சந்திராஷ்டம தோஷங்களும் மனக் குழப்பங்களும் நீக்கும் சோமவார பிரதோஷம்!

இன்றைக்கு சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை. பிரதோஷமும் இணைந்த
சந்திராஷ்டம தோஷங்களும் மனக் குழப்பங்களும் நீக்கும் சோமவார பிரதோஷம்!

இன்றைக்கு சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை. பிரதோஷமும் இணைந்த சிவபெருமானுக்கு உரிய அற்புத நாள். இந்த நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். உத்திராயணத்தின் ஐந்தாம் மாதமான வைகாசியும் தக்ஷிணாயனத்தின் ஐந்தாம் மாதமான கார்த்திகையும் சிவ வழிபாட்டிற்கும் முருக வழிபாட்டிற்கும் ஏற்ற மாதங்களாமும். இந்த மாதங்களில் வரும் சோமவார பிரதோஷங்கள் நம் பாவங்கள் அனைத்தும் போக்கி புண்ணியங்கள் பெருக்குவதோடு செல்வ வளமும் சேர்க்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள். 

சந்திராஷ்டமம்

தற்காலங்களில் காலையில் எழுந்தவுடன் எதைச் செய்கிறார்களோ இல்லையோ! இன்று யாருக்கு சந்திராஷ்டமம் என்பதைப் பார்த்துவிட்டு தான் அடுத்தது காபி சாப்பிடலாமா வேண்டாமா என முடிவு செய்யுமளவிற்கு சந்திராஷ்டமத்தின் தாக்கம் அனைவரிடமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சிலரோ சந்திராஷ்டமம் என்று தெரிந்தவுடன் யாரிடமும் சரியாக பேசமாட்டார்கள். “உம்” என்று முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். சந்திராஷ்டமம் முடிந்துவிட்டது என்று தெரிந்தவுடன் தான் "அப்பாடா" என நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். 

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். இந்த இரண்டேகால் நாட்களிலும் சந்திரன் ஒருவருக்கு பிரச்னையை தருமா என்றால் அதுதான் இல்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

சந்திராஷ்டமம் எப்படி ஏற்பட்டது?

மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்தக் கிரகம் கடந்தாலும் அது போகிற போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது. அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.

தேய்பிறை சந்திரனும் சந்திராஷ்டமும்

வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும், சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.

சோமவார பிரதோஷ தரிசனம்

சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது சோமன் எனப்படும் சந்திரன், மகாலக்ஷ்மி எனப்படும் திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. சந்திரனை சிவபெருமான் தலையில் சூடிக்கொண்டார். மஹாலக்ஷ்மியை திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். 

ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. 

பொதுவாக ஜாதகத்தில் எந்தத் தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லாத் தோஷமும் நீங்கிவிடும். சர்ப்பதோஷம் உட்பட எந்தத் தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்குத் தோஷம் போக்கவும் வளர்பிறை பிரதோஷம் வாழ்வின் வளம் சேர்க்கவும் ஏற்றதாகும்.

பிரதோஷத்தையொட்டி, நந்திதேவருக்கும் சிவலிங்கத்துக்கும் இன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்துக்குத் தேவையான பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, திரவியப்பொடி ஏதேனும் வழங்கி, சிவனாரை கண்ணார தரிசிப்பது சிந்தையில் தெளிவு பிறக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் சிவபெருமான்! அனைத்துக்கும் மேலாக, தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் விலகி, புண்ணியங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்! 

ஜோதிடத்தில் சோமவார பிரதோஷம்

ஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் அறியமுடிகின்றது. பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.

சந்திரனை "சந்திரமா மனஸோ ஜாத:" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்குக் காரகன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்குக் காட்சி கொடுப்பவர் ‘சர்வம் சந்திர கலாபிதம்‘ என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி ‘நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?‘ என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லாத் திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை.

பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் பிரதோஷம் வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்துவிட்டால் வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் சோமவார பிரதோஷம் என்பது ஒரு தெய்வீக தன்மை கொண்டதாகும். அதில் விரதம் இருப்பதும் சிவ தரிசனம் செய்வதும் மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் சோமவார பிரதோஷ விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன், கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள்  இந்த சோம வார பிரதோஷ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். .

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சோமவார பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்வது சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் சோமவார பிரதோஷ வழிபாடு செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

சந்திராஷ்டம தோஷங்களும் மனக்குழப்பங்களும் நீங்கப் பரிகாரங்கள்

1. இந்த சோம வார பிரதோஷ நாளில் பிரதோஷ காலம் எனும் கோதூளி லக்ன காலத்தில் சந்திரனை தலையில் சூடிய நிலையில் காட்சி தரும் ரிஷபாரூட மூர்த்தியையும் சோமாஸ்கந்த மூர்த்தியையும் தரிசிப்பது சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கி சந்தோஷம் மற்றும் மனநிம்மதியும் பெறமுடியும் என்பது நிதர்சனம்

2. சந்திராஷ்டம தினங்களில் அபிராமி அந்தாதி எனும் பாடலை பாடிவர சந்திராஷ்டம தோஷங்கள் நம்மை அணுகாது. சந்திரபலம் குறைந்த அமாவாசை நாளில் தன்னை மறந்த நிலையில் அபிராமி பட்டர் பௌர்ணமி எனக் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் அபிராமி அந்தாதி பாடியவுடன் வானில் நிலவினை தோற்றுவித்த சிறப்பு அபிராமி அந்தாதிக்கு உண்டு.

3. சந்திராஷ்டம தினத்தில் சந்திர ஸ்தலமான திருப்பதி, குணசீலம் ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சந்திராஷ்டமத்தில் தொல்லைகள் குறைவதோடு மிகச்சிறந்த சாதனைகள் செய்ய ஏற்ற தினமாக மாறிவிடும்.
 
4. சந்திராஷ்டம தினத்தில் சந்திரனின் காரகம் பெற்ற உப்பு, அரிசி ஆகிய பொருட்களை தானமாக வழங்குவது சந்திராஷ்டம தோஷத்தைக் குறைக்கும்.

5. கடலும் கடல் சார்ந்த இடமுமான சந்திரனின் காரகம் பெற்ற கடற்கரையில் காற்று வாங்குவது மனதுக்கு அமைதி தருவதோடு சந்திராஷ்டம தோஷமும் நீங்கிவிடும்.

6. சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வரூபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது.

7. விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

8. சந்திரன் விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு வந்தவுடன் நீசத்தன்மை நீங்கிவிடுவதால் குருவின் ஆதிக்கம்பெற்ற விறலி மஞ்சளைக் கையில் காப்பாகக் கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

9.  சந்திரன் மாத்ரு காரகன் என்பதால் சந்திராஷ்டம தினங்களில் அம்மாவிடம் ஆசிபெற்றுக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் தாக்காது, அம்மா இல்லாதவர்கள் அவர்களின் படத்தின் முன் சிறிது நேரம் அமர்ந்து மௌனமாக கண்களை மூடி தியானம் செய்தால் சந்திராஷ்டம தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

10 சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரிச் சங்கு, பசு இவற்றைப் பூஜிப்பதும் சிறந்ததாகும். 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com