முருகன் கோயில்களில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 கச்சியப்ப சிவாச்சாரியாரால் கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற கோயிலாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்லக்கு, ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, யானை வாகனங்களில் அடுத்தடுத்த நாள்களில் உற்சவர் பவனி வரவுள்ளார்.
 வரும் 13ஆம் தேதி கந்தசஷ்டி தீர்த்தவாரியுடன், சூரசம்ஹாரம் உற்சவம் விமரிசையாக நடைபெறவுள்ளது. கோயிலை 108 முறை சுற்றிவந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கொடியேற்றத்தின்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர்.
 வல்லக்கோட்டையில்...
 ஸ்ரீபெரும்புதூர், நவ. 8: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
 ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு 36ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. ஆறு நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளில், மூன்று கால தீப ஆராதனை நடைபெற்றது. உற்சவர் மஞ்சள் சாற்று புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 அதைத் தொடர்ந்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களும் மூலவருக்கு சந்தனக் காப்பு, அபிஷேகம் நடைபெற உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரமும், புதன்கிழமை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. தினமும் ஒவ்வொரு நிற புஷ்ப அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.சிந்துமதி மற்றும் கிராமத்தார், ஆலய நிர்வாகிகள் ஆகியோர் செய்துள்ளனர்.
 திருத்தணி கோயிலில்...
 திருத்தணி, நவ. 8: திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய கந்த சஷ்டி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
 அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 8-ஆம் தேதி) கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா, 14 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகதக் கல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
 தொடர்ந்து, உற்சவ சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 11 மணிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
 நிகழ்ச்சியில், முன்னாள் நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 அதேபோல், திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. காலை 8 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கேபிள் எம்.சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நாளான 13 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 14 -ஆம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
 திருப்போரூர்
 கந்தசுவாமி கோயிலில் ...
 செங்கல்பட்டு, நவ. 8: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
 சூரபத்மனை வதம் செய்த வெற்றி விழாவாக கொண்டாடுப்படுவது சஷ்டி விழா. சூரபத்மனுடன் முருகப் பெருமான் விண்ணில் நின்று போர் புரிந்த தலமாக திருப்போரூர் விளங்குகிறது. இங்குள்ள மூலவர் பனைமரத்தில் சுயம்புவாக தோன்றியது சிறப்பாகும்.
 இந்தக் கோயிலுக்கு ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் முக்கிய விழாவாக கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. இவ்விழா 7 நாள்கள் நடைபெறும். இந்த உற்சவத்தின்போது நாள்தோறும் கந்த சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவதுடன் உற்சவர் வீதியுலாவும் நடைபெறும். விழா நாள்களில் மாலை நேரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, இன்னிசை நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
 இந்நிலையில், இக்கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி கொடிமரத்திற்கு மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அலங்காரமும் உற்வச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும் நடைபெற்றது.
 விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடேசன், உதவி ஆணையர் தக்கார் ரமணி, ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.
 செங்கல்பட்டு கோயில்களில்...
 செங்கல்பட்டு கோயில்களில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
 செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகர் வரசித்தி விநாயகர் கோயில், அண்ணா நகர் எல்லையம்மன் கோயில், அண்ணாநகர் ரத்தின விநாயகர் கோயில், செம்மலை வேல்முருகன் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீர் வியாகர் கோயில், வ.உ.சி தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், சக்தி விநாயகர் கோயில், பெரியநத்தம் கைலாசநாதர்கோயில், இருங்குன்றம் பள்ளி மலை மீதுள்ள பாலமுருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்தர் சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
 கோயில்களில் சஷ்டி விழா நாள்களில் லட்சார்ச்சனை வழிபாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செம்மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறாமல், கந்தர் சஷ்டி விழா திருக்கல்யாண விழாவாக நடைபெறுகிறது. மேலும், கந்தன் திருச்சபை சார்பில் வல்லம் நேரு நகர் திருப்போரூர் கூட்டுச் சாலை அருகே வெங்கடேச வாசுகி திருமண மண்டபத்தில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. வரும் 14ஆம் தேதியன்று முருகன் திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com