காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-8

திருக்கோயில்களை, அரசு எடுத்துக் கொள்ளும் காலத்திற்கு முன்னதான சமயத்தில், காசி விசுவநாதர்
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-8

தெப்பக்குள வழக்கு

திருக்கோயில்களை, அரசு எடுத்துக் கொள்ளும் காலத்திற்கு முன்னதான சமயத்தில், காசி விசுவநாதர் கோயிலின் தெப்பக்குளத்தைப் பற்றிய உரிமைப் பிரச்னை எழுந்தது.

வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. எதிர்வாதி- முகமதிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இவ்வழக்கைத் தொடுத்திருந்தனர். வழக்கில், திருக்கோயிலைச் சார்ந்திருந்தவர்கள் தெப்பக்குளம் காசிவிசுவநாதர் திருக்கோயிலுக்கே சொந்தமானவை என்றனர். முகமதிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ, 

தெப்பக்குளம் எங்களுக்குரியதானது என்றனர். வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. தீர்ப்புக் கூறும் வேளை வந்தது. ஆனால், திருக்கோயிலைச் சார்ந்திருந்தவர்களுக்கு ஒருவித பயம் இருந்தது. மனம் கசிந்தனர். என்னவாகுமோ எனத் தவித்தனர்.

அந்த பயத்துக்குக் காரணம்.. தீர்ப்பைக் கூறப்போவது ஒரு முகமதியர் என்பதால்....

தீர்ப்பை வாசிக்கும் முன்தின இரவு, இரண்டு பெண் குழந்தைகள் நீதிபதியின் வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். ஒரு குழந்தை துர்க்கை போல சூலத்துடனும், மற்றொரு குழந்தை லோகநாயகி போல கையில் தாமரைப் பூவுடனும்...

நீதிபதியிடம், சான்றுகள் அனைத்தையும் ஒப்பித்தனர் அப்பெண் குழந்தைகள். சான்றுகளைக் கேட்டு அதிர்ந்த நீதிபதி, அதிர்ச்சியாகி படீரென படுக்கையினின்று எழுந்தார். குழந்தைகளைக் காணவில்லை.

விடிந்தது. தீர்ப்பு வாசிக்கும் இடத்தில்...தீர்ப்பினைக் கேட்க, திருக்கோயிலைச் சார்ந்திருந்தவர்களும், முகமதியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் குழுமியிருந்த வண்ணம் நிறைந்திருந்தார்கள். கூடவே, தென்காசி ஊர்பொதுமக்கள், வர்த்தகர்கள், மற்றும் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குழுமியிருந்தனர். இருக்கைக்கு வந்தமர்ந்த நீதிபதி......, இவ்வழக்கு சம்பந்தமான சான்றுகள் அனைத்தையும் இந்த நீதிமன்றம் தீர சரிபார்த்து விட்டது.

வாதம் தொடுத்தது இருசாரராயினும், தெப்பக்குளம் சார்ந்த இடமும், அதன் பலன் அனைத்தும், மேலும் சான்றுகள் அனைத்தும் தேவைக்கு நிறைய அதிகமாகவே 

அறியப்பட்டது. சான்றுகள் அனைத்தும், 'தெப்பகுளம்' காசிவிசுவநாதர் திருக்கோயிலுக்கே என உறுதிப்பட நம்புகிறது. ஆகையால் இந்த நீதிமன்றம், தெப்பக்குளம் காசிவிசுவநாதர் திருக்கோயிலுக்கு உரியது என சான்றுரைக்கிறது என வாசித்தார்.

இது கதையல்ல? வரலாறான உண்மை!

வேம்புப்பட்டர்

உலகம்மன் கோயிலுக்குப் பூசைகள் செய்து வந்தவர் வேம்புபட்டவர் என்பவர். இவர் பலமுறை உலகம்மையின் எழிற்கோலத்தை கண்டு வணங்கப் பெற்றிருக்கிறார். சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை கட்டி, பூசை வேளைகளில் வந்து, பழம் வெற்றிலைகளை எடுத்துச் செல்லுவதை இவ்வேம்புபட்டர் பலமுறை கண்டிருக்கிறார். இரவில் நடுநிசியில் குழந்தை வடிவாகவே உலகம்மை கோயிலுக்குள் சுற்றி வருவதையும், கோபுரப்பணி நடந்து கொண்டிருக்கும் போதும், கோபுரம் வரை சென்று 

பார்வையிட்டதை வேம்புபட்டரும் மற்றும் பலரும் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள் என்பன செய்தியும் உண்டு.

கோபுரம் கட்டிக் கொண்டிருந்த வேளையில், பெண் பணியாளர்கள் சிலரின் செவிகளில், சலங்கை சத்தம் நடந்து செல்லும் பாங்குடன் காதொலியாக கேட்டிருக்கின்றனர். (கட்டுமான பெண் பணியாளர்கள் யாரும், சலங்கை அணிந்து வேலை செய்வார் கிடையாது என்பது நோக்கத் தக்கது.)

உற்றாரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றால தமர்ந்துரையுங் கூத்தா உன் குரலை 
கழற்கே குற்றாவின் மனம் போலக் கசிந்துருகி வேண்டுவனே!

என்கிற மணிவாசகரின் வாக்கிற்கேற்ப கசிந்து உருகினால் காசிவிசுவநாதர் கண்ணீரைத் துடைத்துத் வரங்களை வாரி வழங்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைப்பார்.

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com