திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி விழா 

திருமலையில் கைசிக துவாதசியையொட்டி இன்று காலை வெகு விமரிசையாக ஆஸ்தானம் நடைபெற்றது. 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி விழா 

திருமலையில் கைசிக துவாதசியையொட்டி இன்று காலை வெகு விமரிசையாக ஆஸ்தானம் நடைபெற்றது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி அன்று ஏழுமலையான் கருவறையில் உள்ள உக்ரசீனிவாசமூர்த்தி சூரிய உதயத்துக்கு முன் மாட வீதியில் வலம் வருவது வழக்கம். அதன்படி இன்று கைசிக துவாதசியையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஏழுமலையான் கோயில் கருவறையில் உள்ள உக்ர சீனிவாசமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வந்தார். 

மகா விஷ்ணு ஆஷாட மாதத்தில் ஏகாதசி அன்று நித்திரைக்குச் செல்ல இருப்பதால், கார்த்திகை மாதம் வரக்கூடிய கைசிக துவாதசி அன்று நித்திரையில் இருந்து மகாவிஷ்ணு கண்விழித்து எழக்கூடிய நாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மகா விஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு வேங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

சூரிய உதயத்துக்குப் பின் அவர் கோயிலுக்கு வெளியில் வந்தால் திருமலையில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக நம்பப்படுவதால், சூரிய உதயத்துக்கு முன் அவர் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். அதற்குப் பின், உக்ரசீனிவாசமூர்த்தியை தங்க வாசல் அருகில் அமர வைத்து அவருக்கு தூப, தீப, நைவேத்தியங்கள், பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. அதற்குப் பின் அர்ச்சகர்கள் நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி காண்பித்தனர். 

இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் இருக்கக் கூடிய உக்ர சீனிவாச மூர்த்தி, ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுடன் சூரிய உதயத்திற்கு முன்னதாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆண்டுக்கு ஒருமுறை கைசிக துவாதசி அன்றும் மட்டும் உக்ரசீனிவாசமூர்த்தி கோயிலை விட்டு வெளியில் வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com