திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!

அண்ணாமலையாரை சென்று தரிசிக்க முடியாதவர்களை சென்னையில் கோயில் கட்டி..
திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!

அண்ணாமலையாரை சென்று தரிசிக்க முடியாதவர்களை சென்னையில் கோயில் கட்டி கும்பிட வைத்தவர் மயிலை சுப்பராயமுதலியார் என்ற பக்தர் ஆகும்.

ஒவ்வொர் ஆண்டும் திருக்கார்த்திகையில் திருவண்ணாமலைக்கும் வைகாசி பிரம்மோற்சவத்திற்கு காஞ்சிபுரமும் சென்று இருந்து தரிசித்து வருவது வழக்கம். அவருக்கு சந்தான பாக்கியம் வாய்க்காத நிலையில் அண்ணாமலை அருணாசலேஸ்வரரிடமும் காஞ்சி வரதரிடமும் அதற்காக நேர்ந்து கொண்டார். கனவில் இறைவன் தோன்றி ஒரு சந்நிதியும் மலையும் அமைத்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து மலையில் தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்றாராம். கனவு கலைந்து எழுந்த சுப்பராய முதலியார், சென்னை செளகார்பேட்டை பள்ளியப்பன் தெரு 15-ஆம் எண்ணுள்ள வீட்டில் காசியிலிருந்து பாணலிங்கம் தருவித்து பிரதிஷ்டை செய்து பரிவார சந்நிதிகள் பிரதிஷ்டை செய்து கட்டுமலை கட்டி அதனில் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அடுத்த ஆண்டு சந்தான ப்ராப்தி உண்டானது.

கை மேல் பலன் தந்த கடவுளின் கருணையை எண்ணி கோயிலுக்கு பின்புறம் உள்ள இடத்தினை வாங்கி அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாளுக்கும் தனித்தனி கோயில்கள் அமைத்து 1765 -ஆம் ஆண்டு நித்தியபூஜை நடக்க கட்டளைககள் ஏற்படுத்தி குடமுழுக்கும் செய்தார். முதலில் கட்டிய கோயில் சின்னக்கோயில் அல்லது அணி அண்ணாமலையார் கோயில் எனவும் பின்னர் எடுத்த கோயில் பெரிய கோயில் எனவும் வழங்கப்படுகிறது.

வில்வத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இக்கோயிலின் கிழக்கு நோக்கிய பிரதான சந்நிதியில் லிங்க வடிவில் அருணாசலேஸ்வரர் காட்சி தருகிறார். பிரதோஷம், மஹா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

சுவாமி சந்நிதியின் இடப்புறம் அருள்மிகு அபீதகுஜாம்பாள் சதுர் புஜத்துடன் நின்ற கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் தெற்கு முகமாக தவழும் புன்னகையுடன் சாந்தமான பாவனையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பெளர்ணமி பகல் வேளையில்சிறப்பு பூஜை, அபிஷேகம், திருவிளக்கு பிரார்த்தனை பூஜையும் பெண்களால் செய்யப்படுகிறது.

நவக்கிரகம், விஜய விநாயகர், காமாட்சியம்மை ஏகாம்பர லிங்கத்தை அணைத்துக் கொண்டிருக்கும் கம்பா நதிக் காட்சி சந்நிதி, அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றோடு வில்வ மரத்தடியில் குடிகொண்டிருக்கும் சுமார் 4 அடி உயரமுள்ள வில்வேஸ்வரரை பக்தர்களே தொட்டு பூஜை செய்கின்றனர்.

ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வலப்புறம் உள்ள அணிஅண்ணாமலையார் சந்நிதி சின்னக்கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி உள்ள மஹிஷாசுரமர்த்தனிக்கு வளர்பிறை அஷ்டமியில் அபிஷேகம் செய்து அம்பாள் நெற்றியில் வெண்ணெய் சாற்றுவது பழக்கத்தில் உள்ளது. உடல் உபாதைகள் நீங்க இப்பிரார்த்தனையை செய்கிறார்கள்.

அதே திருச்சுற்றில் ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் அருள்கிறாள். பில்லி, சூனியம், பிசாசு, பேய் ஆகியவை அண்டாமலிருக்க தேய்பிறை பஞ்சமியில் வாராகி நெற்றியில் வெண்ணெய் சார்த்தி வழிபடுகின்றனர்.

அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத அருள்மிகு வரதராச பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுகின்றது. திருவண்ணாமலையில் நடைபெறுவது போன்று, அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத அருள்மிகு அருணாசலேசுவரருக்கு கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் 11 நாள்கள் நடைபெறுகின்றது.

நவம்பர் மாதம் 14-ஆம் தேதி காலை கொடியேற்றி, 16-ஆம் தேதி காலை அதிகாரநந்தி புறப்பாடும்; 18 -ஆம் தேதி ரிஷப வாகனத்தில் புறப்பாடும்; 20 -ஆம் தேதி காலை திருத்தேர் புறப்பாடும்; 22 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும்; 23 -ஆம் தேதி காலை 5.30 மணிக்கு பரணி தீபமும் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6.00 மணிக்கு கட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்திகளின் வீதி புறப்பாடு உற்சவம் நடைபெறுவது மிகச் சிறப்பாகும் 24.11.2118 அன்று விஷ்ணு தீபம் நடந்து உற்சவம் முடிவு பெறும்.

 தொடர்புக்கு: 94448 94438/ 96296 18567.

 - எஸ் . இராதாமணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com