ராதையின் தீவிர பக்தரும், ஆசீர்வதிக்கப்பட்ட வளையலும்..

ஸ்ரீ கிருஷ்ண பக்தர், சைதன்ய மஹா பிரபு காலத்தில், உத்தலகர் என்னும் பெயர் கொண்ட ஒரு பக்தர் இருந்தார். அவர் ஸ்ரீ ராதையின் பால் அபார பக்தி கொண்டவர். 
ராதையின் தீவிர பக்தரும், ஆசீர்வதிக்கப்பட்ட வளையலும்..


                                        
ஸ்ரீ கிருஷ்ண பக்தர், சைதன்ய மஹா பிரபு காலத்தில், உத்தலகர் என்னும் பெயர் கொண்ட ஒரு பக்தர் இருந்தார். அவர் ஸ்ரீ ராதையின் பால் அபார பக்தி கொண்டவர். 

காணும் பொருள்களிலெல்லாம் ராதை ராதை என்று அபிமானம் கொண்டார். என்றாவது ஒரு நாள் ஸ்ரீ ராதையை தரிசித்து விடுவோம் என்று அசையாத  நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், சரஸ்வதி நதியின் படித்துறையில், அழகான பெண்ணொருத்தி துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது, அவ்வழியாக வளையல் வியாபாரி ஒருவன் மிகவும் சோர்வுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அந்த வியாபாரியைக் கண்ட அப்பெண், அவனை அருகே அழைத்தாள். தனக்கு வளையல்கள் வேண்டும் என்று  கேட்டாள். அவனும் பல வண்ணங்களில் பல ஜோடி வளையல்களைக் கொடுத்தான். அவளும் ஆசை ஆசையாக வளையல்களை வாங்கிக் கொண்டாள் .விலையைக் கேட்கவில்லை.

வியாபாரி கொடுத்த வளையல்கள் அனைத்தையும் மணிக்கட்டு முதல் முழங்கை வரை  இரண்டு கைகளிலும் போட்டுக் கொண்டாள். கைகளைத் தூக்கித் தூக்கி அழகு பார்த்துக் கொண்டாள். வியாபாரிக்கு, வியாபாரம் ஆனதே என்கிற சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும், அப்பெண்ணின் செய்கை, ஆச்சர்யத்தினைக் கொடுத்தது. அப்பெண் 
மனநிலை பாதிக்கப் பட்டவள் போலும் அவனுக்குத் தோன்றவில்லை.

அப்பெண் பணத்தைப் பற்றி எதுவுமே பேசாமல், மீண்டும் துவைக்கச் சென்று விட்டாள் .வியாபாரி மெதுவாக அப்பெண்ணிடம், 'அம்மா வளையல்களுக்குப் பணம் தர வில்லையே' என்று கேட்டுவிட்டு, அதற்குண்டான தொகையையும் கூறினான். அவள், 'ஓ பணம் தரவில்லையா? மறந்தே விட்டேன். ஒன்று செய். நேராக உத்தலகர் 
வீட்டிற்குப் போ. அவர் வீட்டைக் குழந்தை கூட அடையாளம் காட்டும். அவரிடம் வளையல்களை வாங்கியது அவருடைய பெண்தான் என்று சொல்லி, பணத்தைக் கேள். அவர் நிச்சயம் உனக்கு பணம் கொடுப்பார். அவர், பணத்தை, பூஜை அறையில், ராதையின் படத்திற்குப் பின்புறம் வைத்திருக்கிறார். கேட்டு வாங்கிக்கொள்' என்று பதில் கூறி அனுப்பினாள்.

அந்தக் கிராமத்தில், உத்தலகர் வீட்டைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவனுக்குச் சிரமமாக இல்லை. உத்தலகரின் வீட்டை அடைந்தான். அங்குப் போனபின்தான் அவனுக்கு,  உத்தலருக்கு, திருமணமே ஆகவில்லை என்கிற உண்மை புரிந்தது.

நடந்த விவரங்களைக் கேட்ட உத்தலகர், அதிர்ச்சி அடைந்தார். திருமணமே ஆகாத தனக்கு, ஒரு பெண் இருப்பதாகக் கூறும் அந்த வியாபாரியின் வார்த்தைகள், ஊராரின் செவிகளில் விழுந்தால் எத்தனை அவமானம் என்று நினைத்தார். அவரைப் பற்றியும், அவரின் பக்தி சிரத்தையைப் பற்றியும் ஊரார் அறிந்திருந்தாலும் அனாவசியமாக ஒரு சிக்கல் வந்திருப்பதை நினைத்து வேதனைப்பட்டார்.

வியாபாரிக்கு, அதற்கு மேல் பொறுமை இல்லை. விற்ற பொருளுக்கு பணம் ஈட்டிக் கொண்டு வீட்டிற்குச் செல்வதில் முனைப்பாக இருந்தான். அவனைச் சொல்லியும் குற்றம் இல்லை. பூஜை அறையில், ராதையின் படத்திற்குப் பின்னால் பணம் இருப்பதாக அப்பெண் கூறியதையும் அவன் பகர்ந்தான். உத்தலகரோ, தான் ஒரு பொழுதும் பணத்தை அங்கு வைக்கும் பழக்கம் இல்லை என்று மறுத்தார்.

இருந்தாலும், வியாபாரியின் பிடிவாதத்தால், ராதையின் படத்திற்குப் பின்னால் பார்த்தபொழுது, புதியதாக ஒரு சிறிய மூட்டை இருப்பதைக் கண்டார். அதை எடுத்துப்  பிரித்துப் பார்த்தபொழுது, வளையல்களுக்கு உண்டான தொகை சரியாக இருந்ததையும் கண்ணுற்றார். குழப்பத்துடன் அந்தத் தொகையை அவனிடம் கொடுத்தார்.

வளையல்களை வாங்கியது ஸ்ரீ ராதைதான் என்று அவருக்குப் புரிந்து போனது. ஸ்ரீ ராதையை வணங்கினார். காட்சி கிடைக்கப்பெற்ற பாக்கியவானான வியாபாரியின் கால்களை இறுக்கப் பற்றிக் கொண்டு, 'உனக்கு ஸ்ரீ  ராதை காட்சி தந்தாரா? நீ பாக்கியவான். கொடுத்து வைத்தவன். நித்தமும் அவரின் புகழ் பாடி துதித்து வருகிறேனே . 

எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையே. நீ ஸ்ரேஷ்டன்.' என்று புலம்பினார்.

வியாபாரியை அழைத்துக் கொண்டு, சரஸ்வதி நதிக்கரைக்கு ஓடினார். அப்பெண் அமர்ந்திருந்த படித்துறையை அடைந்தார். அந்த இடத்தைக் கண்ணுற்றார். எவருமே அங்கு காணப்படவில்லை. ஆனால், நதியின் மேல் வளையல்கள் அணிந்த இரு கரங்கள் கலகலத்தபடி ஆசீர்வதிப்பது போல் அவரின் கண்களுக்குப் புலப்பட்டன. ஸ்ரீ ராதையின் பரிபூரண அனுக்கிரகம் தனக்குக் கிடைத்ததாக சந்தோஷம் கொண்டார். அந்த அனுக்கிரகம் தனக்கு கிடைக்கக் காரணமான வியாபாரியை ஆரத் தழுவி, கண்ணீர் உகுத்தார்.

ஆனால் அவருக்குக் கிடைத்தது சாதாரணமான ஆசீர்வாதம் இல்லை. அடுத்த வினாடி, வான வீதியிலிருந்து, ஒரு ஒளி அவரின் மேல் விழுந்தது. பிறவிச்சுழலில் இருந்து உத்தலகர் விடுபட்டார். ஸ்ரீ ராதா மாதாவின் பாதக் கமலங்களை அடைந்தார். ஜகன்மாதாவோடு ஐக்கியமானார்.

இந்தக் கதையின் மூலம் நாம் ஒன்றைப்  புரிந்து கொள்ள வேண்டும்.. நாம் ஒவ்வொருவரும் இறைவன் அருளினைப் பெற ஆவலாய் இருப்பதைப் போல, நம்முடைய துயரங்களைத் துடைக்க, இறைவனும் ஆவலுடன்தான் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் வேண்டும். அதற்குத் தேவை உண்மையான பக்தியும், பகவான் நாமமும்தான். கலிகாலத்தில், இறைவன் நாமத்தினை நித்தமும் இயன்றவரை ஒருமனதோடு ஜபம் செய்வோம். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com