவம் புரிந்து கண்ணுவருக்கு காட்சி கொடுத்தார். அந்த ஆனந்தக் காட்சி இன்றளவும் நடந்து வருகின்றன. காசிவிசுவநாதர் கோயிலின் வடக்கு உட்பிரகாரத்தில் மேற்கிலிருந்து கிழக்கான வரிசையில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி இருக்கிறது. இதற்கு அடுத்து, வியாக்கரபாதரும், பதஞ்சலி முனிவரும் ஆனந்த தாண்டவம் ஆடும் காட்சியினைக் கண்டு மகிழ்ந்த நிகழ்வை சிற்பமாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

செண்பகப் பாண்டியனுக்கு காட்சி கொடுத்த படலம்

தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கு செண்பகமாறன், காசிகண்ட பாண்டியன் என்ற பல பெயர்கள் உண்டு. இவன் முருகப் பெருமானை எப்போதும் வணங்கி வருகின்ற இயல்புடையவன். நாள்தோறும் காசிக்கு செல்ல வேண்டும் என்ற கருத்துடையவன். ஒரு நாள் முருகப்பெருமான் இவன் கனவில் தோன்றி இவன் கையில் ஒரு ககனக்குளிகையைக் கொடுத்தார்.

ககனக்குளிகையை வாயில் இட்டால் யாருக்கும் தெரியாமல் வானில் பறந்து செல்லும் ஆற்றல் வந்து விடும். பாண்டியன் அந்த குளிகையை வாயிலிட்டுக் கொண்டு நாள்தோறும் காசிக்குச் சென்று வழிபட்டு வந்தான். ஒரு நாள் மனைவியும் இவனும் செல்ல காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து இங்கு வந்து பிரதிஷ்டை செய்து திருக்கோயில் அமைத்தான்.

மேலும் இப்புராணத்தில் திருக்கோயிலின் சிறப்புகளையும் ஆசார விதிகளையும் கூறி தலபுராணத்தை முழுமை படுத்தினார் அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயர். இறந்தார்க்கு முக்தியை தரும் காசியை விட பிறந்தார்க்கும், இறந்தார்க்கும், கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டாருக்கும் முக்தி தரக்கூடிய தலம் தென்காசி.

விசுவநாதரையும் உலகம்மையையும் வழிபடுவதால் இன்பம் ஓங்கும். துன்பம் நீங்கும். பகை அழியும். வெற்றி கிட்டும். அறிவு நிலை பெருகும். திருமணம் நிகழும். பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். பிணி எல்லாம் தீரும். வறுமை நீங்கப் பெறும். பெருமை வந்து சேரும். பேறுகள் அனைத்தும் வந்து கூடும் என்பதைக் கண்கூடாகக் காணலாம். இது உண்மை. வெறும் புகழ்ச்சி அல்ல!.

மருத்துவரான உலகம்மை

உலகம்மைக்குத் திருப்பணி செய்து வரும் அன்பர்களுள் கணபதி என்பவரும் ஒருவர். கணபதியின் மூத்த மகள் பிரசவ வலி வந்து அதைப் பொறுக்கும் திராணி இல்லாமல் உருள புரள துடித்தாள். மருத்துவர்களிடம் கூட்டிப் போய் காண்பித்தனர். மருத்துவர்கள் பார்த்து விட்டு, குழந்தை நெஞ்சுக்கு ஏறி விட்டது. இரண்டு உயிர்களையும் காப்பாற்றுவது கடினம் எனக் கைவிரித்தார்.

உடனே கணபதி, அம்மையை நினைத்து அழுது புலம்பினார். அவர் அழுது புலம்புகையில், "அம்மையே! லோகநாயகியே!! -என் மகள் கருக்கொண்ட நாளிலிளேயே, பிறக்கும் பிள்ளைக்கு உன் பெயர் வைக்கிறேன் என வேண்டிக் கொண்டேனே? இப்பொழுது நிலையை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்!, "நீ காத்தருள வேண்டும் கருணைக் கடலே!" என நினைந்து நினைந்து உருகி கண்ணீர் சிந்தினாள். 

அதே நேரம்...பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தாய்க்கு உருளல் புயல் நின்று மூச்சு மட்டுமே இருந்தது. இதைக் கண்டு சுற்றத்தார்கள் அனைவரும் வேதனை கலந்த பயத்துடன், என்னாவாகும் என? எல்லோரும் பிரசவ அறைக்கு வெளியில் காத்து நின்றனர். திடீரென "வீய்ய்" எனக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அறைக்கு வெளியே காத்திருந்த சுற்றத்தார்களையும் உடனிருந்தவர்களையும் இந்தக் குழந்தையின் அழுகுரல் திரும்பிப் பார்க்க வைத்தது.

மருத்துவர்களும் அதன் பின்பே பிரசவ அறைக்குள் வேகமெடுத்து விரைந்தார்கள். அப்போது மருத்துவரின் கண்களுக்கு அறை சன்னல் கம்பி இடைவெளிகளுக்கிடையே அழகிய பெண் குழந்தை ஒன்று வெளியேறினதைக் கண்டார்கள். பின், பிரசவத் தாயை நோக்க,........ அந்தத் தாயும் மருத்துவரிடம்......., "குழந்தை வடிவான ஒரு பெண்வந்து, எனக்குக் குழந்தையை பிரசவிக்க வைத்துவிட்டு, வந்த இந்த சன்னல் வழியே திரும்பச் சென்று விட்டாள் எனக் கூறினாள் கணபதியின் மனைவி.

அந்த அம்மை லோகநாயகியே என் மகளைக் காப்பாற்றியிருக்கிறாள், எனக் கண்கலங்கி கூறி அம்மையை நினைந்து நினைந்து மீண்டும் தொழுதார். இது, கலியுக ஆண்டான 1972-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்.

நம்பினோர் நல்லா உளர்
நம்பாதோர் மனம் கேடாவர்.

- கோவை கு. கருப்புசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com