அரோகரா கோஷம் விண்ணதிர, கோயில்களில் சூரசம்ஹாரம்

வல்லக்கோட்டை மற்றும் மொளச்சூர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. 
மொளச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு  அலங்காரத்தில்  பக்தர்களுக்கு  காட்சியளித்த  மூலவர்.
மொளச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு  அலங்காரத்தில்  பக்தர்களுக்கு  காட்சியளித்த  மூலவர்.


வல்லக்கோட்டை மற்றும் மொளச்சூர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. 
ஸ்ரீபெரும்புதுôர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில், பழமையான பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு 36ஆவது ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை, மூன்று கால வேளையும் தீப ஆராதனை நடைபெற்றது. உற்சவர் மஞ்சள் சாற்று புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கந்த சஷ்டி விழாவின் 5ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மூலவருக்கு செவ்வாய்க்கிழமை விபூதி, சந்தனம், பால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து, புதன்கிழமையன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 
மொளச்சூர் முருகன் கோயில்: சுங்குவார்சத்திரத்தை அடுத்த மொளச்சூர் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சூரசம்ஹார விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மூலவருக்கு விபூதி, சந்தனம், பால், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மொளச்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலை 108 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
விழா ஏற்பாடுகளை முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர். 
காஞ்சிபுரத்தில்..
குமரகோட்டம் சுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற கோயிலாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 8ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்லக்கு, ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, யானை வாகனங்களில் அடுத்தடுத்த நாள்களில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நாள்தோறும் ராஜவீதிகளில் பவனி வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, காலை சுப்பிரமணியருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. அப்போது முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பக்தர்கள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டபோது, திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி மனமுருகி முருகனை வணங்கி வழிபட்டனர். 
சூரசம்ஹாரம்: அதேபோல், சிவபெருமானை நோக்கி தவமிருந்து, தான் பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்தி முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்திய சூரபத்மன் என்னும் அசுரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சிக்காக, அறநிலையத் துறையினரும், விழாக் குழுவினரும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இவ்விழாவையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சூரசம்ஹார உற்சவத்தைக் காண வாலாஜாபாத், திருப்புலிவனம், திருப்புட்குழி, விஷார், கீழம்பி, சின்னகாஞ்சிபுரம், ஏகனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com