விருச்சிக ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமா? 

பொதுவாக ஜென்மத்தில் குரு இருப்பது விரும்பத்தகாத அமைப்பு என்று கூறுவார்கள். ஆனால் குருவானவர்..
விருச்சிக ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமா? 

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் விருச்சிக ராசிக்குத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

விருச்சிகம்: (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

பொதுவாக ஜென்மத்தில் குரு இருப்பது விரும்பத்தகாத அமைப்பு என்று கூறுவார்கள். ஆனால் குருவானவர் இரண்டு மற்றும் 5-ம் வீடுகளுக்கு அதிபதி. ஆகவே ஜென்மத்தில் குரு இருப்பது கெடுதலைச் செய்யாது. இந்த ஆண்டு சுய உழைப்பு மூலம் சம்பாதிப்பார்கள். உடல்நிலை ஆரோக்கியமாகக் காணப்படும்.

குடும்பத்தில் அமைதி சற்றுக் குறையும். சில சமயங்களில் குழப்பமும் இருந்து வரும். பணப்புழக்கமும் மிகச் சரளமாக இல்லை. சமயங்களில் பணப் பற்றாக்குறை இருந்து வரும்.

இளைய  சகோதரத்துடனான உறவில் மாற்றங்கள் தெரியும். சமயங்களில் அது மனதுக்கு உகந்ததாகக் கூட இருக்காது. மனதிற்கு மகிழ்ச்சியற்ற செய்திகள் சில வரக்கூடும். அண்டை, அயல் வீட்டாரிடம் பழகும்போது எச்சரிக்கையுடன் பழகவும். அவர்களுடன் மனக் கசப்பு வர வாய்ப்பு உண்டு.  

வீடு, வாசல் வாங்கவேண்டுமென்ற அவா எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு. கார்த்திகை, மார்கழி, ஆடி, அவணி மாதங்கள் வீடு வாங்குவதற்கு அனுகூலமான மாதங்களாகத் தெரிகின்றன. ஆடியில் வாங்க முடியுமா என சிலர் கேட்கலாம். ஆடியில் கிரகப்பிரவேசம் செய்யாது ஆவணியில் செய்யவும். தாயாருடன் நல் உறவில் இல்லாதவர்களுக்கு மேலே கூறிய மாதங்களில் உறவு சற்று சீராகும்.
சிலர் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவர். பிள்ளைகளுடன் நல்லுறவு ஏற்படும். புத்திர பாக்கியத்திற்காக ஏங்குபவர்களுக்கு இந்த ஆண்டு புத்திர பாக்கியம் கிடைக்க வழியுண்டு.  

ராசியதிபதியாகிய செவ்வாயே 6-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் உடல் நலத்தை சற்றுக் கூடுதலாகப் பாதுகாப்பது அவசியம். உடலில் காயங்கள், ரணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே வாகனத்தில் செல்லும் போதும், கூறிய ஆயுதங்களைக் கையாளும் போதும் சற்று எச்சரிக்கை அவசியம்.

7-ம் இடமான களத்திரஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் திருமணம் ஆகாதோருக்கு திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பஸ்தானத்தில் சனி இருப்பதால் சற்று தடங்கல்கள் ஏற்பட்டுப் பின் திருமணம் ஆகும்.  

பிதுராஜித சொத்துக்களை எதிர்பார்ப்போருக்கு உடனடியாகக் கிடைக்காது. சற்றுத் தாமதமாகும். அதேபோல் ஓய்வு பெற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகைகள் உடனடியாகக் கிடைக்காது. கால தாமதம் ஆகும்.

மூத்த சகோதரத்துடனான உறவில் சற்றுப் பின்னடைவு காணப்படுகிறது. அதேபோல் நெருங்கிய நண்பர்களுடனும் மனக்கசப்பிற்கு இடமுண்டு. கார்த்திகை மார்கழி, தை மாதங்களில் மனக்கசப்பு தீவிரமடைய வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே சற்று விட்டுக் கொடுத்துப்போவது அவர்களுக்கு நல்லது.  

உத்தியோகஸ்தர்களுக்கு: வேலை வேட்டையில் இருப்போருக்கு மாசி, பங்குனி, ஆவணி மாதங்கள் ஆதரவாய் இருக்கின்றன. அதேபோல் பதவி உயர்வு எதிர்பார்ப்போருக்கும் மேலே கூறிய மாதங்கள் அனுகூலமானவை.

வியாபாரிகளுக்கு: வியாபாரிகளுக்குப் பொதுவாக வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், பணப்புழக்கமும் தென்படுகிறது. விற்பனைக்குரிய பண்டங்கள் தேக்கமடையாமல் விரைவில் விற்பனையாகும்.

பரிகாரம்: ராசி அதிபதியான செவ்வாயை வணங்கி வர அனைத்தும் சுபமாகும். திருப்பதிக்குச் சென்று வரத் திருப்பம் உண்டாகும். 

*****

தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைப் படிக்க மதியம் வரை காத்திருங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com