ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: விண்ணதிர ஒலித்தது ரெங்கா ரெங்கா கோஷம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் 10-ம் நாளான இன்று சப்தாவரணம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: விண்ணதிர ஒலித்தது ரெங்கா ரெங்கா கோஷம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் 10-ம் நாளான இன்று சப்தாவரணம் நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா' ரெங்கா' என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

இக்கோயில் சித்திரைத் தேரோட்ட விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட விழாவையொட்டி நேற்று அதிகாலை 3.45-க்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேர் மண்டபத்தை 4.15-க்கு அடைந்தார். 

பின்னர் திருத்தேரில் வேதமந்திரங்கள் முழங்க மேஷ லக்னபடி 5.15-க்கு எழுந்தருளினார். திருத்தேர் வடம் பிடித்தல் 5.55-க்கு தொடங்கியது. தேரோட்டத்தை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன், அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். உள்ளூர், வெளியூர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ரெங்கா ரெங்கா என்ற பக்தி கோஷத்தை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர் சரியாக காலை 9.15-க்கு நிலைக்கு வந்தது. தேரோட்டத்தையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளில் வழிநெடுக அன்னதானம் மற்றும் நீர், மோர் பானங்களை பக்தர்களுக்கு பொதுமக்கள், உபயதாரர்கள் வழங்கினர். பக்தர்கள் கூட்டத்தைக் கண்காணிக்க காவல் துறை சார்பில் உயர் கோபுரங்கள் அமைத்து தொலை நோக்கு கருவி மூலம் கண்காணித்தனர். 

ஒலிபெருக்கி மூலமும் பெண்களை எச்சரித்துக் கொண்டே இருந்தனர். திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாளை தேரில் ஏறி தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 11-ம் திருநாளான செவ்வாய்க்கிழமை ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com