திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பாகனை மிதித்துக் கொன்றபிறகு சாந்தப்படுத்தப்பட்ட நிலையில் யானை மசினி. (வலது) யானை பாகன் கஜேந்திரன்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பாகனை மிதித்துக் கொன்றபிறகு சாந்தப்படுத்தப்பட்ட நிலையில் யானை மசினி. (வலது) யானை பாகன் கஜேந்திரன்.

சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் யானை மசினிக்கு வெள்ளிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட மிரட்சி காரணமாக தன்னை வளர்த்த பாகனைமிதித்துக் கொன்றது. 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் யானை மசினிக்கு வெள்ளிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட மிரட்சி காரணமாக தன்னை வளர்த்த பாகனைமிதித்துக் கொன்றது. 
தமிழகத்தின் சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினம் என்பதால் வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அம்மனை தரிசிக்கவும் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
யானை நடவடிக்கையில் மாற்றம்: கோயில் யானை மசினியை (10), அதன் பாகன் கஜேந்திரன் (50), தனது மகன் அச்சுதானந்தனுடன் மாகாளிகுடியிலுள்ள ஓய்விடத்திலிருந்து அழைத்து வந்து, கோயிலின் உள்பிரகாரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். வழக்கம் போல, பக்தர்களுக்கு யானை மசினி ஆசி வழங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம் காணிக்கை வழங்கிய பெண்ணை யானை தும்பிக்கையால் தள்ளியது. இதையடுத்து சிறிது நேரத்தில் யானையின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு, பலத்த சப்தத்துடன் பிளிறியது. 
பாகனை மிதித்து கொன்றது: இதையடுத்து தனது அங்குசத்தால் யானையை பாகன் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென பாகனை தனது தும்பிக்கையால் சுருட்டி தூக்கி வீசிய யானை, சுவற்றில் மோதியது. இதில் பலத்த காயமடைந்தாலும் கஜேந்திரன், யானையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, காலிலிருந்த சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். அதற்கும் கட்டுப்படாமல் இருந்த யானை கஜேந்திரனை கீழே தள்ளி தனது கால்களால் நசுக்கியது. இதனால் அவரது உடலில் இருந்து குடல்கள் சிதறி, உடல் பாகங்கள் தனித்தனியே துண்டாகின. இதில் நிகழ்விடத்திலேயே கஜேந்திரன் இறந்தார்.
இதையடுத்து, ஆத்திரம் தீராமல், தனது தும்பிக்கையால் கஜேந்திரன் உடலை தூக்கி வீசியது. மேலும், அருகிலிருந்த சுவரின் மீது இரண்டு முறை உரசிக் கொண்டு வந்தது. தன்னை வளர்த்த பாகனைக் கொன்றாலும் அவரது உடல் கிடந்த பகுதியைச் சுற்றி வந்த யானை மசினி, அந்த இடத்திலேயே நின்றது. 
பாகன் கஜேந்திரனின் மகன் அச்சுதானந்தன் அதிர்ச்சியில் அந்த இடத்திலிருந்து ஓடிவந்தாலும், மீண்டும் யானை நின்ற பகுதிக்குச் சென்று, யானையிடம் அதற்குரிய மொழியில் பேசியுள்ளார். ஆனாலும், யானை ஆத்திரம் தீராமல் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தது.
சிதறி ஓடிய பக்தர்கள்: இதையடுத்து, யானைக்கு மதம் பிடித்துவிட்டதாக செய்தி பரவியதன் காரணமாக கோயிலுக்குள் தரிசனம் முடித்துவிட்டு காத்திருந்த பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர். அப்போது சிலர் கால்தவறி கீழே விழுந்த நிலையில் அவர்கள் மீது மற்றவர்கள் ஏறிச் சென்றனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
அதிகாரிகள் விரைவு: சமயபுரம் கோயில் யானை மிரண்டு பாகனைக் கொன்ற தகவல் அறிந்து, சமயபுரம் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் கோயிலுக்குள் விரைந்து சென்றனர். மேலும், திருவானைக்கா, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோயில்களிலிருந்து யானைப் பாகன்களும் சமயபுரம் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டனர்.
மேலும், கால்நடைப் பராமரிப்புத் துறை, வனத்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அலுவலர்கள் சமயபுரம் கோயிலுக்கு விரைந்து வந்து, யானை மசினியை சாந்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து கொண்டு செல்லப்பட்ட யானை சங்கிலியைக் கொண்டு கால்கள் கட்டப்பட்டது.
சாந்தப்படுத்தப்பட்ட யானை: யானை மசினிக்கு உடனடியாக தர்பூசணி, கரும்பு போன்றவை வழங்கப்பட்டன. மற்ற கோயில்களிலிருந்து சென்ற பாகன்கள், யானையை சாந்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதனால் யானை படிப்படியாக சாந்தமடையத் தொடங்கியது. இதையடுத்து யானையை திருச்சி மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முருகன் தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதித்தனர். மருத்துவர்களின் அறிவுரையின்படி, யானை மசினியை நீராட செய்த அதிகாரிகள் அதனை இரவு திருக்கோயில் வளாகத்தில் வைத்து, பின்னர், ஓய்விடத்துக்கு அழைத்துச் செல்லாம் எனத் தெரிவித்தனர்.
கோயில் நடை அடைப்பு: பாகனை யானை மிதித்துக் கொன்றதால், கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் திருக்கோயிலின் மற்ற கோபுர வாயில்கள் வழியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக கோயில் நடை அடைக்கப்பட்டு தரிசனமும் ரத்து செய்யப்பட்டது. திருக்கோயிலுக்குள் இறப்பு நிகழ்ந்திருப்பதால், ஆகம விதிகளின்படி புண்ணியதானம், பரிகார ஹோம சாந்திகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் திருக்கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நடை அடைக்கப்பட்டது இதுவே முதல்முறை
 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது.
கோயிலின் நடை அடைக்கப்படுவது இதுவே முதல்முறை என்றார் கோயில் குருக்கள் பிச்சை குருக்கள். இதுவரை சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றுக்காகவும், அம்மன் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடம் சீர் பெறுவதற்காக கொள்ளிடம் வடத்திருக்காவிரிக்கு வரும்போது குறிப்பிட்ட நேரத்தில் அம்மன் சன்னதி மூடப்பட்டிருக்கும். ஆனால், கோயிலுக்குள் இறப்பு நிகழ்ந்திருப்பதால், பூஜைகளும், பரிகாரங்களும் செய்ய வேண்டியிருப்பதால் கோயில் நடை நாள் முழுவதும் அடைக்கப்பட்டது இப்போதுதான் என்றார் பிச்சை குருக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com