மயிலுருவில் மகாதேவனைப் பூஜித்த உமையம்மை!

அன்னை பார்வதி தேவி மயில் உருவில் சிவனை பூஜை செய்ததாகக் கருதப்படும் தலங்கள்..
மயிலுருவில் மகாதேவனைப் பூஜித்த உமையம்மை!

அன்னை பார்வதி தேவி மயில் உருவில் சிவனை பூஜை செய்ததாகக் கருதப்படும் தலங்கள் இரண்டு, ஒன்று மயிலாப்பூர், மற்றொன்று மயிலாடுதுறை. இந்த இரண்டு இடங்களுக்கும் பறவையான மயில் பூசனை செய்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஊர் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டும் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங்களாகும். 

முன்னதாகச் சொல்லப்பட்ட மயிலை தல வரலாற்றின்படி கயிலையில் ஒரு சமயம் சிவபெருமான் பிரணவம் மற்றும் பஞ்சாட்சரம் குறித்து உபதேசம் செய்த தருணத்தில், அவ்வமயம் அழகிய மயில் ஒன்று அங்கு தோகை விரித்து ஆட, அம்பிகையின் கவனம் அதில் ஈர்க்கப்பட்டு சிதறியது. அரனின் சாபத்திற்கு ஆளாகிய அம்பிகை பூலோகத்தில் தொண்டை நாட்டின்கண் உள்ள மயிலை திருத்தலத்தில் புன்னை மரத்தின் கீழ் மயில் உருக்கொண்டு சிவனை பூஜிக்கும்படி நேரிட்டது. பின்பு, ஈசனின் கருணையால் சாபவிமோசனம் ஏற்பட, அம்பிகை சுயரூபம் பெற, கற்பகாம்பாள், கபாலீசுவரராக உலகிற்கு காட்சியளித்தனர். இரண்டாவதாகக் கூறப்பட்ட மயிலாடுதுறை தலபுராண வரலாற்றின்படி:

சிவபெருமானை மதியாது தக்கன் யாகம், செய்யத் தொடங்கினான். உமையம்மை சிவபெருமான் சொல்லைக் கேளாது தந்தை செய்யும் வேள்விக்குச் சென்றாள். அங்கு தக்கன் தன்னை அவமதித்ததோடு அல்லாமல் அவன் கூறிய நிந்தனை உரைகளையும் கேட்டு உமையம்மை சினம் கொண்டாள். உலகே நடுங்கியது. அப்போது ஓர் மரத்தின் கிளையிலிருந்த மயில் அம்பிகையை சரணாக அடைந்தது. அம்மை மயிலுக்கு "தோகாய், அஞ்சலை' எனக்  கூறி அபயம் அருளினாள். சிவபெருமான் வீரபத்திரரை ஏவி, தக்கன் வேள்வியை அழிக்குமாறு செய்தார். மயிலுக்கு அபயம் அளித்த அம்பிகையை, பூலோகத்தில் காவிரிக்கரையில் மயில் உருக்கொண்டு தவம் செய்து, தன்னை மீண்டும் அடையுமாறு தன் சொல்லை மீறியதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக ஒரு விதமான கட்டளைக்கு பணித்தார். 

அதன் பிரகாரம், அம்பிகை சாப நிவர்த்தி வேண்டி, மயில் ரூபம் கொண்டு மயிலாடுதுறை தலத்தில் வெகு காலம் பூஜை செய்து வந்தாள். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த பெருமான், ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாட, அம்பிகையும் சுயரூபம் பெற, இறைவன் அம்பிகையை ஏற்றருளி திருமணம் புரிந்து கொண்டார். அதனால் இத்தல இறைவன் மாயூரநாதர் என்றும், கௌரி தாண்டவரேசர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிகழ்வு நடைபெற்ற மயிலாடுதுறையில் உள்ள சபைக்கு ஆதிசபை என்றும், இறைவனின் இத்தாண்டவத்திற்கு கௌரிதாண்டவம் எனவும் பெயர் வந்ததாக வரலாறு. இத்தலமும் கௌரி மாயூரம் என்றும் பெயர் பெற்றதாகக் சொல்லப்படுவது உண்டு. மேலும் தகவல்களின்படி, இறைவன் கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஒரு ஐப்பசி 25-ம் நாள் என்றும், திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி 27 -ஆம் நாள் என்றும் அறியப்படுகின்றது.

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சியில் விளங்கிப் பொலிவது மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் புராணப்பெயர் மாயூரம், திருமயிலாடுதுறை. காசிக்கு இணையாகப் போற்றப்படும் தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் சுயம்பு மூர்த்தியாய், மாயூரநாதர் (மயூரநாதர்) எனப்பெயர் கொண்டும், இறைவி அபயாம்பிகை எனப்பெயர் கொண்டும் அருளாட்சி புரிகின்றனர். ஞான சம்பந்தர், அப்பர் பெருமான் பாடல்கள் பெற்ற பதி. காவிரி தென்கரையில் 39-வது தலம். தீர்த்தம்: இடபம், பிரம்ம, அகத்திய, காவேரி. தலமரம்: மா, வன்னி. சுவாமி சந்நிதிக்கு பின் முருகவேள் சந்நிதி அமைந்துள்ளது. அருணகிரிநாதர் பாடல் பெற்றது (இச்சந்நிதி மட்டும் தருமையாதீனத்திற்கு உரியது). 

கந்தர் சஷ்டி விழாவில் மற்ற தலங்களைப் போல் இல்லாமல் இங்கு அம்பிகைக்கு பதில் சுவாமியிடம் முருகப்பெருமான் வேல்வாங்குவது தனிச்சிறப்பு. அகத்திய சந்தன பிள்ளையார், தலையில் அக்னிஜ்வாலையுடன் சனீஸ்வரபகவான், நடராஜர் பாதத்திற்கு அருகில் ஜுரதேவர் போன்று பல சிறப்பு சந்நிதிகளை தன்னகத்தே கொண்டது இந்த ஆலயம். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தல புராணமும், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். நல்லத்துக்குடி கிருஷ்ணய்யர் என்பர் அபயாம்பிகை சதகம் பாடியுள்ளார். "ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல் ஆகுமா?' என்று தொன்று தொட்டு வழங்கப்படும் பழமொழி. இத்தல பெருமையை பறை சாற்றும்.

இவ்வாலயத்தில் தெற்கு பிரகாரத்தில் உள்ள மயிலம்மன் சந்நிதி விசேஷமானது. மயிலுருவம் கொண்ட அம்பிகையின்  மயிலம்மன் திருவுருவம், லிங்கத்தை பூஜிப்பது போல் உள்ளது. இத்திருத்தலத்தில் துலா உற்சவம் அக்டோபர் 18 (ஐப்பசி 1) ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. நவம்பர் 11-ஆம் தேதி மயிலம்மன் பூஜை (அன்று மாலை 6 மணிக்கு மேல் ஆண் மயில், பெண் மயில் பல்லக்கில் வருவதும், இறைவன் மயில் ரூபத்தில் உள்ள அம்பிகைக்கு அருள்புரிந்து சுயரூபம் பெறச் செய்தலும்,  ஐதீக விழாவாக கொண்டாடப் படுகின்றது. நவம்பர் 13 -திருக்கல்யாணம்; நவம்பர் 15 - திருத்தேர்; நவம்பர் 16 -கடைமுக தீர்த்தவாரி (காவிரி இடபதீர்த்தம்); நவம்பர் 17-  (கார்த்திகை 1) முடவன்முழுக்கு.துலாமாதம் என்று கூறப்படும் ஐப்பசி மாதத்தில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால் சகல பாபங்களும் நீங்குவதாகவும், நமது வேண்டுதல்கள் நிறைவேறி வளமான வாழ்வும் பெறலாம் என்கின்றது காவிரி புராணம். புனித நீராடுதலுக்கும்;புண்ணியப் பேறு அடைவதற்கும் இந்த ஐப்பசி விழா நடைபெறும் சமயத்தில் நாமும் மயிலாடுதுறைக்கு ஒருமுறை செல்லலாமே? நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழிக்கு தென்மேற்கே 21 கி.மீ. தூரத்திலும் கும்பகோணத்திற்கு கிழக்கே 32 கி.மீ. தூரத்திலும் உள்ளது இத்தலம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com