திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 13) மாலையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 13) மாலையில் நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபம் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 5ஆம் நாளான திங்கள்கிழமையும் இதே நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கோயிலுக்கு வந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com