வலம்புரி சங்கு: வளமான வாழ்வு தரும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

இன்று கார்த்திகை மாத முதல் சோம வாரம்! அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம்
வலம்புரி சங்கு: வளமான வாழ்வு தரும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

இன்று கார்த்திகை மாத முதல் சோம வாரம்! அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள். சென்னை திருமயிலை கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாக்‌ஷிஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய ஸப்த சிவஸ்தலங்களில் மட்டுல்லாது அனைத்து சிவாலயங்களிலும் இன்று சங்காபிஷேகம் செய்கிறார்கள். 

ஜோதிடத்தில் சங்கு

ஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும்.

மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரன் மகாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் அறியமுடிகின்றது. பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.

வலம்புரி சங்கு தோன்றிய கதை

சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அம்சமே சங்கு. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்கு உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரி சங்கு மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லக்மிகடாச்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும். சங்கு ஊதினால் அபசகுனம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.
 
சங்கின் மகத்துவம்

சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறுகின்றது. இது கடலில் விளையும் பொருள். சங்கு பூச்சியின் கூடு. இவற்றில் சிறியது கடுகை ஒத்ததாகவும் பெரியது ஒரு அடிக்கு மேலும் உள்ளன. சங்கானது ஏரி, கடல், ஆறு, குளங்களிலும் வளரும். 

சங்குகளின் வகைகள்

மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு வலம்புரி சங்கு எனப் பல வகைப்படுகிறது. திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள் கையில் இருப்பது மணி சங்கு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமியின் கையில் இருப்பது வைபவ சங்கு. திருக்கண்ணபுரம் ஶ்ரீ செளரிராஜ பெருமாள் கையில் இருப்பது துயிலா சங்கு. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கையில் இருப்பது பாருத சங்கு.

மகாபாரதத்தில் சங்கு

கோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழ்ச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைசாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. 

தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்கக் கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே “பாஞ்சஜன்யம்” என்ற சங்கினை ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

யுதிஷ்டிரர் 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

திருப்பாவையில் சங்கு

ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

ஜாதகத்தில் சந்திரன் தரும் யோகங்கள்

ஜோதிடத்தில் சூரியனையும் சந்திரனையும் ராஜ கிரகங்கள் என சிறப்பித்து போற்றப்படுகிறது. மேலும் சூரியனை ஆத்ம காரகன் மற்றும் பித்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரனை மனோ காரகன் என்றும் மாத்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். 

சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன்.
 
சந்திரனை "சந்திரமா மனஸோ ஜாத:" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்கு காரகன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்குக் காட்சி கொடுப்பவர் ‘சர்வம் சந்திர கலாபிதம்‘ என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி ‘நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?‘ என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. 

சூரியனுக்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பௌர்ணமி அமாவாசை யோகம், பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களைத் தருபவர் சந்திரன்.

நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன். சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும்.

குரு சந்திர யோகம்

சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிக்கரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல், பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சந்திரன் குரு மற்றும் சனியுடன் அசுப சேர்க்கை பெற்று ஏற்படும் யோகம் யாசக யோகம் எனப்படும்.

யாசக யோகம்

லக்னதிற்கு 1-இல் சந்திரன் இருக்க, சனி கேந்திரத்தில் இருக்க, குரு 12-இல் இருக்க யாசக யோகம் உண்டாகும். இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்துத் தான் சாப்பிடுவார்கள். 6, 8 ,12-இல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்துச் சாப்பிடுவார்கள்.

யாசக யோகம் என்பது துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மிக உன்னத யோகமாகும். ஆதி சங்கரர் உலக நன்மைக்காகப் பிச்சை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இல்லற வாசிகளுக்கு இந்த யோகம் சிறப்பல்ல. யாரும் விரும்பமாட்டார்கள்.

சந்திரனால் ஏற்படும் அவயோகங்கள் நீங்கி செல்வ செழிப்பு தரும் பரிகாரங்கள்

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார். கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்துச் சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய சோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது

சந்திரனை ராஜ கிரஹம் என்று கூறுவார்கள். மேலும் செல்வங்களை தரும் மஹா லக்‌ஷ்மியை சந்திர சகோதரி எனக் கூறுவார்கள். எனவே சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு சந்திர சகோதரியான மகாலக்‌ஷ்மியின் அருள் கிட்டி அனைத்துச் செல்வங்களையும் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் நீச கிரஹங்களே செல்வச் செழிப்பை ஏற்படுத்துகின்றது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் சந்திரனின் நீச நிலை அபரிமிதமான செல்வ செழிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் மிகையில்லை.

சந்திர சகோதரியான ஸ்ரீ மஹாலஷ்மியை வெள்ளிக்கிழமைகளில் வலம்புரி சங்கோடு வணங்கிவர லக்‌ஷ்மி கடாக்‌ஷம் பெருகும். 

சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றைப் பூஜிப்பதும் நலம் பல பெருகும். 

செல்வச் செழிப்பு ஏற்பட திங்கள் ஸ்தலமான திருப்பதிக்கு திங்கள் கிழமையில் சென்று பெருமாளையும் சந்திர சகோதரியான அலர்மேல்மங்கை தாயாரையும் சேவிக்க வேண்டும். 
 
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com